தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

‘மரணம் என்பது உடலுக்குத்தான்; எங்கள் நட்புக்கு அல்ல’

5 mins read
ரத்தன் டாடா மறைவு குறித்து நண்பர்கள் உருக்கம் 
bbb57557-7ffb-439f-b684-b4c9e9d34202
2014ஆம் ஆண்டில் 23 வயதாக இருந்த சமீர் திரு ரத்தன் டாடாவுடன் எடுத்துக்கொண்ட படம். - படம்: சமீர் அனிஸ் ராவத்
multi-img1 of 2

இந்தியத் தொழிலதிபர் ரத்தன் டாடாவின் மறைவு அவரது உடலுக்குத்தான், அவரது நினைவுகளுக்கு அல்ல என்று அவருடைய நண்பர்கள் தெரிவித்துள்ளனர்.

வெற்றிகரமான தொழிலதிபர், கனிவுமிக்கவர், கொடையாளர் என்று அனைத்துலக அளவில் போற்றப்படும் திரு டாடாவின் மறைவிற்கு இந்தியா தொடங்கி இஸ்ரேல் வரையில் நினைவஞ்சலி செலுத்தப்பட்டது.

இந்நிலையில், மறைந்த திரு டாடாவுடன் நேரடியாகப் பழகும் வாய்ப்பைப் பெற்றிருந்தவர்கள் அவருடனான தங்கள் நினைவுகளைப் பகிர்ந்துகொண்டனர்.

திரு டாடாவுடனான நட்பு எப்படித் தொடங்கியது என்று விவரித்தார் இளம் இந்திய விமானியான சமீர் அனிஸ் ராவத், 33. 

“2013ஆம் ஆண்டு, அலிபாக்கில் கடற்கரையோரமாக மாதிரி விமானத்தை இயக்கிக்கொண்டிருந்த நான் பல்வேறு முயற்சிகளுக்குப் பிறகு அதனை வெற்றிகரமாக இயக்கியதைப் பார்த்து எனக்குப் பாராட்டு தெரிவித்தார் ஒரு பெரியவர்.

“அவர்தான்  திரு டாடா. அவர் என்னை உற்சாகப்படுத்தினார்; என் கைப்பேசி எண்ணைக் குறித்துக்கொண்டார். நானும் என் வீட்டிற்குச் சென்றுவிட்டேன். அன்றிரவு ‘மீண்டும் சந்திப்போம் -  இப்படிக்கு ரத்தன் டாடா’ என்றொரு குறுஞ்செய்தி வந்தது.

“அப்போது எனக்கு 23 வயது. அவருக்கு 76 வயதிருக்கும். இவ்வளவு பெரிய செல்வந்தர் என்னை நினைவில் வைத்துச் செய்தி அனுப்புகிறாரே என்று வியந்தேன். ஆனாலும், எங்கள் வயதைக் கருத்தில்கொண்டு நான் மூப்படையும்வரை வெகுகாலம் என் நண்பர் என்னுடன் பயணம் செய்யமாட்டாரே என்ற கலக்கம் இருந்தது. 

“எங்கள் நட்புக்கு விலை, பிரிவு என்று தெரிந்தும் அந்த மாமனிதருடனான நட்பைத் தொடர முடிவுசெய்தேன்,” என்று துயரத்துடன் கூறினார் திரு சமீர்.

“திரு டாடாவின் பண்ணை வீடு அலிபாக்கில் உள்ளது. எனவே, அங்கு அவர் செல்லும்போதெல்லாம் பலமுறை அவரைச் சந்தித்துப் பழகும் வாய்ப்பு எனக்குக் கிட்டியது,” என்று நினைவுகூர்ந்தார் திரு சமீர்.

‘பணத்தை அல்ல, மனத்தை மதிப்பவர்’ 

ஒருமுறை அவருடனான சந்திப்பின்போது விமானம் ஒன்று நின்றிருக்கக் கண்டேன். அருகில் சென்று அதனைத் தொட்டுப் பார்க்கலாமா என்று கேட்டதற்கு, என்னையும் தம்முடன் அந்த விமானத்திலேயே பறக்கச் செய்தார் திரு டாடா. 

தகுதிநிலை பார்த்துப் பழகாத ஓர் எளிய மனிதரைப் பார்ப்பது அரிது என்ற சமீர், தாம் அவரை ‘திரு ரத்தன்’ என்று பெயர் சொல்லித்தான் அழைப்பது வழக்கம் என்று கூறினார். 

