தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மொழித்திறனை ஊக்குவித்த மொழிபெயர்ப்புப் போட்டிகள்

2 mins read
bab06751-ca6d-4f63-b103-f330da08855e
தாங்கள் படைத்த காணொளிகளை உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையத்தில் நடுவர்கள்முன் படைக்கும் மாணவர்கள். - படம்: லாவண்யா வீரராகவன்

சற்றே மாறுபட்ட சுவாரசியமான சவால்கள்மூலம் மாணவர்களின் மொழித்திறனை ஊக்குவிக்கும் தமிழ் மொழிப் போட்டிகள் இந்த ஆண்டு தமிழ் இளையர் விழாவில் இடம்பெற்றன.

விழாவின் ஓர் அங்கமாகப் பெரியார் சமூக சேவை மன்றம் சார்பில் இப்போட்டிகள் செப்டம்பர் 6ஆம் தேதி உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையத்தில் நடைபெற்றன.

நிகழ்ச்சியில் வளர்தமிழ் இயக்கத்தின் தலைவர் நசீர் கனி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு மாணவர்களுக்குச் சான்றிதழ்கள் வழங்கினார்.

உயர்நிலை, தொடக்கக் கல்லூரி/ பலதுறைத் தொழிற்கல்லூரி, பொதுப்பிரிவு என மூன்று பிரிவுகளில் மொழிபெயர்ப்புப் போட்டிகள் நடைபெற்றன.

‘மூப்பில் இளமை’ எனும் தலைப்பில் தமிழ்மொழியில் காணொளி தயாரிக்கும் போட்டியும் நடைபெற்றது.

“கடந்த 2009ஆம் ஆண்டிலிருந்து, ஈராண்டுகளுக்கு ஒருமுறை, பேச்சு, பாடல் எனப் பல்வேறு வகைப் போட்டிகள் நடத்தி வருகிறோம். இம்முறை மொழிபெயர்ப்புப் போட்டிகளுக்கும் ஏற்பாடு செய்தோம்,” என்று கூறினார் பெரியார் சமூக சேவை மன்றத் தலைவர் பூபாலன்.

“முன்தயாரிப்புகளைத் தாண்டி, மொழித்திறன், வளம் ஆகியவற்றை இப்போட்டி சோதித்தது. சவாலாக இருந்தாலும், மாணவர்கள் தங்கள் திறனை மேம்படுத்திக்கொள்ள இது ஊக்குவித்தது,” என்றும் அவர் சொன்னார்.

மொழிபெயர்ப்புப் போட்டிகளில் ஆர்வத்துடன் பங்கேற்ற மாணவர்கள்.
மொழிபெயர்ப்புப் போட்டிகளில் ஆர்வத்துடன் பங்கேற்ற மாணவர்கள். - படம்: லாவண்யா வீரராகவன்

“எதிர்பார்த்ததைவிட போட்டி கடினமாக இருந்தது. ஆங்கிலத்தில் அர்த்தம் தெரிந்த சொல்லுக்குச் சரியான தமிழ்ச்சொல்லைக் கண்டறிவது சிரமமாக இருந்தது,” என்றார் மொழிபெயர்ப்புப் போட்டியில் பங்கேற்ற ராஃபிள்ஸ் பெண்கள் பள்ளி மாணவி தர்‌ஷிதா செல்வராஜு, 15.

மொழித் திறனில் எந்த நிலையில் இருக்கிறோம் என்பதைத் தெரிந்துகொள்ள இப்போட்டி உதவியதாக அவர் கூறினார்.

சில சொற்களை மொழிபெயர்க்க முடியாவிட்டாலும், ஒரு வாக்கியமாக அர்த்தமுள்ளதாக அமைக்க முயன்றதாகச் சொன்னார் தர்னீ‌ஷ் செல்வராஜு.

இப்போட்டி உற்சாகமான மாறுபட்ட அனுபவமாக இருந்தது என்று கூறினார் ஜிஐஜி இன்டர்நே‌‌ஷனல் பள்ளி மாணவர் ஃபேவியன் ஜோசஃப்.

“மொழிபெயர்ப்பும் இருமொழித்திறனும் முக்கியத் திறன்கள். அதற்கு மாணவர்களைத் தயார்ப்படுத்தும் வகையில் இப்போட்டிகள் அமைந்தன,” என்றார் போட்டியின் நடுவராகச் செயல்பட்ட நடராஜன் சாந்தி.

“எளிமையாக, பொருள் மாறாமல், நல்ல சொற்களைப் பயன்படுத்தி மொழிபெயர்ப்பு செய்துள்ள மாணவர்களை வெற்றியாளர்களாகத் தேர்ந்தெடுக்கவுள்ளோம்,” என்றும் அவர் சொன்னார்.

காணொளித் தயாரிப்பு போட்டியில் மூத்தோரின் துடிப்பான வாழ்வியலையும் குடும்பப் பிணைப்பையும் உணர்த்தும் வகையில் மாணவர்கள் காணொளிகளைப் படைத்திருந்தனர்.

விண்மீன்கள் எனும் தலைப்பில் செயற்கை நுண்ணறிவின் துணையுடன் காணொளி படைத்திருந்தார் ராஃபிள்ஸ் கல்வி நிலைய மாணவர் அக்‌‌ஷய் கிரு‌ஷ்ணா, 15. “இந்தப் போட்டிக்கான தயாரிப்பு மொழித்திறனையும் தொழில்நுட்பத்திறனையும் சோதிக்கும் நோக்கில் அமைந்தது சிறப்பானது,” என்றார் அவர்.

ஏறத்தாழ 90 மாணவர்கள் பங்கேற்ற இப்போட்டிகளுக்கான வெற்றியாளர்கள் விவரம் பின்னர் அறிவிக்கப்படும். வரும் நவம்பர் 9ஆம் தேதி நடைபெறவுள்ள பெரியார் சமூக சேவை மன்ற ஆண்டுவிழாவில் பரிசுகள் வழங்கப்படும்.

குறிப்புச் சொற்கள்