பொறுத்தார் பூமி ஆள்வார்

2 mins read
c404d74f-d831-4a35-9509-738fb9c1de40
நவீன தொழில்நுட்பம் உருவானதைத் தொடர்ந்து, மனிதன் ஆசைப்படும் அனைத்தும் ஒரு பொத்தானை அழுத்தினாலே உடனடியாகக் கிடைக்கும் நிலைமை ஏற்பட்டுள்ளது. - படம்: ஃப்ரீபிக்‌

மாறிவரும் காலத்திற்கேற்ப மனிதர்களின் வாழ்க்கைமுறையும் மாறிவிட்டது. நவீன தொழில்நுட்பம் உருவானதைத் தொடர்ந்து, மனிதன் ஆசைப்படும் அனைத்தும் ஒரு பொத்தானை அழுத்தினாலே உடனடியாகக் கிடைக்கும் நிலைமை ஏற்பட்டுள்ளது.

‘இன்ஸ்டன்ட் க்ராடிபிகேஷன்’ என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் உடனடி மனநிறைவு என்பது நீண்டகால விளைவுகளைப் பரிசீலிக்காமல், ஒருவர் ஆசைப்பட்ட ஒன்றை உடனடியாக அடைந்து மகிழ்ச்சியாக இருக்கவேண்டும் என்ற எண்ணத்தைக்‌ குறிக்கிறது.

இதற்கு மாறாக, தாமதமான மனநிறைவு என்பது எதிர்காலத்தில் அதிக வெகுமதியைப் பெறுவதற்காக நம் உடனடி விருப்பத்தை அல்லது ஆசையை ஒத்திவைப்பதாகும். ‘டிலேயிட் க்ராடிபிகேஷன்’ என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் இந்த மனப்பான்மைக்குச் சுயக் கட்டுப்பாடு மிகவும் அவசியம்.

1960ல் ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த வால்டர் மிஸ்செல் என்ற ஆய்வாளர், ‘தி மார்ஷ்மெல்லோ எக்‌ஸ்பெரிமெண்ட்’ (The Marshmallow Experiment) என்ற ஆராய்ச்சியை மேற்கொண்டார்.

பூட்டப்பட்ட அறையில் சிறுவர்களைத் தனித்தனியாக உட்காரவைத்து, அவர்களின்முன் ஒரு வகையான இனிப்புப் பொருள் வைக்‌கப்பட்டது. சிறுவர்களுக்‌கு இரண்டு வகையான தேர்வுகள் கொடுக்கப்பட்டன. அதாவது, வைக்கப்பட்ட இனிப்பை உடனடியாகச் சாப்பிடலாம் அல்லது 15 நிமிடங்கள் அந்த இனிப்பைத் தொடாமல் காத்திருந்தால், இரண்டு இனிப்புகள் கிடைக்கும்.

சிறுவர்களில் சிலர் பொறுமையின்றி உடனடியாக இனிப்பை எடுத்துச் சாப்பிட்டனர். சிலர் பொறுமையாகக் காத்திருக்க முயன்று அது முடியாமல் கால அவகாசம் முடிவதற்குள் இனிப்பை எடுத்துச் சாப்பிட்டனர். இறுதியில் சில சிறுவர்கள் மட்டுமே பொறுமையாகக் காத்திருந்து 15 நிமிடம் முடிந்த பிறகு இரண்டு இனிப்புகளைப் பெற்றனர்.

அதைத்தொடர்ந்து அந்த ஆராய்ச்சியில் பங்கெடுத்த சிறுவர்களின் வாழ்க்கை அடுத்த 10 ஆண்டுகளுக்குக்‌ கூர்ந்து கவனிக்கப்பட்டது.

ஆராய்ச்சியின் இறுதியில், 15 நிமிடங்கள் பொறுமையைக்‌ கடைப்பிடித்து, இரண்டு இனிப்புகளைப் பெற்ற சிறுவர்கள், இனிப்பை உடனடியாகச் சாப்பிட்டவர்களைவிட வாழ்க்கையில் உயர்ந்த நிலைக்கு வந்தனர் என்று கண்டுபிடிக்கப்பட்டது.

அந்த ஆராய்ச்சியின் கண்டுபிடிப்புகள் பெரியவர்களுக்கும் பொருந்தும் என்று சொன்னால் அது மிகையாகாது. பலகாரம், இனிப்பு என்பதற்குப் பதிலாக பெரியவர்களின் கவனத்தைச் சிதறடித்து, ஒரு செயலைச் செய்யத் தூண்டும் பல விஷயங்கள் இருக்கின்றன.

உற்று நோக்கினால் உடனடி மனநிறைவு, தாமதமான மனநிறைவு இரண்டிலும் குறைநிறைகள் உள்ளன.

உடனடி மனநிறைவு, உடனடி இன்பத்தை அளிப்பதால் இது மனிதனின் மனநிலையை மேம்படுத்தி மன அழுத்தத்தைக் குறைக்கிறது. மேலும், சில அனுபவங்கள் தற்போதைய தருணத்தில் மட்டுமே கிடைக்கும் என்பதால் உடனடியாகச் செயல்பட நேரிடலாம்.

அதேபோல், தாமதமான மனநிறைவு நீண்டகால வெற்றியை அடைவதற்கும் பொறுமையை வளர்ப்பதற்கும் ஒரு சிறந்த கருவியாக அமைகிறது என்றாலும் சில சமயங்களில், விடாமுயற்சியுடன் செயல்பட்டிருந்தாலும் நம் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்ட வெளிப்புற காரணங்களால் எதிர்பார்த்தபடி பலன்களைப் பெறாமல் போகலாம். மேலும், தற்போதைய தருணத்தில் வெற்றியைத் தரக்கூடிய வாய்ப்புகளை இழக்கக்கூட நேரிடலாம்.

இந்நிலையில், குறுகியகால ஆசைகளுக்கும் நீண்டகால இலக்குகளுக்கும் இடையே சமநிலையைக்‌ கண்டறிந்து பயணிக்கக் கற்றுக்கொண்டால், நமது வாழ்க்கையை வெற்றிகரமாகவும் சீராகவும் அமைத்துக் கொள்ளலாம்.

குறிப்புச் சொற்கள்