தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

எலும்புநலம்: பால் மட்டுமே தீர்வாகாது

2 mins read
05c8202f-0888-4dfe-97a3-c7b72b1c2d11
எலும்பு வளர்ச்சிக்கும் வலிமைக்கும் கால்சியம் அவசியம். - படம்: ஃபிரீபிக்

எலும்புகளை வலுப்படுத்த பால் குடிப்பது அவசியம் என்பது பொதுவான நம்பிக்கை.

பள்ளிப் பாடங்கள், விளம்பரங்கள், பெற்றோரின் அறிவுரைகள் என அனைத்தும் இந்த நம்பிக்கையை வலுப்படுத்தியுள்ளன. இதற்கு முக்கியக் காரணம், கால்சியச் சத்துக்கு முக்கியத் தெரிவாகப் பால் கருதப்படுவதுதான்.

எலும்பு வளர்ச்சிக்கும் வலிமைக்கும் கால்சியம் அவசியம் என்பது உண்மைதான். ஆனால், அந்தத் தேவையை நிறைவுசெய்ய ஒரே வழி பால் மட்டுமன்று.

கீரை வகைகள், பாதாம், எள், டோஃபு முதலிய பலவற்றில் அதிக கால்சியம் உள்ளது. மீன்களில், சிறிய எலும்புகளு[Ϟ]டன் சாப்பிடக்கூடிய சார்டின், அஞ்சோவி போன்றவையும் கால்சியத்திற்குச் சிறந்த தெரிவுகள்.

அதிகமாகப் பால் குடிப்போர்க்கு எலும்புமுறிவால் பாதிக்கப்பட வாய்ப்பு குறைவு எனும் நம்பிக்கை அறிவியல் அடிப்படையில் உறுதிசெய்யப்படவில்லை. சில ஆய்வுகள் இதற்கு நேர்மாறான முடிவுகளைக் காட்டுகின்றன.

ஜப்பான், சீனா போன்ற நாடுகளைச் சேர்ந்த மக்கள் குறைவாகப் பால் அருந்தினாலும், எலும்புமுறிவால் அவர்கள் பாதிக்கப்படுவதும் குறைவாகவே உள்ளது. இதற்கு அவர்களது மரபார்ந்த உணவுப் பழக்கம், சுறுசுறுப்பான வாழ்க்கைமுறை போன்ற பல காரணிகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன.

அதுமட்டுமல்லாமல், எலும்புநலம் என்பது கால்சியத்தை மட்டும் சார்ந்ததன்று. உடலில் கால்சியத்தைச் சரியாக உறிஞ்சுவதற்கு வைட்டமின் டி முக்கியப் பங்காற்றுகிறது. ஆகையால், நாள்தோறும் குறைந்தது 15 முதல் 20 நிமிடங்கள் சூரிய ஒளியில் நேரம் செலவிடுவது எலும்புகளை வலுப்படுத்த மிகவும் பயனளிக்கும்.

மேலும், நடைப்பயிற்சி, ஓட்டம், யோகாசனம், எடை தூக்கும் பயிற்சிகள் போன்ற உடற்பயிற்சிகளும் எலும்புகளை வலுப்படுத்த உதவும். அதேபோல், புரதம், மெக்னீசியம், பாஸ்பரஸ் போன்ற சத்துகளும் எலும்புநலத்திற்குத் தேவையானவை.

தொடர்புடைய செய்திகள்

எலும்புநலத்தில் குழந்தைகள், முதியவர்கள், மாதவிடாய் அனுபவிக்கும் பெண்கள் ஆகியோர் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். வளரும் பருவத்தில் எலும்பு அடர்த்தி அதிகரிக்கும் நிலையில், வயதானபின் எலும்புகள் இயல்பாகவே பலவீனமடைகின்றன. குறிப்பாக, பெண்களுக்கு மாத[Ϟ]விடாய் நின்றபின் எலும்பு அடர்த்தி குறைய வாய்ப்புள்ளது. இதனால் எலும்புமுறிவுக்கான அபாயமும் அதிகரிக்கிறது.

பாலை விரும்பி அருந்துவோர் அதனை கால்சியச் சத்துக்கு ஒரு சிறந்த தெரிவாகக் கொள்ளலாம். ஆனால், பாலை விரும்பாதவர்கள் அல்லது அதை அருந்த முடியாதவர்கள், பிற உணவுப்பொருள்களிலிருந்தும் தேவையான அளவு கால்சியத்தைப் பெற முடியும்.

மொத்தத்தில், சமச்சீர் உணவு, ஒழுங்கான உடற்பயிற்சி, போதிய சூரிய ஒளி, நலவாழ்க்கைமுறை ஆகியவை ஒருங்கிணைந்தால் எலும்புகள் வலிமையாகும். எனவே, பால் அதில் ஓர் அங்கம்தான் என்பதால் அதனை மட்டுமே முழுமையான தீர்வாகக் கருத முடியாது.

குறிப்புச் சொற்கள்