இலக்கியப் பரிசுக்கான இறுதிச் சுற்றுக்குத் தேர்வாகியுள்ள கவிதை நூல்களைப் பற்றிய கலந்துரையாடல்

இலக்கியப் பரிசுக்கான இறுதிச் சுற்றுக்குத் தேர்வாகியுள்ள கவிதை நூல்களைப் பற்றிய கலந்துரையாடல்

2 mins read
39e97ff9-984b-46cd-90ba-c116729e2069
கவிமாலை அமைப்பின் 291வது மாதாந்தர நிகழ்ச்சியில், இந்த ஆண்டு சிங்கப்பூர் இலக்கியப் பரிசுக்கான இறுதிச் சுற்றுக்குத் தேர்வாகியுள்ள மூன்று கவிதை நூல்களைப் பற்றிய கலந்துரையாடல் இடம்பெற்றது. - படம்: ஏற்பாட்டாளர்கள்
multi-img1 of 2

கவிமாலை அமைப்பின் 291வது மாதந்தர நிகழ்ச்சி, ஆகஸ்ட் 31ஆம் தேதி தேசிய நூலகக் கட்டடத்தில் நடைபெற்றது.

நிகழ்ச்சியின் ஓர் அங்கமாக இந்த ஆண்டு சிங்கப்பூர் இலக்கியப் பரிசுக்கான இறுதிச் சுற்றுக்குத் தேர்வாகியுள்ள மூன்று கவிதை நூல்களைப் பற்றிய கலந்துரையாடல் இடம்பெற்றது.

முதலில், இன்பாவின் ‘கடல் நாகங்கள் பொன்னி’, மகேஷ் குமாரின் ‘ஒரு புத்த மதியம்’, மதிக்குமார் தாயுமானவனின் ‘யாமக்கோடங்கி’ ஆகிய நூல்களில் இடம்பெற்றுள்ள கவிதைகளைப் பற்றிய பார்வைகளை முறையே எழுத்தாளரும் ஆசிரியருமான மா சேகர், ஆசிரியர் செ வாசுதேவன், கவிஞர் அஷ்ரப் ஆகியோர் பகிர்ந்துகொண்டனர்.

“கடல் நாகங்கள் பொன்னி கவிதைத் தொகுப்பில் சிங்கப்பூரில் புழக்கத்திலுள்ள பல சொற்களைப் பயன்படுத்தி மிக அழகாக எழுதப்பட்ட கவிதைகள் இடம்பெற்றுள்ளன. பல குறியீடுகள் காட்சிப் படிமங்களோடு சிங்கப்பூரின் வாழ்வியல், பண்பாட்டுச் சூழல்களை வெளிப்படுத்துகின்றன. நவீன கவிதைகள் தாம் சொல்ல வந்ததை நேரிடையாகச் சொல்லாமல் வாசகருக்குப் புதிய வாசல்களைக் காலத்திற்கேற்பவும் அவர் அனுபவத்திற்கேற்பவும் திறந்துவிடும் பண்பைக் கொண்டு மிளிரும்,” என்று மா சேகர் கூறினார்.

‘ஒரு புத்த மதியம்’ நூலைப் பற்றிப் பேசிய செ வாசுதேவன், “மகேஷ் குமாரின் கவிதைகள் இன்றைய கவிதைகளிலிருந்து மாறுபட்டு இருக்கின்றன. இத்தொகுப்பு, நாம் அன்றாடம் பயன்படுத்தும் எளிய சொற்களைத் தலைப்புகளாக அமைத்து வாசிக்கத் தூண்டும்விதமாக, வாழ்வின் பரிமாணங்களைக் காட்டுகின்றது. சொல்லமைப்பு, மொழியமைப்பு போன்றவற்றில் தனித்த அக்கறையோடு கவிதைகள் எழுதப்பட்டுள்ளன,” என்று அவர் கூறினார்.

யாமக்கோடங்கி குறித்துப் பேசிய அஷ்ரப், மதிக்குமாரின் கவிதைகளில் அமைந்துள்ள அழகியலையும் சொல்லாடலையும் வியந்து பேசினார். “கவிஞர், நிகழ் உலகத்தின் கல் எடுத்து மாய உலகின் குளத்தில் விட்டெறிகிறார்,” என்றும் “சில கவிதைகளைக் கிராமிய மண்ணில் தோய்த்து முகரத் தருகிறார்,” என்றும் அவர் கூறினார்.

பின்னர், நடைபெற்ற கலந்துரையாடல் அங்கத்தை அஷ்ரப் வழிநடத்தினார். அதில், நூலாசிரியர்கள் இன்பா, மகேஷ் குமார் இருவரும் தம் கருத்துகளை எடுத்துரைத்தனர்.

தலைப்பின் முக்கியத்துவம், வாசகர் தொடர்ந்து நினைவில் நிறுத்திக்கொள்ள உதவும் கவிதையின் கூறு, சிங்கப்பூரில் கவிதையின் போக்கும் வளர்ச்சியும், மொழிபெயர்ப்பும் சிக்கல்களும், உள்ளூர்ப் படைப்புகளுக்கும் வெளிநாட்டுப் படைப்புகளுக்கும் இடையில் பாடுபொருள்களின் தேர்வும் மாற்றங்களும், மரபுக்கவிதையையும் செவ்விலக்கியத்தையும் வாசிப்பதால் இளங்கவிஞர்கள் பெறும் நன்மை, நவீன கவிதைகளைப் புரிந்துகொள்வதிலுள்ள சிக்கல் போன்றவை குறித்துக் கலந்துரையாடப்பட்டது.

குறிப்புச் சொற்கள்