விநியோகப் பணியின்போது ஒருமுறை கனமழையில் மாட்டிக்கொண்டார் ‘லாலாமூவ்’ ஓட்டுநர் ஷஃப்ரினா முகமது, 38.
“என்னால் வெளியேகூட பார்க்கமுடியாத அளவுக்குக் கனமழை. என்னிடம் மழையங்கியும் இல்லை. ஆனால், பொருளைக் குறிப்பிட்ட நேரத்துக்குள் விநியோகிக்கவேண்டும்.
“பொருளைப் பெற்றுக்கொண்ட மலாய் குடும்பத்தினர் என்னை வீட்டினுள் வரவேற்று துண்டு, நீர்ப்புட்டியுடன் $10 அன்பளிப்பும் தந்தார்கள். அதனை என்றுமே என்னால் மறக்க முடியாது,” என்றார் ஷஃப்ரினா.
‘லாலாமூவ்’ ஓட்டுநராகச் சேர்ந்தபின் 2020ல் புதிய மோட்டார்சைக்கிள் வாங்கிய ஷஃப்ரினா, அதை வாங்கிய ஒரு மாதத்திலேயே விபத்துக்குள்ளாகினார். “அதனால் சில ஆண்டுகள் என்னால் பணிக்குச் செல்லமுடியவில்லை. அண்மையில்தான் மீண்டும் ‘லாலாமூவ்’ பணியைத் தொடர்ந்தேன்,” என்றார் ஷஃப்ரினா.
ஷஃப்ரினா தற்போது மற்றொரு முழுநேர வேலையுடன் விநியோகத்தைப் பகுதிநேரமாகச் செய்கிறார். விநியோகம் மூலம் கிடைக்கும் வருமானத்தைக் கொண்டு தன் தாயாரையும் தங்கையையும் அவர் ஆதரிக்கிறார்.
“பல இடங்களுக்குச் செல்வதால் களைப்பாக இருக்கும். யாரிடமும் பேசத் தோன்றாது. ஆனால், வாடிக்கையாளர்களிடம் பொருளைக் கொடுக்கும்போது புன்சிரிப்புடன்தான் கொடுக்கவேண்டும்,” என்றார் அவர்.
ஷஃப்ரினா போன்ற ‘லாலாமூவ்’ விநியோக ஊழியர்களுக்குத் தீபாவளித் திருநாள் உணர்வை எடுத்துச் செல்ல, லாலாமூவ், தேசிய விநியோக நாயகர்கள் சங்கம் (என்டிசிஏ), லிஷா எனப்படும் லிட்டில் இந்தியா வர்த்தகர், மரபுடைமைச் சங்கமும் இணைந்து தீபாவளி விநியோகம் ஒன்றைத் திங்கட்கிழமை (அக்டோபர் 13) தொடங்கின.
பற்றுச்சீட்டுகள், முறுக்கு, தீபங்கள், தட்டு போன்றவற்றைக் கொண்ட அன்பளிப்புப் பைகளை விநியோக ஊழியர்கள் 3, கேம்பெல் லேன் என்ற முகவரியில் பெற்றுக்கொண்டனர்.
“சிங்கப்பூர் முழுவதும் அன்றாடம் புன்சிரிப்பை விநியோகிக்க உதவும் லாலாமூவ் ஓட்டுநர்களுக்கு நன்றிகூறவே இதை ஏற்பாடுசெய்கிறோம்.
“தீபாவளி போன்ற பண்டிகைகள் நமக்குச் சமூகம், ஒன்றிணைப்பின் அவசியத்தை நினைவுகூர்கின்றன. நம் ஓட்டுநர் பங்காளிகளின் அயரா உழைப்பை அங்கீகரித்து, இப்பண்டிகையின் மகிழ்ச்சியை அவர்களுடன் பகிர்வதில் பெருமைப்படுகிறோம்,” என்றார் லாலாமூவ் சிங்கப்பூர் நிர்வாக இயக்குநர் அலெக்ஸ் லின்.
“விநியோக ஊழியர்கள் மழை, வெயில், பொது விடுமுறை பாராது பணியாற்றுபவர்கள். இந்தத் தீபாவளியன்று அவர்களைச் சிறப்பிக்க விரும்புகிறோம். கொடுப்பதிலுள்ள மகிழ்ச்சி வேறெதிலும் கிடையாது,” என்றார் ‘என்டிசிஏ’ தொழில்துறை உறவுகள் அதிகாரி நகுலன் தினகரன்.
“விநியோக ஊழியர்களுக்குக் குரல்கொடுக்க 2020ல் என்டிசிஏ அமைக்கப்பட்டது. வெவ்வேறு நிறுவனங்களுடன் பண்டிகைக்காலங்களில் நாங்கள் இணைமுயற்சிகள் மேற்கொள்கிறோம்,” என்றார் ‘என்டிசிஏ’ நிர்வாகச் செயலாளர் ஆண்டி ஆங். ‘என்டிசிஏ’ என்பது தேசியத் தொழிற்சங்கக் காங்கிரஸ் (என்டியுசி) உடன் தொடர்புடைய சங்கமாகும்.
