உங்கள் திறன்பேசியில் செய்தி உள்நுழையும் ஒலி கேட்கிறது. சந்தை அபாயங்கள் ஏதுமில்லாமல் அதிக லாபம் தரும் முதலீடுகளை ஊக்குவிக்கும் ‘வாட்ஸ்அப்’ குழுவில் இணைக்கப்பட்டுள்ளீர்கள்.
குழுவின் பிற உறுப்பினர்கள் தங்களின் லாபம் குறித்து விவரிப்பதுடன் உங்களையும் அவர்களுடன் இணைந்து செயல்படுமாறு வலியுறுத்துகின்றனர். சிலருக்கு இது ஆபத்தானது என்று தெரிந்திருக்கலாம். எனினும், இன்னும் பலர் இந்த வலைகளில் சிக்கி மோசடிக்கு உள்ளாகின்றனர்.
இவ்வகை முதலீட்டு மோசடிகளில் சிக்குவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதை சிங்கப்பூர்க் காவல்துறையின் புள்ளி விவரங்கள் சுட்டிக்காட்டுகின்றன. கடந்த ஆண்டின் முதல் பாதியில் 1,577 ஆக இருந்த முதலீட்டு மோசடி வழக்கு எண்ணிக்கை இருமடங்கு அதிகரித்து இவ்வாண்டு 3,330ஆகப் பதிவாகியுள்ளது.
அப்பாவிப் பொதுமக்களின் பணத்தை அதிக அளவில் கொள்ளையடிக்கும் வகையிலான மோசடி இது. இதற்கு முன் இதில் சிக்கியோரின் வழக்குகள் அடிப்படையில் சராசரியாக ஒவ்வொருவரும் $40,080 இழந்துள்ளனர். அரசாங்க அதிகாரிகள் போல பேசி, மிரட்டி பணம் பறிக்கும் கும்பலிடம் சிக்கியோர் சராசரியாக $116,534 இழந்துள்ளனர்.
பொதுமக்கள் இந்த முதலீட்டு மோசடிகளில் சிக்குவது ஏன்? எதனால் அதிக அளவு இழப்புகள்?
ஒருவரிடம் நட்பாகப் பழகி, நம்பிக்கையை ஏற்படுத்தி, பின்னர் பணம் பறிக்கும் சிக்கலான முறையே இந்த முதலீட்டு மோசடிக்கு அப்பாவி மக்கள் ஆளாவதற்கு முக்கியக் காரணம் என்றார் சிங்கப்பூர்க் காவல்துறையின் ஊழல் பொதுக் கல்வி அலுவலக செயல்பாட்டுத் துறை உதவி இயக்குநர் ரோஸி ஆன் மெக்கின்டைர்.
“மோசடிக் கும்பல் ஏற்படுத்தும் நம்பிக்கையின் பேரில் கணிசமான அளவில் பலமுறை பணம் அனுப்புவதால் இழப்புகளும் அதிகம் ஏற்படுகின்றன” என்றார் அவர்.
சிங்கப்பூரில் பரவலாக உள்ள மூன்று முதலீட்டு மோசடி வகைகளை காவல்துறையினர் அடையாளம் கண்டுள்ளனர்:
தொடர்புடைய செய்திகள்
தகவல் தொடர்பு ஊடகக் குழுக்கள்:
டெலிகிராம், ஃபேஸ்புக், வாட்ஸ்அப் உள்ளிட்ட தகவல் தொடர்புத் தளங்களில் பொதுமக்களை இணைக்கின்றனர் மோசடிப் பேர்வழிகள். அதில் அதிக லாபம் தரும் முதலீடு வாய்ப்புகள் குறித்து விளம்பரம் செய்யப்படுகிறது. அதன்மீது நம்பகத்தன்மை ஏற்படும் வண்ணம் மோசடி செய்பவர்களே குழுவின் பிற உறுப்பினர்கள் போல பேசி, அவர்கள் ஈட்டிய ‘லாபம்’ தொடர்பான போலி திரைச்சுடுவைப் (Screenshot) பகிர்கின்றனர்.
நட்பு ஏற்படுத்தி ஏமாற்றுவது:
முதலில், சமூக ஊடங்களின் வழியே அப்பாவிப் பொது மக்களைத் தொடர்பு கொண்டு நட்புறவை ஏற்படுத்திக் கொள்கின்றனர் மோசடிப் பேர்வழிகள். தொடக்கத்தில் நல்லவர் போலப் பேசி நம்பிக்கையை வளர்த்து, முதலீடு செய்ய வலியுறுத்துகின்றனர்.
முதல் சில முறை குறைவான அளவு முதலீட்டைப் பெற்று, லாபத்தைக் கொடுக்கின்றனர். அதனை உண்மையென நம்பி அப்பாவி மக்கள் அதிக அளவில் முதலீட்டை மேற்கொள்கின்றனர்.
பாதிக்கப்பட்டோர், நிர்வாகக் கட்டணம் எனும் பேரில் பணத்தை இழந்தபின்னரும், பெற்ற ‘லாபத்தை’ பெற முடியாமல் போன பின்னருமே ஏமாற்றப்பட்டதை உணர்கின்றனர்.
இணைய விளம்பரங்கள்:
இணையப் பக்கங்களிலும், சமூக ஊடகங்களிலும் பொதுமக்களின் கவனத்தை ஈர்க்கும் வண்ணம் வரும் முதலீட்டு விளம்பரங்கள் செய்கின்றனர் மோசடிப் பேர்வழிகள். பிரபலங்களும், அரசியல் பிரமுகர்களும் இவ்வகை முதலீட்டு வாய்ப்புகளை ஊக்குவிப்பது போன்ற போலிச் செய்திகளையும் விளம்பரம் செய்து பொதுமக்களை மோசடி வலையில் விழ வைக்கின்றனர்.
