தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

அன்றாடம் ஓர் ஆப்பிள் உண்டால் மருத்துவரைத் தவிர்க்கலாமா?

2 mins read
d670c453-1600-4507-8681-64bf4944bc58
அன்றாடம் ஓர் ஆப்பிள் உண்டால் மருத்துவரிடம் செல்லத் தேவையில்லை என்கிறது புகழ்பெற்ற பழமொழி. - படம்: ஃப்ரீபிக்

அன்றாடம் ஓர் ஆப்பிள் உண்டால் மருத்துவரிடம் செல்லத் தேவையில்லை என்ற பழமொழியை நாம் அறிவோம்.

இந்தச் சொற்றொடர், 1866ஆம் ஆண்டு எழுதப்பட்ட ஒரு வேல்ஸ் பழமொழியிலிருந்து மறுஉருவாக்கம் பெற்றது. உறங்கச் செல்வதற்குமுன் ஓர் ஆப்பிள் சாப்பிட்டால், மருத்துவரிடம் செல்லவேண்டிய தேவை இருக்காது என்பதே அந்தப் பழமொழி.

ஆனால், உண்மையில் ஆப்பிள் பழம், நம் உடல்நலனில் குறிப்பிடத்தக்க வகையில் ஆக்ககரமான தாக்கத்தை ஏற்படுத்துகிறதா என்று உங்களுக்குத் தெரியுமா?

ஆப்பிள், உயிர்ச்சத்துகள், நார்ச்சத்து, ஆன்டிஆக்சிடன்ட்கள் நிறைந்த ஒரு சத்தான பழம் என்பதை அறிவியல் ஆய்வுகள் உறுதிப்படுத்துகின்றன.

இதில் இடம்பெறும் பெக்டின் என்ற நார்ச்சத்து, ரத்தத்தில் கெட்ட கொழுப்பின் அளவைக் குறைக்கவும், நீரிழிவைச் சீராக்கவும் உதவுகிறது. மேலும், ஃபிளாவனாய்டுகள், பாலிஃபினால்கள் போன்ற தாவர ஊட்டச்சத்துக்கள் அழற்சியை எதிர்க்கும் சக்‌தியையும் ஆக்சிஜனேற்ற எதிர்ப்புப் பண்புகளையும் கொண்டுள்ளன.

அன்றாடம் ஆப்பிள் சாப்பிடுவது இதய நலத்தை மேம்படுத்தவும் உடல் எடையைக் கட்டுப்படுத்தவும் உதவுகிறது எனச் சில ஆய்வுகள் காட்டுகின்றன.

எடுத்துக்காட்டாக, ஆப்பிள் உட்கொள்ளுதல் நீரிழிவு வகை 2 ஏற்படும் அபாயத்தை 18 விழுக்காடு வரை குறைக்கலாம் என்று 2017ல் ஐந்து ஆய்வுகளை மதிப்பாய்வு செய்து வெளியிடப்பட்ட ஓர் அறிக்கை தெரிவிக்கிறது. மற்றோர் ஆய்வில், சில வாரங்களுக்கு அன்றாடம் ஆப்பிள் சாப்பிட்டவர்களின் ரத்தத்தில் கொழுப்பின் அளவு குறைந்திருந்தது கண்டறியப்பட்டது.

ஆப்பிள்களைத் தவறாமல் சாப்பிடுபவர்கள் பெரும்பாலும் ஆரோக்கியமான வாழ்க்கைமுறைகளைப் பின்பற்ற முயற்சி செய்பவர்கள் என்றும் ஆய்வுகள் கூறுகின்றன. அவர்கள் அதிகம் படித்தவர்களாகவோ, புகைப்பழக்கம் இல்லாதவர்களாகவோ உடலியக்கம் அதிகமுள்ளவர்களாகவோ இருக்கலாம். எனவே, ஒட்டுமொத்த உடல் நலத்திற்கு ஆப்பிள் பழம் உட்கொள்வது மட்டும் போதும் என்று கூறுவது உண்மையில்லை.

தொடர்புடைய செய்திகள்

அதுமட்டுமல்லாமல், நம் உடல்நலனுக்குத் தேவைப்படும் வைட்டமின் சி, இரும்புச்சத்து, கால்சியம் போன்ற மற்ற சில சத்துகள் ஆப்பிள் பழங்களில் குறைவாகவே உள்ளன.

இத்தகைய அம்சங்களைக் கருத்தில் கொண்டால், அன்றாடம் ஆப்பிள் உட்கொள்வதற்கும் மருத்துவரைக் காணும் தேவைக்கும் இடையிலான நேரடித் தொடர்பு குறைவு என்றே தோன்றுகிறது. மாறாக, ஒட்டுமொத்தமாக ஓர் ஆரோக்கியமான உணவுமுறையைப் பின்பற்றுவதுதான் ஆக்ககரமான தாக்கத்தை ஏற்படுத்தும்.

எனினும், ஆப்பிள் ஒரு சக்திவாய்ந்த, பரவலாகக் கிடைக்கக்கூடிய ஆரோக்கியமான உணவுப்பொருள். அதன் தோலில் நன்மை பயக்கும் சத்துகள் உள்ளதால், ஆப்பிளைத் தோலுடன் சாப்பிடும்போது அதிக ஊட்டச்சத்துக்களைப் பெறலாம். மேலும், பாரம்பரிய ஆப்பிள் வகைகள் நவீன வகைகளைவிட அதிக ஊட்டச்சத்துக்கள் இருப்பதாகக் கருதப்படுகிறது.

அன்றாடம் ஓர் ஆப்பிளைச் சாப்பிட்டால் மருத்துவரை முற்றிலும் தவிர்க்கலாம் என்பது உண்மையன்று என்றாலும், சீரான, தாவர அடிப்படையிலான உணவுமுறையின் ஒரு பகுதியாக இதைச் சேர்த்துக்கொள்வது நீண்டகால ஆரோக்கியத்திற்கு உதவும்.

இயற்கையான, ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளைத் தவறாமல் உட்கொள்வது நல்வாழ்வுக்கு வழிவகுக்கும்.

குறிப்புச் சொற்கள்