நாற்காலியிலிருந்து எழுவதில் சிரமம்: உடல் தளர்ச்சியின் ஆரம்ப அறிகுறியாக இருக்கக்கூடும்

நாற்காலியிலிருந்து எழுவதில் சிரமம்: உடல் தளர்ச்சியின் ஆரம்ப அறிகுறியாக இருக்கக்கூடும்

படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

13 Nov 2026 - 5:30 am

2 mins read

நாற்காலி அல்லது காரில் இருந்து எழுவதற்குக் கூடுதல் முயற்சி தேவைப்பட்டால், அது உடல் தளர்ச்சியின் ஆரம்ப அறிகுறியாக இருக்கக்கூடும். 30 அல்லது 40 வயதுகளில் இருப்பவர்களுக்கும் இது பொருந்தும்.

“தசைகளையும் அவற்றின் வலிமையையும் நீங்கள் இழந்து வருகிறீர்கள் என்பதற்கான முக்கிய அறிகுறி இது,” என்று சாங்கி பொது மருத்துவமனையின் முதியோர்நலப் பிரிவு மூத்த நிபுணர் சாமுவேல் சியூ கூறினார்.

டான் டோக் செங் மருத்துவமனையின் மூத்த நிபுணர் லிம் ஜுன் பெய்யும் உடல் தளர்ச்சி குறித்து விளக்கினார்.

முதியவர்களுக்குப் படிகள் ஏறுவது அல்லது அரிசிப் பையைத் தூக்குவது போன்ற அன்றாடச் செயல்களில்கூட உடல் தளர்ச்சி சிரமத்தை ஏற்படுத்தக்கூடும் என்றார் அவர்.

நோய்கள் மற்றும் காயங்களிலிருந்து உடல் தானாகவே குணமடைய முடியாத நிலை ஏற்படும்போது, உடல் தளர்ச்சி மேலும் மோசமடைகிறது. ஆரம்பத்திலேயே கண்டறிந்தால் இதனை எளிதாகச் சரிசெய்யலாம்.

உடல் தளர்ச்சி என்பது தவிர்க்க முடியாத ஒன்றன்று என்றும் தொடர்ந்து தசை வலுவூட்டும் பயிற்சிகளைச் செய்வதன் மூலம் அதைத் தடுக்கலாம் என்றும் சுகாதார மேம்பாட்டு வாரியத்தின் இயக்குநர் ரேச்சல் இங்கோ தெரிவித்தார்.

அக்டோபர் 6ஆம் தேதி ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் ஊடகத்தின் மூத்த செய்தியாளர் ஜாய்ஸ் தியோ நெறிப்படுத்திய வட்டமேசைக் கலந்துரையாடலில் நிபுணர்கள் நால்வர் கலந்துகொண்டனர்.

சிங்கப்பூரில் அதிக அளவிலான முதியவர்கள் உள்ளதால், வயதான காலத்தில் ஆரோக்கியமாக வாழ்வது குறித்து அவர்கள் விவாதித்தனர்.

முதியவர்கள் சுறுசுறுப்பாகவும் தன்னிச்சையாகவும் வாழ உதவும் ‘ஏஜ் வெல் எஸ்ஜி’ திட்டத்தின்கீழ் 3.5 பில்லியன் வெள்ளி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

துடிப்புடன் மூப்படைதலை ஊக்குவிக்கும் நிலையங்கள் வழியாகப் பல உடற்பயிற்சித் திட்டங்கள் வழங்கப்படுகின்றன. இந்தத் திட்டங்கள் முதியவர்களுக்குப் பெரிதும் உதவுகின்றன.

தேசிய மக்கள்தொகைச் சுகாதாரக் கருத்தாய்வின்படி, 60க்கும் 74 வயதுக்கும் இடைப்பட்டவர்களில் பெரும்பாலானோர் போதிய உடல் இயக்கத்தைக் கொண்டிருந்தாலும், 36.8 விழுக்காட்டினர் மட்டுமே தசை வலுவூட்டும் பயிற்சிகளைத் தொடர்ந்து செய்கின்றனர்.

சமூகத்தில் தனிமையாக இருப்பது முதியவர்களின் நினைவாற்றலையும் மனநலத்தையும் பாதிக்கக்கூடும் என்பதால் அவர்களை இத்தகைய நிலையங்களுக்கு அழைத்துச்சென்று சுறுசுறுப்பாக இயங்கச் செய்வது மிகவும் அவசியம் என ஒருங்கிணைந்த பராமரிப்பு அமைப்பின் துடிப்புடன் முதுமையடைதல் பிரிவுத் தலைவர் சோ சுவீ பிங் கூறினார்.

நீண்டகால உடல் உழைப்பின்மை தசை வலுவிழப்பிற்கு வழிவகுக்கும் என்பதால், மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பும் முதியவர்களுக்குத் தகுந்த ஊட்டச்சத்து, தசைப் பயிற்சிகள் தேவைப்படுகின்றன.

முதுமை என்பது நல்வாய்ப்பன்று, மாறாக அது நாம் அன்றாடம் செய்யும் சிறந்த தெரிவுகளைப் பொறுத்தது என அந்தக் கலந்துரையாடல் ஆழமாக வலியுறுத்தியது.

குறிப்புச் சொற்கள்