கலை, பண்பாட்டுத் தளங்களில் பலதரப்புப் பிரதிநிதித்துவம், பன்முகத்தன்மை உள்ளிட்டவை குறித்த கண்ணோட்டங்களை ஆராய்ந்து மறுசீரமைக்கும் நோக்கில் ஒரு கலந்தாய்வு (Arts & Disability Forum 2025) தொடங்கப்பட்டுள்ளது.
தேசியக் கலை மன்றத்தின் ஆதரவில் கலை & இயலாதோர்க்கான அமைப்பு (Arts & Disability (ART:DIS)) ஏற்பாடு செய்துள்ள இக்கலந்தாய்வில் உடற்குறையுள்ளோர், பண்பாடு, சமூகம் சார்ந்த செயல்பாடுகளில் ஈடுபடுவோர், பன்முகத்தன்மையையும் சமபங்கையும் உள்ளடக்கிய சமூகம் சார்ந்த தளங்களில் ஈடுபடுவோர், கல்வி, கொள்கை வகுப்புப் பிரிவுகளைச் சேர்ந்தோர் என ஏறத்தாழ 300 பேர் பங்கேற்கின்றனர்.
கலந்தாய்வுகள், பயிலரங்குகள், காணொளிப் பகிர்வு, தலைமைத்துவப் பயிற்சிகள் உள்ளிட்ட பல அமர்வுகளை உள்ளடக்கிய இந்நிகழ்ச்சி மார்ச் 25ஆம் தேதி முதல் 29ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
அவற்றில், கலைப் படைப்பையும் கலை ரசிப்பையும் அனைவருக்குமானதாக மாற்றும் வழிமுறைகள், அவற்றைச் செயல்படுத்துவதிலுள்ள நடைமுறைச் சிக்கல்கள் என பலவற்றையும் குறித்து ஆராயப்படும்.
உடற்குறையுள்ள கலைஞர்களின் தொழில்முறைச் செயல்பாடுகளை மேம்படுத்தும் வழிமுறைகளும் ஆலோசிக்கப்படவுள்ளன.
இதன் தொடக்க நிகழ்ச்சி மார்ச் 26ஆம் தேதி எஸ்பிளனேட் - சிங்டெல் நீர்முகப்புக் கலையரங்கில் (Singtel Waterfront Theatre at Esplanade) நடைபெற்றது.
அதன் முதல் அமர்வாக, கலைகளிலும் அதற்கு அப்பாலும் அணுகும் வாய்ப்பை விரிவுபடுத்துவது குறித்த கலந்தாலோசனை நடைபெற்றது.
உடற்குறைபாடுள்ளோர் பல்வேறு முக்கியக் கலைகளில் பங்கேற்கவும், முக்கியக் கலை, இலக்கியங்களை ரசிக்கவும் வழிவகுக்கும் புத்தாக்க முயற்சிகளைச் செய்துவரும் சித்தாந்த் ஷா இந்த அமர்வில் உரையாற்றினார்.
தொடர்புடைய செய்திகள்
இந்தியாவைச் சேர்ந்த திரு சித்தாந்த், ‘ஆக்சஸ் ஃபார் ஆல்’ (Access for All) எனும் அமைப்பின் மூலம் இலக்கிய நூல்கள், அரும்பொருளக விளக்கப் பலகைகள் உள்ளிட்ட பலவற்றை ‘பிரெய்ல்’ முறையில் மாற்றுவது, ஓவியங்களைத் தொட்டுணரக்கூடிய முறையில் (tactile imagery) மாற்றுவது என பலவித கலைகளைப் பார்வைக் குறைபாடுள்ளோர் அனுபவிக்கும் நோக்கில் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.
இவர், கலைத்துறையில் அணுகும் வாய்ப்பின் இன்றியமையாமை குறித்தும் அதற்காகத் தமது அமைப்பு மேற்கொண்டு வரும் பல முன்னெடுப்புகள் குறித்தும் உரையாற்றினார்.
“அனைத்துலக வடிவமைப்புக் கொள்கைகள் அனைவரையும் உள்ளடக்கிய கலை வெளிப்பாட்டை முக்கிய அம்சம் என்று குறிப்பிடுகிறது. குறைவான பிரதிநிதித்துவம் கொண்ட குழுக்களின் பங்களிப்பை அதிகரிப்பது கலைத்துறைக்கு மட்டுமன்றி, ஒட்டுமொத்த சமூக மேம்பாட்டிற்கும் இன்றியமையாதது,” என்று அவர் தெரிவித்தார்.
அறிவுசார் குறைபாடுள்ள கலைஞர்களுடன் தொடர்ந்து இணைந்து செயல்பட்டு வரும் ‘டைவெர்ஸ் எபிலிட்டீஸ் டான்ஸ் கலெக்டிவ்’ (Diverse Abilities Dance Collective) அமைப்பின் நிறுவனரான கவிதா கிருஷ்ணன், அக்கலைஞர்களுக்குத் தேவைப்படும் ஆதரவுக் கட்டமைப்புகள் குறித்துப் பேசினார்.
பள்ளிப்பருவத்திலிருந்தே அவர்களுக்கான கலை சார்ந்த திறன்களை அறிமுகம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார் கவிதா.
“அக்கலைஞர்களுக்கு எளிமையான முறையில் குறிப்புகள் வழங்குவது, பல்வேறு நிகழ்ச்சிகளைப் பார்வையிடச் செய்வது, அவை குறித்த கலந்துரையாடலுக்கு ஏற்பாடுசெய்வது உள்ளிட்ட முன்னெடுப்புகளை மேற்கொள்ள வேண்டும்,” என்றும் சொன்னார் கவிதா.
கலந்துரையாடல்களுடன் படைப்பாற்றல் மிக்கவர்கள், சமூகத் துறை வல்லுநர்கள், பொது நிறுவனங்களிடையிலான ஒத்துழைப்புகளை ஊக்குவிக்கும் நோக்கில் இந்நிகழ்ச்சி நடத்தப்படுவதாகத் தெரிவிக்கபட்டது.