தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

தந்தையையும் பாதிக்கும் பிரசவத்திற்குப் பிந்திய மனச்சோர்வு

2 mins read
f1128fed-24bb-4920-b3cd-8121fa4d3a0e
தம் பிள்ளையின் அழுகையைச் சமாளிக்க முடியாமல் திணறும் தந்தை. - படம்: இணையம்

செய்தி: கி.விஜயலட்சுமி

மகப்பேற்றுக்குப் பிறகுவரும் மன அழுத்தம் பெரும்பாலும் தாய்மார்களையே பாதித்து வந்த நிலையில், தற்போது தந்தையரும் அவற்றை எதிர்கொள்வதாக ஆய்வுகள் கூறுகின்றன.

சிங்கப்பூரில் பத்தில் இரு தந்தை பிரசவத்திற்குப் பின்வரும் மன அழுத்தத்தால் பாதிக்கப்படுவதாக அப்பாதிப்புக்கு ஆலோசனை வழங்கும் ‘கிளேரிட்டி சிங்கப்பூர்’ தெரிவித்தது.

2024 முதல் அப்பிரச்சினையால் பாதிக்கப்படும் தந்தையருக்கு அது சிகிச்சை அளித்து வருகிறது.

பிரசவத்தின்போது மனைவி எதிர்கொள்ளும் பிரச்சினைகளைத் தாங்கிக்கொள்ள முடியாத நிலை, அவருக்கு உதவ முடியவில்லை என்ற குற்றவுணர்வு, தங்களுடைய வேலைப்பளுவில் தந்தைக்கான கடமைகளைச் சரிவர செய்யமுடியாமல் போய்விடுமோ என்ற ஏக்கம் போன்றவை தந்தையர்களுக்கு மன அழுத்தத்தைத் தருவதாகக் கூறப்பட்டது.

மகப்பேற்றுக்குப்பின் ஒரு தாய் புதிதாகப் பிறப்பதாகக் கூறுவர். இது தந்தைக்கும் பொருந்தும். அந்நிலை அவர்களுக்கும் புதிது. அதைத் திறம்படக் கையாள அவர்களுக்கும் ஆதரவு தேவை என்பதை ‘கிளேரிட்டி சிங்கப்பூர்’ வலியுறுத்துகிறது.

தந்தையரிடையே மனச்சோர்வுக்கான அறிகுறிகள் பெரும்பாலும் மனைவியின் கர்ப்பகாலத்தில் அல்லது பிரசவத்திற்குப் பிந்திய முதல் ஆண்டில் ஏற்படலாம். 

பசியின்மை, சோர்வு, தலைவலி, பதற்றம், தூக்கமின்மை, கோபம், வெறுப்பு, மூர்க்கத்தனம், தனிமைப்படுத்திக் கொள்ளுதல், உயிருக்கு ஆபத்தான விளையாட்டுகளில் ஈடுபடுதல், அதிகப்படியாக மது அருந்துதல், அவர்களுக்குப் பிடித்த செயலில் ஆர்வமில்லாமல் இருப்பது போன்றவை அவ்வகை மனச்சோர்வால் பாதிக்கப்படும் தந்தையர்க்கான அறிகுறிகள் என்கிறது அந்த மனநலத் தொண்டு நிறுவனம்.

பெற்றோருக்கான சமுதாய அமைப்புகளில் குறிப்பாக, தந்தையர்களுக்கான ‘டேட்ஸ் ஃபார் லைஃப்’ போன்றவற்றில் தங்களை இணைத்துக்கொண்டு அதில் பகிரப்படும் வாழ்க்கை அனுபவங்களை ஒப்புநோக்கி இப்பயணத்தில் நாம் தனியாக இல்லை என்பதை அவர்கள் உணர வேண்டும். 

உதவி தேவைப்படும் நேரத்தில் தயங்காமல் குடும்ப உறுப்பினர்களை நாடவேண்டும். இணையராக மனநல ஆலோசகரை அணுகி, தங்கள் பிரச்சினைகளை எடுத்துக்கூறி அதற்கான ஆலோசனைகளையும் பெறவேண்டும்.

குறிப்புச் சொற்கள்