சிறுமியர் இல்லத்தைச் சேர்ந்த இளம்பெண்கள், பலதுறைத் தொழிற்கல்லூரி மாணவர்கள், இல்லத்தரசிகள் உட்பட 24 பெண்கள் தம் மின்னிலக்கத் திறன்களை மேம்படுத்தி, நல்லதொரு எதிர்காலத்தை நோக்கி அடியெடுத்து வைத்துள்ளனர்.
பெண்களை ஆற்றல்படுத்தும் நோக்கில் ரோட்டரி கிளப் சிங்கப்பூர் மே 31ஆம் தேதி நடத்திய முதலாவது மின்னிலக்கத் திறன்கள் பயிலரங்கு வாயிலாக அவர்கள் பயனடைந்தனர்.
வன்முறைக்கு ஆளான, குடும்பத்தால் கைவிடப்பட்ட அல்லது வழிதவறிச் செல்லக்கூடிய 11 வயதுக்கு மேற்பட்ட இளம்பெண்களுக்கு அடைக்கலம் வழங்கும் கிறிஸ்துவ இல்லமான கிளேடியோலஸ் பிளேசைச் (Gladiolus Place) சேர்ந்த பத்துப் பெண்கள் அவர்களில் அடங்குவர்.
அவர்கள் ஐந்தே மணி நேரங்களில் தங்களின் முதல் கைப்பேசிச் செயலிகளை உருவாக்கினர்.
அந்தச் செயலிகள்வழி, ஒரு புகைப்படத்தைப் பதிவேற்றி கிரோக் (Groq) எனும் செயற்கை நுண்ணறிவுத் தளம்மூலம் அதிலிருந்து கவிதையை உருவாக்கலாம்.
கணினி நிரலாக்க மொழிகள் தெரியாதவர்களும் கைப்பேசிச் செயலிகளை உருவாக்க உதவும் ‘ஃபிளட்டர்ஃபுளோ’ (FlutterFlow) செயலியை அவர்கள் பயன்படுத்தி இச்செயலிகளை உருவாக்கினர்.
தங்களின் முதல் செயலியைப் படைத்த மகிழ்ச்சியில், பங்கேற்பாளர்களில் பலரும் தாங்கள் எவ்வாறு தொழில்நுட்பத் துறைகளில் நுழையலாம் என்றும் எவ்வாறு வீட்டிலிருந்து செய்யக்கூடிய அல்லது விருப்பத்திற்கேற்ற வேலை வாய்ப்புகளைப் பெறலாம் என்றும் கேட்டதாக ரோட்டரி கிளப் சிங்கப்பூரின் அடுத்த தலைவராக நியமிக்கப்படவுள்ள சோனாலி சின்ஹா கூறினார்.
அப்பெண்களின் ஆர்வத்தை வளர்க்கும் வகையில், ரோட்டரி கிளப் அடுத்துவரும் பயிலரங்குகளில் கற்றல் பாதைகளையும் வேலைசார்ந்த ஆலோசனைகளையும் அவர்களுடன் பகிரவுள்ளது. அத்துடன், அவர்களுக்கான வழிகாட்டுதல் அமர்வுகளையும் நடத்தவுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
“கணினி நிரலாக்கம் தாங்கள் நினைக்கும் அளவிற்குக் கடினம் இல்லை என்பதை இளம்பெண்களுக்கு உணர்த்தியது மனநிறைவளித்தது,” என்றார் பயிலரங்கை வழிநடத்திய ஃபிளட்டர்ஃபுளோவைச் சார்ந்த சஞ்சனா.
“பயிற்றுவிப்பாளர்கள் எங்கள் முன்னேற்றம், மகிழ்ச்சிமீது எவ்வளவு அக்கறை கொண்டிருந்தனர் எனத் தெரிந்தது. எங்களுக்குப் புரிந்துகொள்ள கூடுதல் நேரம் தேவைப்பட்டாலும் பொறுமையாக இருந்தனர்,” என்றார் பங்கேற்பாளர் ஒருவர்.