பகுதிநேரச் சமையற்காரராக 16 வயதில் தொடங்கி, பின்னர் உணவகத் துறையில் முழுநேரமாகக் கால்பதித்தார் பிரெஸ்டன் சாமுவேல், 30.
எனினும், சமையலறையில் பணியாற்றிவந்தபோது ‘என் இதயம் உண்மையில் எங்கே உள்ளது என்ற கேள்வி அவருக்குள் அடிக்கடி எழுந்தது.
சிறுவயதிலிருந்து சமூகச் சூழல்களில் ஒருவர் தனியாக இருப்பதைக் கண்டால் அவரிடம் சென்று பேசுவது பிரெஸ்டனின் இயல்பு.
வளர வளர, சிறப்புத் தேவையுடையோர், உடற்குறையுள்ளோர் போன்றோர் சமூகத்தில் இன்னும் முழுமையாக இணைக்கப்படவில்லை என்பதை அவர் உணர்ந்தார். அத்தகையோர் வாழ்வில் மாற்றத்தை உண்டாக்க அவர் விரும்பினார்.
“எனக்கு உணவகத் துறை பிடிக்கும். அதே நேரம் பிறருக்கு உதவவும் பிடிக்கும். சமூகத்துக்குச் சேவையாற்ற வேண்டும் என்ற உணர்வு எழுந்ததும் என்னால் அதைப் புறக்கணிக்க முடியவில்லை,” என்றார் பிரெஸ்டன்.
ஊழியரணித் திறன் தகுதிக் கட்டமைப்பின்கீழ் ‘எச்எம்ஐ’ கழகம் வழங்கிய ஆறு மாத சிகிச்சை உதவியாளர் பயிற்சிக்குச் சென்றபின் அப்பர் தாம்சனிலுள்ள சன்-டேக் (SUN-DAC) பகல்நேர நடவடிக்கை நிலையத்தில் அவர் 2022ல் சேர்ந்தார்.
டவுன் சிண்ட்ரம், மதியிறுக்கம், அறிவுத்திறன் குறைபாடு, பெருமூளை வாதம் போன்றவற்றால் பாதிக்கப்பட்டுள்ள 18 வயதுக்கு மேற்பட்டோர்க்கு அந்நிலையம் சேவையாற்றுகிறது.
சமூகத்திலும் அன்றாட வாழ்விலும் தேவைப்படும் திறன்களை அவர்களுக்குக் கற்றுத் தருகிறார் பிரெஸ்டன்.
தொடர்புடைய செய்திகள்
பேச இயலாதவர்களுக்குக் கற்பிக்கையில் தொடர்பு அட்டைகளையும் தொழில்நுட்ப உத்திகளையும் அவர் பயன்படுத்துகிறார்.
தற்போது மூத்த உதவிப் பயிற்சியதிகாரியாகவும் புதிய பயிற்சியதிகாரிகளுக்கு வழிகாட்டியாகவும் திகழ்கிறார் பிரெஸ்டன்.
தான் செல்லும் ‘நியூ கிரியேஷன்’ தேவாலயத்திலும் சிறப்புத் தேவைகள் கொண்ட சிறுவர்களுக்கெனத் தனிப்பட்ட நடவடிக்கைகளை நடத்த அவர் உதவுகிறார்.
“பராமரிப்பாளர்கள் தேவாலயத் தொழுகையிலிருக்கும்போது சிறுவர்களைச் சுவாரசியமான நடவடிக்கைகளில் ஈடுபடுத்துவோம்,” என்றார் பிரெஸ்டன்.
எஸ்ஜி100 அறக்கட்டளை மூலம் கூடுதல் வாய்ப்புகள்
தன் அனுபவங்கள் மூலம் சமூகத்தில் மேலும் பங்காற்றலாம் என்ற நோக்கத்தில் ‘எஸ்ஜி100 அறக்கட்டளை’யில் சென்ற ஆண்டு பிப்ரவரியில் பார்வையாளராக இணைந்தார் பிரெஸ்டன்.
நாட்டின் வளர்ச்சிக்குத் துணையாகக் கடந்த பத்து ஆண்டுகளாகப் பல உரையாடல்கள், வழிகாட்டித் திட்டங்கள், இளையர் நிகழ்ச்சிகள் போன்றவற்றை எஸ்ஜி100 அறக்கட்டளை ஏற்பாடு செய்துவந்துள்ளது.
இந்த ஆண்டு மார்ச் 22ஆம் தேதி அதன் பத்தாம் ஆண்டுநிறைவு விருந்தில் முன்னாள் அதிபர் ஹலிமா யாக்கோப் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.
அடுத்த 40 ஆண்டுகளில் சிங்கப்பூரை எவ்வாறு முன்னெடுத்துச் செல்வது என்பதை நிகழ்ச்சி மையப்படுத்தியது.
நாட்டுக்கு எப்படிப் பங்காற்றமுடியும் எனச் சிந்திக்கும்படி அடுத்த தலைமுறை இந்தியர்களை ஊக்குவிக்கிறார் பிரெஸ்டன்.
“நாம் சமூகத்தில் பங்காற்றப் பல வாய்ப்புகள் உள்ளன. நமக்கு நாமே வரையறை போட்டுக்கொள்ளக் கூடாது. சிறுபான்மை இனத்தவர் என்பதால் என்னால் இவ்வளவுதான் செய்யமுடியும் என்ற எண்ணத்தை நான் தவிர்க்கிறேன்,” என்றார் பிரெஸ்டன்.
சமூகச் சிந்தனையோடு தொடரும் இலட்சியம்
அடுத்த ஐந்து ஆண்டுகளில் சிறப்புத் தேவையுடையோருக்கான வேலை ஆலோசகராவதே பிரெஸ்டனின் இலக்கு. அதற்காக அவர் தெமாசெக் பலதுறைத் தொழிற்கல்லூரியில் உளவியல் பட்டயப்படிப்பை மேற்கொள்கிறார்.
“சன்-டேக்கில் உள்ள பெரும்பாலோரால் தமது உடற்குறைகள் அல்லது சிறப்புத் தேவைகளினால் வேலையிடத்துக்குச் செல்லமுடிவதில்லை.
“அவர்களுக்கு ஏற்புடைய வகையில் வெளி அமைப்புகளுடன் இணைந்து சன்-டேக் நிலையத்திலேயே செய்யக்கூடிய வேலைவாய்ப்புகளை சன்-டேக் கொண்டுவருகிறது,” எனக் கூறிய பிரெஸ்டன், அவர்களை வெளி வேலையிடங்களுக்கும் அறிமுகப்படுத்த விரும்புகிறார்.
“அவர்களால் வெளியிடங்களில் சுயமாகப் பணியாற்ற இயலாவிட்டாலும் வேலையிடங்கள் பற்றிய ஓர் அறிமுகமாவது அவர்களுக்குக் கிடைக்க வேண்டும் என்பதே என் குறிக்கோள்,” என்றார் பிரெஸ்டன்.
எஸ்ஜி100 அறக்கட்டளையின் நடவடிக்கைகளுக்கும் சிறப்புத் தேவை கொண்டவர்களின் குடும்பங்களை அறிமுகப்படுத்தி அவர்களுடனான சமூகப் பிணைப்பை வலுப்படுத்த அவர் விரும்புகிறார்.
சன்-டேக்கில் தொண்டூழிய வாய்ப்புகளுக்கு sundachq@sundac.com எனும் முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பலாம். எஸ்ஜி100 அறக்கட்டளை பற்றிய மேல்விவரங்களுக்கு https://www.sg100foundation.com/ இணையத்தளத்தை நாடலாம்.

