அறிமுகமில்லாதவருடன் பேசத் தயங்கவேண்டாம்

அறிமுகமில்லாதவருடன் பேசத் தயங்கவேண்டாம்

2 mins read
06bb6760-092a-4916-a2cc-1e39d32252ac
அறிமுகமில்லாத ஒருவருடன் உரையாடும் உங்களின் அடுத்த முயற்சி, உங்கள் மனநலத்திற்கு ஒரு சிறந்த பரிசாக அமையலாம். - படம்: பிக்சாபே

முன்பின் தெரியாதவருடன் சிரித்துப் பேசுவது ஒருவரது மனநிலையை மேம்படுத்தும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

துருக்கி, பிரிட்டன், ஜப்பான் போன்ற நாடுகளில் நடத்தப்பட்ட ஆய்வுகள், சமூக உறவுகளின் தாக்கத்தைப் பன்முகமாக எடுத்துக்காட்டுகின்றன.

உணவக ஊழியரிடம் சிரித்துப் பேசுவது, சாலையில் எதிர்கொள்ளும் ஒருவரிடம் வணக்கம் கூறுவது, பேருந்து ஓட்டுநர்க்கு நன்றி தெரிவிப்பது போன்ற சமூக ஊடாடல்கள் நம் நல்வாழ்விற்கு நன்மை என்பதை அவை உறுதிப்படுத்துகின்றன.

அத்தகைய செயல்கள், ‘நாம் தனியாக இல்லை, சமூகத்தின் ஓர் அங்கமாக இருக்கிறோம்’ என்ற மனநிறைவையும், மற்றவர்கள் நம்மைக் கவனிக்கிறார்கள் என்ற நம்பிக்கையையும் அளிக்கின்றன.

மனிதர்கள் அனைவர்க்கும் உறவு, நட்பு என்ற அடிப்படைத் தேவைகள் இருக்கின்றன. அவர்களது அன்றாடத் தொடர்புகள் அந்தத் தேவைகளை நிறைவேற்ற உதவுகின்றன.

எனினும், அறிமுகமில்லாதோருடன் பேச முயலும்போது, தம்மை மற்றவர் தவறாகப் புரிந்துகொள்வார்கள் என்ற அச்சம், எதையாவது தவறாகச் சொல்லிவிடுவோம் என்ற தயக்கம் போன்ற உணர்வுகள் பலரையும் தடுக்கலாம். மேலும், ‘அறிமுகமில்லாதவர்கள் ஆபத்தானவர்கள்’ என்ற பழைமையான சமூக நம்பிக்கையும் அதற்கொரு காரணமாக இருக்கலாம்.

இருப்பினும், பாதுகாப்பான, இயல்பான சூழலில், குறிப்பாக, பூங்கா, பேருந்து நிறுத்தம், நூலகம் போன்ற பொது இடங்களில் தயக்கத்தை உடைத்து, அறிமுகமில்லாத ஒருவருடன் உரையாட முயலலாம்.

உங்களைச் சுற்றியுள்ள சூழலைக் கவனியுங்கள். வானிலை, அவ்விடச் சூழல், நீங்கள் இருவரும் ஒரே நேரத்தில் அனுபவிக்கும் ஒன்றைப் பற்றி ஒரு சிறிய கருத்தைப் பகிருங்கள். இது உரையாடலுக்கான இயல்பான தொடக்கமாக அமையும்.

பயணத்தின்போது சந்திக்கும் ஒருவருடன், ‘நீங்கள் எங்கே செல்கிறீர்கள்?’, ‘முதல்முறையாக இங்கு வந்திருக்கிறீர்களா?’ என்பன போன்ற கேள்விகள் உரையாடலுக்கான சூழலை உருவாக்கும். பொதுவான கேள்விகளைக் கேட்கும்போது அவர்களும் பதிலளிக்க எளிதாக இருக்கும்.

மிக எளிதாகச் செய்யக்கூடிய உதவிகளை நீங்கள் அவர்களுக்கு வழங்கலாம். ‘உங்களுக்கு ஏதேனும் உதவி தேவைப்படுகிறதா?’ எனக் கேட்பது ஒருவருடன் நெருக்கத்தை உருவாக்கும். இது நீங்கள் அவர்மீது கொண்டுள்ள அக்கறையை வெளிப்படுத்தும் ஓர் அறிகுறியாகும்.

ஒருவர் அணிந்திருக்கும் ஆடை, அணிகலன்கள் போன்றவற்றைப் பற்றிய நேர்மையான பாராட்டுகளை அவரிடம் தெரிவிப்பது உரையாடலுக்கான கதவைத் திறக்கும்.

மிக முக்கியமாக, அவர்களின் பதில்களிலும் பகிரும் தகவல்களிலும் உண்மையான ஈடுபாட்டைக் காட்டுங்கள். கேள்வி கேட்பது மட்டும் போதாது. அதனுடன், அவர்களது பதிலைக் கவனமாகக் கேட்டு, அதற்கு மறுமொழி கூறுங்கள். அப்போதுதான் அந்த உரையாடல் அர்த்தமுள்ளதொரு தொடர்பாக மாறும்.

ஒரு சிறிய உரையாடல் என்பது ஒரு புதிய நினைவாக, ஒருவரின் நாளை சிறப்பாக மாற்றக்கூடிய வாய்ப்பாக மாறலாம். அறிமுகமில்லாத ஒருவருடன் உரையாடும் உங்களின் அடுத்த முயற்சி, உங்கள் மனநலத்திற்குச் சிறந்த பரிசாக அமையலாம்.

குறிப்புச் சொற்கள்