அர்ப்பணிப்புமிக்க அலகு குத்தும் சேவை

அர்ப்பணிப்புமிக்க அலகு குத்தும் சேவை

3 mins read
aed2b399-39a4-41f9-aee7-99418019adbf
அலகு குத்தும் பணியில் ஈடுபட்டிருக்கும் பெட்ரோலிய ஆய்வாளர் தினே‌ஷ் ஞானசேகரன், 40. - படம்: த.கவி

தைப்பூசத் திருநாளின்போது நேர்த்திக்கடன் செலுத்தும் பக்தர்கள் தங்கள் உடலில் அலகு, வேல், சங்கிலிகளைக் குத்திக்கொண்டு நடப்பதைக் காண்பது பலருக்கும் மெய்சிலிர்க்க வைக்கும் காட்சியாக இருக்கக்கூடும்.

ஆனால், இந்தச் செயலை நடைமுறைக்குக் கொண்டுவருபவர்களுக்கு இது, கவனக் குவிப்பு தேவைப்படும், ஒழுக்கநெறி சார்ந்த சேவையும் இறைநம்பிக்கை மிகுந்த வேலையுமாகும்.

40 வயது பெட்ரோலிய ஆய்வாளர் தினே‌ஷ் ஞானசேகரனுக்கு தைப்பூசம் என்பது ஒரு திருநாள் என்பதற்கும் அப்பால், அர்ப்பணிப்புமிக்க ஒரு சேவை தினமாகும். தொழில்நுட்பத் துல்லியமும் ஆழ்ந்த ஆன்மிக ஈடுபாடும் தேவைப்படும் அலகு குத்தும் பணியை அவர் கடந்த இருபது ஆண்டுகளுக்கும் மேலாகச் செய்துவருகிறார்.

பஜனை பாடுதல், விழா ஏற்பாடுகளில் பெரியவர்களுக்கு உதவுதல் என 14 வயதில் அவரது ஆன்மிகப் பயணம் தொடங்கியது. எதிர்பாராத விதமாகத்தான் அலகு குத்தும் பணியில் ஈடுபடத் தொடங்கினார்.

ஒருமுறை தமது நண்பருக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அலகு குத்துபவர் வராததால், தினேஷ் அந்தப் பொறுப்பை ஏற்க நேரிட்டது. முதலில் பதற்றமாக இருந்தாலும், அலகு குத்துபவர் முழுமையான தன்னம்பிக்கையை வெளிப்படுத்த வேண்டும் என்பதை அவர் அத்தருணத்தில் உணர்ந்தார்.

“நமக்குத் தன்னம்பிக்கை இல்லையென்றால், காவடி எடுப்பவரின் நம்பிக்கையும் தளர்ந்துவிடும்,” என்றார் அவர்.

அலகு குத்தும் பணியில் ஈடுபட்டிருக்கும் பெட்ரோலிய ஆய்வாளர் தினே‌ஷ் ஞானசேகரன், 40.
அலகு குத்தும் பணியில் ஈடுபட்டிருக்கும் பெட்ரோலிய ஆய்வாளர் தினே‌ஷ் ஞானசேகரன், 40. - படம்: த.கவி

காலப்போக்கில், தினேஷ் தமது செயல்முறையை ஒரு சீரான ஒழுங்குமுறையாக அமைத்துக்கொண்டார். பக்தர் எத்தகைய நேர்த்திக்கடனைச் செலுத்தவிருக்கிறார் என்பதை அறிந்துகொள்வதிலிருந்து இது தொடங்குகிறது. நெற்றியில் குத்தும் சிறிய வேல், நாக்கு அலகு, முள்ளுக் காவடி அல்லது ஒரு குழுவே இணைந்து இழுக்க வேண்டிய ரதம் என ஒவ்வொன்றுக்கும் தேவையான ஏற்பாடுகள் பெரிதும் மாறுபடும்.

