தீபாவளிச் சந்தை மீண்டும் பிர்ச் சாலைக்கு வந்துவிட்டது. செப்டம்பர் 21 முதல் அக்டோபர் 20ஆம் தேதிவரை நடைபெறும் சந்தையில் இவ்வாண்டு அழகழகான உடைகள், அலங்காரப் பொருள்களைக் காண முடிவதுடன் பலவகை உணவுகளையும் சுவைக்கலாம்.
வாடகை அதிகம் என்றபோதும் ஒருகை பார்த்துவிடலாம் எனத் துணிச்சலாகக் கடைக்காரர்கள் சிலர் களமிறங்கியுள்ளனர். முதல் வார முடிவில் எதிர்பார்த்தபடி வாடிக்கையாளர் வருகை இல்லாவிடினும், இனிவரும் நாளில் அதிகமானோர் வருவர் என்பது அவர்களின் நம்பிக்கை.
தோற்றத்தால் கவர முயற்சி
தீபாவளிச் சந்தையினுள் நுழையும்போதே வெளித்தோற்றத்தால் மக்களை மயக்கவேண்டும் எனத் தம் கடையைத் தென்னங்கீற்றுக் குடிசைபோல் வடிவமைத்துள்ளது நான்காம் ஆண்டாகப் பிர்ச் சாலையில் கடை அமைத்துள்ள ‘சாய் ஓ கிளாக்’.
“நாங்கள் வெறும் வணிகத்திற்காக மட்டும் இங்குக் கடை திறக்கவில்லை. தீபாவளி உணர்வு மக்களுக்கு வர வேண்டும் என்பதால்தான் செய்கிறோம். அலங்காரத்துக்கே $3,000 செலவுசெய்துள்ளோம்,” என்றார் அந்நிறுவனத்தின் இணை நிறுவனர் ஷோபன் பிரகாஷ்.
இவ்வாண்டு புதிதாகப் பானிபூரியிலேயே ‘சீஸி பானிபூரி’ எனும் புதியவகையை அறிமுகப்படுத்தவுள்ளதாகக் கூறினார் ஷோபன்.
சாக்லெட்டில் நனைக்கப்பட்ட உறைந்த வாழைப்பழம் எனப்படும் ஆங்கிலேயச் சிற்றுண்டிப் பொருளையும் அவர் அறிமுகப்படுத்தியுள்ளார். சாதாரண பானிபூரியை அடுத்து துபாய் சாக்லெட் பானிபூரி நன்றாக விற்பனையாவதாக அவர் கூறினார்.
ஆனால், சென்ற ஆண்டு அளவிற்கு இவ்வாண்டு முதல் வாரத்தில் விற்பனை நடக்கவில்லை என்றார் அவர். “மாதக் கடைசி என்பதால் சிலர் சம்பளத்துக்காகக் காத்துக்கொண்டிருப்பர். அதன்பின் அதிகமானோர் வந்து வாங்குவார்கள் என எதிர்பார்க்கிறேன்,” என்றார் திரு ஷோபன்.
வெளிநாட்டு ஊழியர் வாடிக்கையாளர்கள் சிலருக்குச் சலுகைகள் வழங்குவதாகவும் அவர் கூறினார்.
சுவையும் இசையும்: தித்திக்கும் தீபாவளி
உரக்க ஒலிக்கும் திரைப்படப் பாடல்கள், குதூகலமான இசை, ஒளிமயமான மின்விளக்குகளுடன் பிர்ச் சாலை தீபாவளிச் சந்தைக்குப் பொலிவூட்டுகிறது வழக்கம்போல் இவ்வாண்டும் கடை வைத்துள்ள ‘தி ஒரிஜினல் வடை’. ஆனால், இம்முறை இன்னும் பெரிய கடையாக, நான்கு கடைகளுக்கான இடத்தில் அமைகிறது.
‘பட்டர் சிக்கன்’ வடை, நண்டு வடை, காடைமுட்டை வடை, நெத்திலிவடை, மசாலா வடை என விதவிதமான வடைகளைச் சுட்டு மக்களை ஈர்க்கிறது.
