அனைவரையும் உள்ளடக்கிய பண்டிகைக் காலத்தை உறுதிசெய்யும் நோக்கில் 150 பின் தங்கிய குடும்பங்களுக்குத் தேவையான உணவு, உபயோகப் பொருள்களை ஹவ் ரென் ஹவ் ஷி அமைப்பு வழங்கியது.
‘ப்ரொஜெக்ட் ஸ்மைல்’ அமைப்புடன் இணைந்து மூன்றாண்டுகளாக நடைபெற்று வரும் இந்த முன்னெடுப்பு, இவ்வாண்டு பிஜிபி அரங்கில் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் பங்கேற்ற 150 மூத்தோரும் மகிழும் வண்ணம் பாடல், நடனம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.
அக்டோபர் 18 ஆம் தேதியன்று காலை நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழ்மொழி கற்றல், வளர்ச்சிக் குழுவின் துணைத் தலைவர் டாக்டர் சந்துரு சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார்.
பங்கேற்ற அனைத்து மூத்தோருக்கும் உணவும், அதனைத் தொடர்ந்து பொருள்களும் வழங்கப்பட்டன.
‘மொபைல் க்ரோசரி’ எனும் திட்டத்தின் கீழ் கடந்த மூன்றாண்டுகளாக வாரந்தோறும் பல்வேறு வட்டாரங்களில் உள்ள குடும்பங்களுக்கு இவற்றை ஹவ் ரென் ஹவ் ஷி அமைப்பு வழங்கி வருகிறது.
‘ப்ரொஜெக்ட் ஸ்மைல்’ அமைப்பு கடந்த 15 ஆண்டுகளாக ஒற்றைப் பெற்றோர், மூத்தோர், பிந்தங்கிய குடும்பத்தினருக்கு ஆதரவளிக்கும் வண்ணம் பல்வேறு முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகிறது.
கடந்த மூன்றாண்டுகளாக இவ்வமைப்புகள் இணைந்து தீபாவளிப் பொருள்கள் வழங்கும் நிகழ்ச்சியை மேற்கொண்டு வருகின்றன.
தொடர்புடைய செய்திகள்
‘ப்ரொஜெக்ட் ஸ்மைல்’ அமைப்பின் தொண்டூழியராக விக்னேஷ் குணபாலன்,46, “இதனைத் தொடர்ந்து செய்ய முடியுமா எனும் கவலை இருந்தது. பலரும் திரண்டு நிதி ஆதரவளிப்பதுடன், தொண்டூழியம் செய்வது வரை உதவுகின்றனர். அதுவே இதன் வெற்றிக்கு முக்கியக் காரணம்,” என்றார்.
மேலும், “பரிசுப் பைகளில் குறிப்பிட்ட சில பொருள்களை வைத்து அனைவருக்கும் வழங்கினால் சில பொருள்கள் பயன்படும். சில பொருள்கள் அவர்கள் பயன்படுத்தாதவையாக இருக்கலாம். அதனைத் தவிர்க்கவே, அவர்களுக்குத் தேவையானவற்றை அவர்களே தேர்ந்தெடுக்கும் முறையைக் கடைப்பிடிக்கிறோம்,” என்றும் சொன்னார்.
பங்கேற்பாளர்கள் பொருள்களைத் தேர்ந்தெடுப்பதற்கேற்ப ஒரு வாகனத்தில் பொருள்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன.
சமையல் பொருள்களுடன், பலகாரம், ப்ராட்டா, இடியப்பம் ஆகிய இந்திய உணவுப் பொருள்களும் இருப்பதால் அவர்களுக்குப் பயனளிக்கும் என விக்னேஷ் நம்புகிறார்.
“மாதம் 2,500 குடும்பங்களுக்கு ஆதரவளித்து வருகிறோம். குறிப்பாகத் தீபாவளி சமயத்தில் இயன்றவர்கள் இணைந்து பலருக்கும் உதவுவது மனநிறைவான அனுபவம்,” என்றார் அமைப்பின் செயல்பாட்டு மேலாளரான செல்வராஜ், 51.
“எங்கள் அமைப்பில் தொடர்ந்து பத்தாண்டுகளுக்கு மேலாகத் தீபாவளிக் கொண்டாட்டங்கள் செய்கிறோம். ஹவ் ரென் ஹவ் ஷி அமைப்புடன் இணைந்து செய்வதில் கூடுதல் மகிழ்ச்சி. அதிலும் உதவியைத் தாண்டி ஒன்றிணைவு நிகழ்ச்சிபோலச் செய்வது தனிமையில் இருக்கும் மூத்தோருக்குப் பலரைச் சந்திக்கும் வாய்ப்பளிக்கிறது. பலருக்குப் புது நட்புகள் ஏற்படுவதும் சிறப்பானது,” என்றார் ‘ப்ரொஜெக்ட் ஸ்மைல்’ நிறுவனர் உமா பாலாஜி, 65.
“எனது தோழியின் மகள்மூலம் ‘ப்ரொஜெக்ட் ஸ்மைல்’ குறித்து அறிந்தேன். கடந்த 12 ஆண்டுகளாக ஒவ்வொரு சனிக்கிழமையும் அவர்களது முன்னெடுப்புகளில் பங்கேற்கிறேன். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றது மகிழ்ச்சி. இந்தப் பொருள்கள் உதவியாக இருக்கும்,” என்றார் பங்கேற்பாளரான தெம்பனிஸ் குடியிருப்பாளர் கா பிரேமாவதி, 62.
“நானும் எனது வயதான தாயாரும் இணைந்து வசிக்கிறோம். பலரைச் சந்தித்துப் பழகவும், கலைக் கைவினைகளைக் கற்றுத்தரும் அமர்வுகளில் தொடர்ந்து பங்கேற்கிறேன். அது மன அமைதியை அளிக்கிறது. அதனைத் தொடர்ந்து இந்த நிகழ்ச்சியிலும் பங்கேற்றது தீபாவளிக் கொண்டாட்ட மனநிலையைக் கொடுத்துள்ளது. அனைவருடன் கொண்டாடுவதில் மகிழ்ச்சி. நிகழ்ச்சியில் இடம்பெற்ற அனைத்தும் சிறப்பு,” என்றார் பொங்கோல் குடியிருப்பாளார் அஞ்சலி தேவி, 61.