பாதுகாப்பைக் கடைப்பிடிப்பதில் தினேஷ் மிகுந்த அக்கறை காட்டுகிறார். பக்தர்கள் பெரும்பாலும் தங்கள் அலகுகள், வேல்களை ஓராண்டுக்காவது சேமித்து மீண்டும் பயன்படுத்துவதால், அவை துருப்பிடித்துள்ளனவா அல்லது மழுங்கிவிட்டனவா என்று ஒவ்வொன்றையும் உன்னிப்பாகப் பரிசோதிப்பது தினேஷின் வழக்கம்.

“ஊசி மழுங்கியிருந்தால் தோலுக்குள் அதைக் குத்த முடியாது. அதனால் தேவையற்ற வலி ஏற்படக்கூடும்,” என்று அவர் குறிப்பிட்டார்.

பயன்படுத்தும் பொருள்களைச் சுத்தம் செய்யும் முறை மிகவும் முக்கியம் என்றார் தினே‌ஷ். ஊசிகள் கிருமிநாசினியுடன் சுடுநீரில் கழுவப்பட்டு, பின்னர் மஞ்சள், திருநீறு பூசப்படுவது வழக்கம். பக்தர்களே சொந்தமாக இவற்றையெல்லாம் செய்து அலகுகளைக் கொண்டுவருவார்கள். இந்த முறையான தயாரிப்புக்குப் பின்னர் தினே‌ஷின் அலகு குத்தும் பணி தொடங்கும்.

அலகு குத்தும் பணியில் ஈடுபட்டிருக்கும் பெட்ரோலிய ஆய்வாளர் தினே‌ஷ் ஞானசேகரன், 40.
அலகு குத்தும் பணியில் ஈடுபட்டிருக்கும் பெட்ரோலிய ஆய்வாளர் தினே‌ஷ் ஞானசேகரன், 40. - படம்: த.கவி

ஒரு பக்தர் அவரது நேர்த்திக்கடனை நிறைவேற்றுவதைப் பார்ப்பதில் கிடைக்கும் மனநிறைவையும், அலகுகளைக் கழற்றியபின் அவர்கள் கூறும் நன்றி வார்த்தையையும் தனக்கான ஊதியமாக அவர் கருதுகிறார்.

தினேஷின் குடும்பத்தினரும் அவரது இந்தச் சேவை வாழ்க்கையை ஆதரிக்கின்றனர். காலப்போக்கில், முறையே 10, 7 வயதுடைய தமது மகன்கள் இருவரும் தங்கள் தந்தை அர்த்தமுள்ள ஒன்றைச் செய்கிறார் என்று புரிந்துகொண்டதாக அவர் கூறினார்.

தமது வழியைப் பின்பற்ற ஆர்வமாக உள்ள மகன்களுக்குத் தைப்பூச விழாவை ஒரு வாழ்வியல் பாடமாக அவர் பயன்படுத்துகிறார். காவடி எடுப்பதற்குத் தேவைப்படும் ஒழுக்கம் வாழ்க்கைக்குத் தேவையான ஒன்று என்பது அவரது நம்பிக்கை.

“காவடிச் சேவை மனக்கட்டுப்பாட்டை கற்றுக்கொடுக்கிறது. சிதறாத கவனம் கைவசமானால் எதையும் எதிர்கொள்ளலாம்,” என்றார் தினேஷ்.

இந்தக் கலையைக் கற்றுக்கொள்ள விரும்பும் இளையர்கள், மூத்தவர்களின் செயல்முறைகளையும் பாடங்களையும் உற்றுநோக்கவும், கேள்விகள் கேட்கவும், ஒருபோதும் அவசரப்படமால் செயல்படவும் வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

“இத்தொழிலில் பொறுமை மிகவும் முக்கியம். இறைவனின் அருளால் எல்லாம் நல்லபடியாக நடக்கும் என்ற நம்பிக்கையைத் தவறவிடாதீர்கள்,” என்று தினே‌ஷ் கேட்டுக்கொண்டார்.

குறிப்புச் சொற்கள்