இந்த ஆண்டிறுதியில் அனைத்து வயதினரையும் கவரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள ‘டோப்பமின் லேண்ட்’ (Dopamine Land) எனும் பன்முக உணர்வு அனுபவக் கண்காட்சியை ரிசார்ட்ஸ் வேர்ல்ட் செந்தோசா வழங்கவுள்ளது.
லண்டன், மட்ரிட், துபாய், சாவ் பாலோ, வாஷிங்டன், பிரிஸ்பன், நியூஜெர்சி உள்ளிட்ட உலகின் பல நகரங்களில் பார்வையாளர்களை மகிழ்வித்த இந்த உலகளாவிய கண்காட்சி, தற்போது சிங்கப்பூருக்கு வந்துள்ளது.
வீவ் (WEAVE) கட்டடத்தின் இரண்டாவது தளத்தில் அமைந்துள்ள இந்தக் கண்காட்சி, ஒன்பது தனித்துவமான கருப்பொருள்களைக் கொண்ட அறைகளின் வழியாக ஒரு சுவாரசியமான பயணத்தை மேற்கொள்ளப் பார்வையாளர்களை அழைக்கிறது.
ஒவ்வோர் அறையும் நம் மூளையில் மகிழ்ச்சியைத் தூண்டும் ‘டோப்பமைன்’ ஹார்மோன் சுரப்பை ஊக்குவிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
துடிப்பான வண்ணங்களால் நிரம்பிய நியான் உலகமான ‘கலர்டோபியா’ (Colourtopia) அறையுடன் இந்த அனுபவம் தொடங்குகிறது. இங்குள்ள வண்ணமயமான காட்சிகள் பார்வையாளர்களை மெய்மறக்கச் செய்யும்.
கலை ஆர்வலர்கள் தங்களின் படைப்பாற்றலை ‘ஸ்கிரிபில்ஸ்கேப்’ (Scribblescape) அறையில் வெளிப்படுத்தலாம். இங்குச் சுவர்கள், தரை, தளவாடங்கள் என அனைத்தும் உங்கள் கற்பனைக்கு உயிரூட்டும் ஓவியத் திரைகளாக மாறுகின்றன.
நூற்றுக்கணக்கான ஒளிரும் பலூன்களும் வண்ணமயமான ஒளிகளும் நிறைந்த ‘நியான் நெபுலா’ (Neon Nebula) அறை, மென்மையான அமைப்புடைய சுவர்களைக் கொண்ட ‘கேவ் ஆஃப் டாக்டிலிட்டி’ (Cave of Tactility) அறை ஆகியவை முக்கியச் சிறப்பம்சங்களாக இடம்பெறுகின்றன.
ஆடலும் பாடலும் நிறைந்த ‘குரோமாடான்ஸ்’ (Chromadance) அறை, அந்திப் பொழுதின் அழகை நினைவூட்டும் பொன்னிறப் பந்துக் குளத்துடன் கூடிய ‘சன்செட் லகூன்’ (Sunset Lagoon) அறை ஆகியவை பார்வையாளர்களை உற்சாகத்தில் ஆழ்த்துவதற்காக இந்தக் கண்காட்சியில் இடம்பெறுகின்றன.
தொடர்புடைய செய்திகள்
‘குஷன் கிளாஷ்’ (Cushion Clash) அறையில் தலையணைச் சண்டையில் ஈடுபட்டு மகிழலாம். நான்கு பருவகாலங்களின் அனுபவத்தை ஒருங்கே வழங்கும் ‘யூஃபோரியா குரோவ்’ (Euphoria Grove) அறை அமைதியையும் மனநிறைவையும் அளிக்கிறது.
நட்சத்திரங்களும் விண்மீன் மண்டலங்களும் சூழ்ந்த கண்ணாடி உலகமான ‘காஸ்மிக் ஒயாசிஸ்’ (Cosmic Oasis) அறையில் இந்தக் கண்காட்சி நிறைவடைகிறது.
சாகசத்தை விரும்புவோருக்கு, கூடுதல் கட்டணத்தில் 3 நிமிட மெய்நிகர் தொழில்நுட்பச் சவாரி அனுபவமும் வழங்கப்படுகிறது. மேலும், தனித்துவமான டோப்பமின் லேண்ட் சட்டங்களுடன் உடனடிப் புகைப்படங்களை நினைவுப் பரிசாக (instant film souvenirs) எடுத்துச் செல்லும் வசதியும் உள்ளது.
இந்தக் கண்காட்சி புதன்கிழமை (டிசம்பர் 24) தொடங்குகிறது. செவ்வாய்க்கிழமை தவிர, புதன்கிழமை முதல் திங்கட்கிழமை வரை காலை 11 மணி முதல் இரவு 9 மணிவரை பார்வையாளர்களுக்கு இது திறந்திருக்கும்.
சுமார் 50 நிமிடங்கள் நீடிக்கும் இந்த அனுபவத்திற்கான நுழைவுக் கட்டணம் $14 முதல் தொடங்குகிறது.
சக்கர நாற்காலி பயன்படுத்துவோருக்கான சிறப்பு வசதிகள் உள்ளன. இருப்பினும், குறிப்பிட்ட சில அறைகளில் மட்டும் சிறிய கட்டுப்பாடுகள் இருக்கலாம் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
கூடுதல் விவரங்களுக்கும் முன்பதிவுக்கும் dopaminelandexperience.com/singapore என்ற இணையத்தளத்தை அணுகலாம்.

