சிறுவர்களுக்கான தமிழ் நூல்களை உருவாக்கும் ‘கிரியேட் எஸ்ஜி’ தனது எழுத்தாளர்களைச் சிறப்பிக்கும் வகையில் நடத்திய எழுத்தாளர் தினம் செப்டம்பர் 7ஆம் தேதி ஒன்பீப்பிள் எஸ்ஜியில் நடைபெற்றது.
சிறுவர்களுக்கு தமிழ்மொழி அறிவை வளர்க்கும் அதேவேளையில், அவர்களை உற்சாகப்படுத்தும் விதத்தில் தனித்துவம் வாய்ந்த நூல்களை வழங்குவதே கிரியேட் எஸ்ஜியின் நோக்கம்.
ஆதரவற்ற குழந்தைகளுக்கு நிதி திரட்டும் நோக்கில், சிங்கப்பூரில் படிக்கும் சிறுவர்களுக்குப் பல தமிழ் நூல்களை உருவாக்கி வருகிறது கிரியேட் எஸ்ஜி.
‘அன்பான அ’, ‘ஆத்திரம் கொள்ளும் ஆ’, ‘இசைக்கும் இ’, ‘ஈர்க்கும் ஈ’, ‘உணர்வுகள் சந்திக்கும் உ’, ‘ஊர் சுற்றும் ஊ’ என உயிர் எழுத்து வரிசையில் நூல்களைத் தயாரித்துள்ளது இந்தச் சமூக நிறுவனம்.
சிங்கப்பூரில் பெருகி வரும் தமிழ்மொழிப் பாட வளங்களைப் பற்றிய சிறப்புக் கலந்துரையாடல், சிறுவர்களுக்கு விளையாட்டுகள்மூலம் கதை சொல்லுதல் உள்ளிட்ட பல நிகழ்ச்சிகள் கிரியேட் எஸ்ஜி ஏற்பாடு செய்த எழுத்தாளர் தினத்தில் நடந்தேறியது.
தமிழ்ப் பாட வளங்களின் முக்கியத்துவம் பற்றி தமிழ் முரசு செய்தியாளரும் ‘இசைக்கும் இ’ , ‘ஈர்க்கும் ஈ’ ஆகிய சிறுவர் நூல்களின் ஆசிரியருமான கீர்த்திகா ரவீந்திரன், தொடக்கப்பள்ளி தமிழ் ஆசிரியர் சங்கீதா, தமிழ் ஆசிரியரும் ‘உணர்வுகள் சந்திக்கும் உ’, ‘ஊர் சுற்றும் ஊ’ ஆகிய நூல்களின் எழுத்தாளருமான கனகேஸ்வரி ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
கலந்துரையாடலின் தொடக்கத்தில், தமிழ்ப் பாட வளங்களின் தேவை பற்றியும், அதன் மூலம் சிறுவர்களிடையே தமிழ்மொழிப் பண்பாட்டைச் சொல்லித்தருவது குறித்தும் அவர்கள் பகிர்ந்துகொண்டனர்.
கலந்துரையாடலை வழிநடத்திய கிரியேட் எஸ்ஜியின் தலைமை நிர்வாக அதிகாரியான தேவி விஜயன், அனைத்துத் துறைகளிலும் தமிழ்மொழி அறிந்தோரின் தேவை இருந்து கொண்டே இருக்கும் என்றும், அதன்மேல் ஆர்வமும் பற்றும் அவசியம் இருக்க வேண்டும் என்றும் எடுத்துரைத்தார்.
“தமிழ்மொழிப் பாட வளங்களில், மாணவர்களுடனான தொடர்புத்தன்மை மிக அவசியம். இதுதான் சிறுவர்களிடையே ஆர்வத்தைத் தூண்டும்,” என்றார் கலந்துரையாடலில் பங்கேற்ற சங்கீதா.
“இத்தகைய நிகழ்ச்சிகள் எங்களுக்குச் சிறுவர்களிடையே தமிழ் மொழியில் ஆர்வத்தை ஏற்படுத்துவதை பெற்றோருக்கு எளிதாக்குகிறது,” என்று கூறினார் நிகழ்ச்சியில் பங்குபெற்ற விக்னேஷ்.