தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

செயற்கை நுண்ணறிவு கல்வியை பாதிக்கிறதா? ஆசிரியர்கள் பதில்

3 mins read
நந்தினி சுவாமிநாத ராஜா (pls liaise with Jana)
935c6998-2d08-478b-9a57-006efb0fc3e0
செயற்கை நுண்ணறிவுத் தளமான’சேட் ஜிபிடி’. - படம்: பிக்சாபே

எழுத்துலகில் செயற்கை நுண்ணறிவு ஏற்படுத்தியுள்ள தாக்கத்தையும் அதை எப்படித் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்தலாம் என்பதையும் தற்போதைய பள்ளி மாணவர்கள் நன்கு அறிவர் என்றே கூறலாம்.

இருந்தபோதும் செயற்கை நுண்ணறிவை எப்படிச் சரியாகப் பயன்படுத்தி, கற்றலை மேம்படுத்துவது என்பது குறித்து மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர் என முத்தரப்பிலிருந்தும் கேள்வி எழவேண்டும்.

சிங்கப்பூரின் கல்வி அமைச்சு கடந்த ஆண்டு தொடங்கிய தொழில்நுட்பம் வழியான கல்வித்துறை உருமாற்றத் திட்டம், கற்றல் அனுபவத்துடன் செயற்கை நுண்ணறிவுக் கூறுகளை மேலும் ஒன்றிணைக்கும் நோக்கத்தைக் கொண்டுள்ளது.

இந்தப் பெருந்திட்டம் வழியாக, மாணவர்களின் மின்னிலக்க அறிவை மேம்படுத்தக் கல்வியமைச்சு முனைகிறது. மின்னிலக்கத் தளங்களில் உள்ள தகவல்கள் துல்லியமானவையா, நம்பகத்தன்மை வாய்ந்தவையா, தேவையானவையா என்பன போன்ற அம்சங்களை ஆராய்வதற்கான மின்னிலக்க நிர்வாகத் திறன்களைக் கற்பிப்பது நோக்கமாகும்.

இதில், செயற்கை நுண்ணறிவின் குறை, நிறைகளைக் கற்பதுடன் கற்றலுக்கும் வேலைக்கும் அதை எவ்வாறு ஆக்கபூர்வமாகப் பயன்படுத்தலாம் என்பதையும் மாணவர்கள் தெரிந்துகொள்வர்.

செயற்கை நுண்ணறிவுத் தளங்கள், இன்றைய மாணவர்களுக்குத் தகவல்களை எடுத்துத் தரும் ‘மாற்று ஆசிரியர்களாக’ உள்ளன.

‘சேட் ஜிபிட்’ (Chat GPT), ‘கூகல் ஜெமினி’ (Google Gemini), ‘மைக்ரோசாஃப்ட் கோபைலட்’ (Microsoft Copilot ) போன்றவை இத்தகைய தளங்களில் சில.

மின்னிலக்கக் கல்வி மன்றத்தின் (Digital Education Council) அண்மைய கருத்தாய்வில், 86 விழுக்காட்டு மாணவர்கள் தங்கள் கல்விக்காகச் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துவதாகக் கூறியுள்ளனர்.

24 விழுக்காட்டினர் அன்றாடம் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துவதாகக் கூறுகின்றனர்.

கற்றலுக்குக் குறுக்குவழியா?

செயற்கை நுண்ணறிவை அதிகம் சார்ந்து அதைக் கட்டுப்பாடின்றிப் பயன்படுத்தினால், உண்மையான கற்றலுக்குத் தேவைப்படும் பொறுப்பு, பொறுமை, மீள்திறன் போன்ற பண்புகள் மாணவர்களிடத்தில் வலுப்பெறாமல் தேயக்கூடும் என்ற கவலைகள் நிலவுகின்றன.

‘ஏஐ’ தளங்கள் எல்லாப் பதில்களையும் தந்துவிட்டால், மாணவர்கள் பாட நூல்களைப் புரட்டி அறிவை அகலப்படுத்தும் பழக்கம் மங்கிப் போகக்கூடும்.