சவால்களைக் காட்டிலும் மனநிறைவு
“சில வேளையில் நாம் செல்லும்போது சமயத்தில் சம்பந்தப்பட்டவர்கள் வீட்டில் இருக்கமாட்டார்கள். அல்லது போக்குவரத்து நெரிசலால் எங்களுக்குத் தாமதமாகக்கூடும்.
“விநியோகிக்கும்போது சில வீடுகளில் குழந்தைகள் இருக்கும். அவற்றைக் காணும்போது மகிழ்ச்சியாக இருக்கும்; எந்தவொரு மன உளைச்சல் இருந்தாலும் பறந்துபோய்விடும்,” என்றார் ‘லாலாமூவ்’ ஓட்டுநர் அலெக்ஸ்.
இந்த வேலையை முழுமனத்தோடு செய்வதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார். “பொருளை வாங்கியவர் எவ்வளவு ஆசைப்பட்டு, சிரமப்பட்டு வாங்கியிருப்பார் என்பதை நினைவுகூர்ந்து அதைப் பாதுகாப்பாக அவரிடம் கொண்டுசேர்ப்பதே எங்கள் பணி,” என்றார் அலெக்ஸ்.
“சில சமயம் நாம் வரும்போது பொருள் இன்னும் தயார் நிலையில் இருக்காது; வாடிக்கையாளர்கள் தாமதப்படுத்துவார்கள்,” என்றார் ஓட்டுநர் ஷா.
“சில சமயம் வாடிக்கையாளர் செயலியில் உட்புகுத்தும் பொருள்களின் எடை ஒன்று; ஆனால் நேரில் வந்து பார்த்தால் அதிகமாக இருக்கும். தூரமாக இருக்கும் இடங்களுக்கும் செல்ல வேண்டும்,” என்றார் ஓட்டுநர் ராஜா. தான் ‘லாலாமூவ்’ ஸ்டிக்கர் வைத்துள்ளதால் அதிக வேலைகள் கிடைப்பதாக அவர் கூறினார்.
விநியோகத் துறையில் ஊழியர்கள் அதிகம் உழைப்பதாகவும் அதற்கேற்ப அத்துறையில் வருமானங்கள் உயர வேண்டும் என்றும் சிலர் கூறினர்; அப்போது புதிய ஓட்டுநர்களையும் ஈர்க்க முடியும் என அவர்கள் கூறினர்.
ஒரு கதவு மூடினால் மறுகதவு திறக்கும்
கடந்த ஒரு மாதமாக ‘லாலாமூவ்’ ஓட்டுநராகப் பணியாற்றிவருகிறார் சங்கீதா, 36. அவருடைய உறவினர்தான் அவரை இந்த வேலைக்கு அறிமுகப்படுத்தினார். முன்பு மனிதவளத் துறையில் பணியாற்றிய அவர், ஆட்குறைப்பினால் வேறு வேலையை நாடவேண்டிய அவசியம் எழுந்தது.
“பெரும்பாலும் ஆண்களே செய்யும் வேலையாக இது இருந்தாலும், எனக்கு வாகனம் ஓட்டுவது பிடித்துள்ளது; செய்வதற்கு வசதியாக இருக்கிறது,” என்றார் சங்கீதா. ஆயினும், தன் வாகனத்துக்கான வாடகையையும் கட்டவேண்டியுள்ளது ஒரு சவால்தான் என்கிறார் அவர்.
தீபாவளியன்றும் தொடரும் பணி
தீபாவளியன்றும் விநியோகம் செய்யவுள்ளதாகக் கூறினார், பத்து ஆண்டுகளாக விநியோகித்துவரும் ஜஸ்டின், 43.
“ஆனால் எவ்வளவு விரைவாக முடியுமோ வேலையை முடித்துவிட்டு வீட்டுக்கு வந்து கொண்டாடுவேன். ஓட்டுநர்களுக்கு வாய்ப்பளிக்கும் வகையில் இந்தத் தீபாவளி விநியோகம் அமைவது மிகவும் பாராட்டத்தக்கது,” என்று அவர் சொன்னார்.
பொறுமை அவசியம்
“பொருள் இன்னும் வந்து சேரவில்லையெனில் வாடிக்கையாளர்கள் சற்று பொறுமையாக இருக்கவேண்டும். ஏனெனில், ஓட்டுநருக்குத்தான் அவரவர் சவால்கள் தெரியும். மழையோ வெயிலோ அவர்தான் விநியோகிக்கிறார். அதனால், உடனுக்குடன் அழைப்பதைத் தவிர்க்கலாம்,” என்றார் ஷஃப்ரினா.