இவ்வாண்டு புதிதாக, மீ ஹூன் பிரியாணி, ‘தோசை ஷாட்ஸ்’ எனச் சிறியதாக உருட்டிக் கொடுக்கப்படும் தோசை, தந்தூரி பர்கர் போன்ற புதிய உணவுவகைகளை அக்கடை அறிமுகப்படுத்தியுள்ளது.
“வாடகை, மின்சாரம், தண்ணீர், உணவுப்பொருள்கள் அனைத்தையும் சேர்த்து $60,000 செலவாகிவிடும். ஆனால் நாம் தமிழர்கள்தானே! தீபாவளியை இப்படித்தான் கொண்டாட வேண்டும்,” என்றார் 27 ஆண்டுகளாக ‘தி ஒரிஜினல் வடை’யைத் தம் குடும்பத்தினருடன் நடத்திவரும் திரு சரவணன்.
புதிதாக அடியெடுத்துவைக்கும் நிறுவனங்கள்
முதன்முறையாகத் தீபாவளிச் சந்தைக்கு வந்துள்ளது ‘பத்மா ஸ்வீட்ஸ் அண்ட் ஸ்னாக்ஸ்’. “எங்கள் நிறுவனத்தைப் பற்றிப் பிறர் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதே எங்கள் முக்கிய நோக்கம்,” என்றார் நிறுவனத்தின் பங்காளி திரு ஜான்சன். ஏற்கெனவே சிங்கப்பூரில் இரு இடங்களில் அவர்கள் கடை நடத்தி வருகின்றனர்.
“நாங்கள் செட்டிநாடு உணவகம். பாரம்பரியத்தில் அதிகக் கவனம் செலுத்துகிறோம். கடலைமாவுக்குப் பதிலாக உளுந்தில் செய்யப்பட்ட பூந்தி, பட்டை, கிராம்பு, ஏலக்காய், இஞ்சி உடன் ஒரு மணி நேரம் ஊறி வடிகட்டிய தேநீர் மற்றும் தேங்காய், கருப்பட்டி ஆகியவற்றுடன் செய்யப்படும் சோமாஸ், போன்றவற்றைத் தீபாவளிச் சந்தையில் வழங்குகிறோம்,” என்றார் கடையின் நிறுவனர் அண்ணாமலை சதீஷ்.
சந்தைக்காகப் போட்ட பணத்தையாவது எடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் ஊழியர்கள் எவரையும் பணியமர்த்தாமல் தாமும் நிறுவனர் சதீஷும் சந்தையிலுள்ள கடையை நடத்துவதாகத் திரு ஜான்சன் கூறினார்.
சுடச்சுடத் தயாரிக்கப்படும் உணவு
இவ்வாண்டு நேரடியாகக் கடையிலேயே முறுக்கு சுட்டு வாடிக்கையாளர்களுக்குச் சுடச்சுட வழங்குகிறது ‘தி ஒரிஜினல் வடை’. சென்ற ஆண்டு முறுக்கை வீட்டில் சுட்டு கடைக்கு எடுத்துவந்தனர்.
பக்கத்திலேயே இருக்கும் ‘எஸ்எஸ்ஆர் உணவுகள்’, நேரடியாகப் பரோட்டா, தோசை சுட்டு வழங்குகிறது. அத்துடன், ‘தம்’ பிரியாணி, சைவ, அசைவ ‘முழு உணவு’களை (set meal) வழங்குகிறது. தேன்குளம் முறுக்கு, மிட்டாய், கடலைமிட்டாய், சேவு மிக்சர் போன்ற பலகாரங்களையும் அந்நிறுவனம் சொந்தமாகத் தயாரித்து விற்கிறது.
கோவில்பட்டியில் தயாரிக்கப்படும் சிற்றுண்டிகள், பலகாரங்களையே ஒவ்வோர் ஆண்டும் தீபாவளிச் சந்தையில் விற்றுவரும் ‘எஸ்எஸ்ஆர் உணவுகள்’ இவ்வாண்டு ‘இந்தியன் உணவக’த்துடன் இணைந்து முழு உணவுகளையும் வழங்குகிறது.