விரைந்து முடிக்கவேண்டிய நெருக்குதலை எதிர்கொள்ளும் மாணவர்கள், எளிய, விரைவான வழியாகச் செயற்கை நுண்ணறிவை நாடுவது இயல்புதான். அதைப் புரிந்துகொண்டு கல்வியாளர்கள் தங்கள் மதிப்பீட்டு முறையை மாற்றிக்கொள்ளவேண்டும் என்று சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகத்தின் மொழியியல், ஆங்கில இலக்கியப் பேராசிரியர் முனைவர் சித்ரா சங்கரன் கூறியுள்ளார்.

“மாணவர்கள் தங்கள் கட்டுரை அல்லது பணியில் பெரும்பகுதியைச் செயற்கை நுண்ணறிவுத் தளத்தைப் பயன்படுத்தி உருவாக்கும் ஆபத்தைக் குறைக்க, நாங்கள் இப்போது மாணவர்களிடம் கேட்கப்படும் கேள்விகளை மறுபரிசீலனை செய்கிறோம்,” என்றார் அவர்.

“பல துறைகளில், குறிப்பாக மானுடவியல் சார்ந்த துறைகளில், அதுவும் ஆங்கில இலக்கியம் போன்ற பாடங்களில், மாணவர்களுக்குக் கல்வியாளர்கள் விடுக்கும் கேள்விகளை மறுமதிப்பீடு செய்யவேண்டிய நிலை உருவாகியுள்ளது.

“சிந்தனையாற்றல், பகுப்பாய்வுத்திறன் ஆகியவற்றைச் சோதிக்கும் கேள்விகளை மாணவர்களிடம் கேட்கும்போது அவர்கள் அந்நேரத்தில் செயற்கை நுண்ணறிவை மட்டும் நம்பியிருக்க முடியாது. தங்கள் சொந்த அறிவாற்றலைத்தான் பயன்படுத்தவேண்டும்,” என்கிறார் முனைவர் சித்ரா.

செயற்கை நுண்ணறிவைத் தகவல் திரட்டும் கருவியாக மட்டும் பயன்படுத்தி, தகவல்களை ஆராய முற்படாத மாணவர்களின் கற்றல் மிகவும் மேலோட்டமானது என்றும் அவர் கூறுகிறார்.

எப்படிப் பயன்படுத்துகிறோம் என்பதில்தான் எல்லாம்

செயற்கை நுண்ணறிவு மாணவர்களின் கற்பனையைத் தூண்டி, புதிய யோசனைகளுக்கு வித்திடும் ஆற்றலையும் கொண்டுள்ளது.

புதிய கண்ணோட்டங்களை வழங்கவும் வாய்ப்புகளை விரிவுபடுத்தவும் உதவும் ஆற்றல் கொண்டுள்ள இந்தத் தொழில்நுட்பம், வழக்கமான எல்லைகளுக்கு அப்பாலும் செல்லப் படைப்பாளர்களுக்கு உதவக்கூடும் என்று ஆண்டர்சன் சிராங்கூன் தொடக்கக்கல்லூரித் தமிழ் ஆசிரியர் கலைவாணி இளங்கோ கருதுகிறார்.

“மாணவர்கள் படைப்பாற்றலுடன் சிந்தித்துத் தங்கள் கருத்துகளை வேறுபட்ட முறையில் வெளிப்படுத்துவதற்குச் செயற்கை நுண்ணறிவு ஊக்கமளிக்கிறது. தகவல்களை நினைவுகூரும் கருவியாகவும் இதைப் பயன்படுத்தலாம்,” என்று அவர் கூறுகிறார்.

செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தினாலும், அதற்கேற்ற மேற்கோள் தந்து மாணவர்கள் தங்கள் படைப்புகளின் உண்மைத்தன்மையைக் காப்பாற்றவேண்டும் என்கின்றனர் இந்தக் கல்வியாளர்கள்.

தொழில்நுட்பம் மாறினாலும் மனிதர்கள் கற்க முற்படும் எதையும் நன்கு புரிந்துகொண்டு, பிறருக்குப் பயன் அளிக்கக்கூடிய விதத்தில் ஆழமாக, முறையாகக் கற்றுக்கொள்ளவேண்டும் என்பதில் இவர்களுக்கு மாற்றுக்கருத்து ஏதுமில்லை.

குறிப்புச் சொற்கள்