“என் முதல் விமானப் பயணம் அவருடன்தான். முதல் ‘ஃபெராரி சொகுசு கார் பயணமும் அவருடன்தான். தம் பணியாளர்களிடம் அவர் கனிவுடன்தான் உதவி கேட்பார்; அதிகாரத் தோரணையைப் பார்க்கவே முடியாது,” என்ற சமீர், திரு டாடாவுடனான தமது இறுதிச் சந்திப்பு குறித்தும் விவரித்தார்.

விமானியாகப் பணிபுரியத் தொடங்கியவுடன் பணிச்சூழல் காரணமாக திரு டாடாவை நேரடியாகச் சந்திக்கும் தருணங்கள் குறையத் தொடங்கின. அவரை நான் கடைசியாக இவ்வாண்டு ஏப்ரல் 14ஆம் தேதி சந்தித்தேன். ‘கேப்டன்’ ஆகப் பதவி உயர்வு பெற்றதைச் சொல்லி அவரிடம் வாழ்த்து பெற இனிப்புகளுடன் சென்றேன்.

அதுதான் கடைசிச் சந்திப்பாக இருக்குமோ என்று தம் மனத்தில் தோன்றியதாகக் குறிப்பிட்டார் சமீர். திரு ரத்தன் மறைந்த செய்தியைக் கேட்டவுடன் பலமணி நேரம் பயணம் செய்து தம் நண்பருக்கு இறுதி மரியாதை செலுத்தினார் அவர்.  

“ஒருமுறை அவரை அமரவைத்து அவருக்காக விமானம் இயக்கவேண்டும் என்ற எனது ஆசை நிறைவேறாமலேயே போய்விட்டது. அவர் மறைந்திருக்கலாம்; ஆனால், எங்கள் நட்பின் நினைவுகளுக்கு முடிவு இல்லை,” என்றார் திரு சமீர்.

நினைவில் இருக்கும் எம்ஆர்டி ரயில் பயணம் 

திரு ரத்தன் டாடாவை முன்னணித் தொழிலதிபராக இல்லாமல் சிறந்த மனிதராகவே தாம் கருதுவதாகக் கூறினார் சிங்கப்பூரரான திரு மார்க் சோங், 45.

2003ஆம் ஆண்டு சிங்கப்பூரில் முதன்முதலாகத் திரு டாடாவைச் சந்திக்க நேர்ந்தது என்ற திரு மார்க், குறிப்பாக அப்போதைய காலகட்டத்தில் அவருடன் எம்ஆர்டி ரயிலில் பயணம் செய்த அனுபவங்களை நினைவுகூர்ந்தார்.

திரு ரத்தன் டாடாவுடன் திரு மார்க் சோங்.
திரு ரத்தன் டாடாவுடன் திரு மார்க் சோங். - படம்: மார்க் சோங்

“எங்கள் இருவருக்கும் இடையிலான வயது வித்தியாசம் எங்கள் நட்பிற்குத் தடையாக இருந்ததே இல்லை. அவரின் அபார நகைச்சுவை உணர்வு, நேர்த்தியாகப் பல குரலில் பேசும் பாங்கு, குழந்தைத்தனமான கலந்துரையாடல்கள் இவையெல்லாம் அவரை இளையர் என்றே நினைக்கத் தூண்டும்.

“குறிப்பாக 2003-2008 காலகட்டத்தில் சிலமுறை அவருடன் ஒன்றாக எம்ஆர்டி ரயிலில் சென்றதுண்டு. சிட்டிஹால் முதல் ஆர்ச்சர்ட் வரை செல்வோம். சில நேரங்களில் மக்கள் அவரை அடையாளம் கண்டு கொள்வர். ஒருசிலர் மரியாதை நிமித்தமாக அவர் பாதம் தொட்டு ஆசி பெறுவதையும் பார்த்திருக்கிறேன். ஆடம்பரம் இல்லாமல் அனைவருடனும் எளிமையாகப் பழகும் விதம் என்னை மிகவும் கவர்ந்தது,” என்றார் திரு மார்க்.