சென்ற ஆண்டுச் சந்தையில் இன்னும் உள்ளே இருந்த ‘எஸ்எஸ்ஆர் உணவுகள்’ இம்முறை கூட்டத்தைத் தன்வசப்படுத்த முன்வரிசைக்கு வந்துள்ளது.
அதிகரிக்கும் வாடகையுடன் மோதும் கடைகள்
“பிர்ச் சாலையில் நான் கடை எடுப்பது இதுவே என் கடைசி ஆண்டாக இருக்குமோ எனச் சிந்தித்து வருகிறேன். ஏனெனில், வாடகை, ஜிஎஸ்டி, உணவு விலைகள் அனைத்தும் அதிகரித்துவிட்டன. சென்ற ஆண்டு நான் இரு கடைகளுக்கு மொத்தம் $17,500 தந்தேன். இவ்வாண்டு நான் மொத்தம் $21,500 கொடுக்கிறேன். அதுதவிர, ஒவ்வொரு மின்னிணைப்புக்கும் $500, ஒவ்வொரு தண்ணீர் இணைப்புக்கும் $700 கொடுக்க வேண்டியுள்ளது,” என்றார் திரு ஷோபன்.
‘மெட்ராஸ் காஃபி ஹவுஸ்’ கடையின் உரிமையாளர் நிறுவனர் வீர.இராமசாமி, 2023ல் இதே சந்தையில் இரு கடைகள் எடுத்தபோது அவை இரண்டுக்கும் சேர்த்து வாடகை $6,500தான். ஆனால், இப்போது இரண்டுக்கும் சேர்த்து வாடகை $16,000க்கு உயர்ந்துள்ளதாக அவர் கூறினார்.
மற்றொரு கடைக்காரர் முகமது, உயரும் வாடகையால் தம்மைப் போன்றவர்கள் பெரிதும் சிரமப்படுவதாகக் கூறினார்.
பொதுவாக, பலகார, துணிக்கடைகளைவிட சமைத்து வழங்கும் உணவுக்கடைகளுக்கு வாடகை அதிகமாக இருப்பதாகக் கடைக்காரர்கள் சிலர் கூறினர்.
‘எத்னிக் பொட்டிக்’ கடைக்காரர் அஞ்சம் அலி, சென்ற ஆண்டு மூன்று கடைகளுக்கு $18,000 வாடகை தந்ததாகவும் இவ்வாண்டு $24,000 வாடகை தருவதாகவும் கூறினார்.
வாடகை உயர்ந்தாலும் விற்கும் விலையை உயர்த்தினால் வாடிக்கையாளர்கள் வாங்கமாட்டார்கள் என அஞ்சி, அதே விலையில் விற்பதாகக் கடைகள் கூறின.
சந்தைக்குள் செல்ல செல்ல உணவுகள் தவிர, உடைகள், ஒப்பனைப் பொருள்களைச் சலுகை விலையில் விற்கும் பல கடைகளும் உள்ளன.
“இவ்வாண்டு எங்கள் கடையில் பாகிஸ்தானி/இந்தியன் ஷராரா, பாகிஸ்தானி குர்த்தி லிடார், பாகிஸ்தானி ரதியா போன்ற உடைகளை விற்கிறோம். தேக்கா சந்தையிலுள்ள எங்கள் கடையில் நாங்கள் $110க்கு விற்கும் உடையை இங்கு $45 முதல் $75 வரை சலுகையில் விற்கிறோம். எங்கள் நிறுவனத்தைப் பற்றிப் பிறருக்குத் தெரியப்படுத்துவதே எங்கள் நோக்கம். தேக்கா மார்க்கெட் கடையில் $200க்கும் மேல் மதிப்புள்ள உடைகளைக்கூட வைத்திருக்கிறோம். ” என்றார் ‘எத்னிக் பொட்டிக்’ அஞ்சம் அலி.