சில ஆண்டுகள் மாமரங்கள் காய்க்கும் பருவத்தில் திரு டாடா, தமக்கு இந்தியாவிலிருந்து மாங்கனிகள் அனுப்பியது உண்டு என்று குறிப்பிட்ட திரு மார்க், தாம் இந்தியா செல்லும்போதெல்லாம் திரு டாடாவின் மும்பை இல்லத்தில் தங்குவது வழக்கம் என்றும் சொன்னார்.

“2023ஆம் ஆண்டு, கடைசியாக அவரை மும்பையில் சந்தித்தேன். அந்தச் சந்திப்பு மூன்று நாள்கள் நீடித்தது. ஒவ்வொரு நாளும் பலமணி நேரம் உரையாடி மகிழ்ந்தோம். 

“நன்னெறியுடன் தொழில் செய்வது எப்படி என்று அவர் வாழ்ந்துகாட்டிய விதம், எப்போதும் நான் விரும்பும் நற்குணமாக என்னோடு இருக்கும். வறியோருக்கும் பிணியுற்றோருக்கும் செய்த அறக்கொடை நிச்சயம் டாடாவின் புகழ் பேசும்,” என்றார் திரு மார்க்.

திரு டாடாவின் நல்லுடல் உடனடியாகத் தகனம் செய்யப்பட்டுவிட்டதால் அவருக்கு இறுதியஞ்சலி செலுத்த முடியவில்லை என்று வருத்தப்பட்ட திரு மார்க், விரைவில் இந்தியா சென்று தம் நண்பருக்கு நினைவஞ்சலி செலுத்தப்போவதாகவும் கூறினார்.

பணிவின் உறைவிடம் டாடா 

அனைத்துலக அளவில் செல்வாக்கு மிக்கவராக இருந்தாலும் அவர் கொண்டிருந்த பணிவு தம்மை மிகவும் ஈர்த்ததாகக் கூறினார் சீக்கியர் ஆலோசனை வாரியத் தலைவரும் கூட்டாண்மை விவகார ஆலோசகருமான திரு மல்மிந்தர்ஜித் சிங். 

திரு ரத்தன் டாடாவுடன் திரு மல்மிந்தர்ஜித் சிங்.
திரு ரத்தன் டாடாவுடன் திரு மல்மிந்தர்ஜித் சிங். - படம்: மல்மிந்தர்ஜித் சிங்

“சிங்கப்பூர் நிர்வாகப் பல்கலைக்கழகத்தின் சமூகத் தலைமைத்துவக் கழகத் தலைவராக டாடா இருந்தபோது நான் அப்பிரிவின் பதிப்பாசிரியராக இருந்த வேளையில் எங்களுக்குள் நட்பு மலர்ந்தது.

“நான் மூன்றாம் தலைமுறைச் சிங்கப்பூரர், எனது முன்னோர் 1910ஆம் ஆண்டு இங்கு வந்தனர் என்று சொன்னபோது, தமது முன்னோரும் குடியேறிகள்தாம் என்று குறிப்பிட்ட திரு டாடா, நாம் நம் நாட்டிற்குப் பங்காற்றிட வேண்டும் என்றதோடு, அதன் முக்கியத்துவம் குறித்தும் விளக்கினார். அந்த நற்பண்பு இன்றும் என் மனத்தில் நிலைத்திருக்கிறது,” என்றார் அவர். 

வெற்றிகரமான தொழிலதிபராகத் திகழ்ந்த அதேவேளையில், அன்பாகவும் பரிவுடனும் இருக்க முடியும் என்று வாழ்ந்துகாட்டிய திரு டாடாவின் மாண்பு, மற்றவர்களுக்கு அவர் விட்டுச்செல்லும் வாழ்வியல் சாசனம் என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார் திரு சிங்.

அவருடன் ஒன்றாக எம்ஆர்டி ரயிலில் சென்றதுண்டு. சிட்டிஹால் முதல் ஆர்ச்சர்ட் வரை செல்வோம். சில நேரங்களில் மக்கள் அவரை அடையாளம் கண்டு கொள்வர். ஒருசிலர் மரியாதை நிமித்தமாக அவர் பாதம் தொட்டு ஆசி பெறுவதையும் பார்த்திருக்கிறேன். ஆடம்பரம் இல்லாமல் அவர் அனைவருடனும் எளிமையாகப் பழகும் விதம் என்னை மிகவும் கவர்ந்தது.
திரு மார்க் சோங்
குறிப்புச் சொற்கள்