மோசடிகளிலிருந்து எவ்வாறு பாதுகாத்துக் கொள்வது?
“போதிய சோதனைகள் மேற்கொள்ளாமல் நிதிச் சேவைகளையோ, நிதிச் சேவை வழங்கும் நபரையோ நம்ப வேண்டாம்” என்று அறிவுறுத்தினார் சிங்கப்பூர் நாணய ஆணைய பேச்சாளர்.
நாணய ஆணையத்துக்குட்பட்ட ஒழுங்குமுறையைப் பின்பற்றும் நபர்களுடனும் அமைப்பிடனும் மட்டுமே முதலீடு குறித்த பரிவர்த்தனைகளை மேற்கொள்ளுமாறும், அதுவே பாதுகாப்பானது என்றும் ஆணையம் வலியுறுத்தியுள்ளது.
“ஒரு நிறுவனத்தை நாடும்போது, அதன் பதிவு விவரங்கள், இதுவரை வழங்கியுள்ள சேவைகள், அவற்றுக்கான ஆதாரங்கள், அந்நிறுவனத்தின் அதிகாரிகள், பிரதிநிதிகள், அவர்களின் பின் விவரங்கள் உள்ளிட்டவற்றைக் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்” என்றும் கூறினார் ஆணையப் பேச்சாளர்.
எப்போதும் பிரதிநிதிகளை நேரில் சந்திக்கும் வழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுமாறும் கூறினார்.
அங்கீகரிக்கப்படாத நிதி சேவைகளை நாடினால், அதனால் ஏற்படும் சிக்கலைத் தடுப்பதும், பணமிழப்பு ஏற்பட்டால் அதனை மீட்டெடுப்பதும் மிகவும் சிரமமானது என்றும் அவர் சொன்னார்.
சிங்கப்பூர் நாணய ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களின் பட்டியலையும், அவர்கள் வழங்கும் அதிகாரபூர்வ சேவைகள் குறித்தும் eservices.mas.gov.sg/fid எனும் இணையத்தளம் மூலம் தெரிந்துகொள்ளலாம்.
எச்சரிக்கை அறிகுறிகள்:
முதலீட்டு மோசடி குறித்து தேசிய நிதிக்கல்வித் திட்டம் (‘மணி சென்ஸ்’) சுட்டிக்காட்டும் சில எச்சரிக்கை அறிகுறிகள்:
அபாயமே இல்லாத அதிக வருமானம்
மூலதனத்திற்குச் சற்றும் பாதிப்பு ஏற்படுத்தாமல் அதிக லாபம் தரும் ‘முதலீட்டு’ வாய்ப்புகள்.
துரிதப்படுத்தும் சலுகைகள்
குறிப்பிட்ட நாள்களுக்குள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் எனும் ரீதியில் பரிசுப் பொருள்கள், சலுகைகள் அளித்து முதலீடு செய்யத் துரிதப்படுத்தும் வாய்ப்புகள்.
ஆள்சேர்ப்புச் சலுகைகள்
ஒருவர் தங்களது நண்பர்கள் உறவினர்களை இணைத்தால் கூடுதல் சலுகைகள் வழங்கும் வாய்ப்புகள். இவை மோசடியில் சிக்கும் நபர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கின்றன.
போலி ஆதாரங்கள்
பல ஆண்டு அனுபவம் உள்ளதாகப் போலியான ‘பயன்பெற்ற வாடிக்கையாளர்களின்’ பாராட்டுக்கள், சான்றுகள் மூலம் நம்ப வைக்கும் சேவைகள்.
உங்கள் நிதியைப் பாதுகாப்பாக வைத்திருக்கவும்
ஸ்கேம்ஷீல்டையும் பாதுகாப்பு அம்சங்களையும் சேர்க்கவும்
- ஸ்கேம்ஷீல்டு செயலியைப் பதிவிறக்கம் செய்து மோசடி அழைப்புகளிலிருந்தும் குறுஞ்செய்திகளிலிருந்தும் பாதுகாத்துக்கொள்ளுங்கள்.
- குறுஞ்செய்தி செயலிகளுக்கு தடுப்பு முறைகளை ஏற்படுத்தி உங்களை அறியாதோர் உங்களை தொடர்புக் குழுக்களில் சேர்ப்பதைத் தடைசெய்யுங்கள்.
- இணைய, திறன்பேசி வங்கிப் பரிவர்த்தனை வரம்புகளை மறுபரிசீலித்து குறைக்க முற்படுங்கள். ஈரடுக்கு, பலஅடுக்கு கண்காணிப்பை முடுக்கிவிடுங்கள்.
- ‘மணி லாக்’ தெரிவை முடுக்கு சேமிப்பின் ஒரு பகுதியைப் பாதுகாத்திடுங்கள்.
மோசடிக்கான அறிகுறிகளை அடையாளம் காணவும்
- தெரியாதவரிடமிருந்து குறுஞ்செய்தியோ அழைப்போ வந்து முதலீட்டு வாய்ப்புகள் வழங்கப்பட்டால் எச்சரிக்கையாக இருங்கள்.
- சிங்கப்பூர் நாணய ஆணைய இணையப்பக்கம் உள்ளிட்ட வளங்கள் மூலம் அவர் கூறும் அமைப்பின் நம்பகத்தன்மையை உறுதிசெய்யுங்கள்.
- நிறுவனத்தின் அதிகாரபூர்வ எண்ணில் தொடர்புகொண்டு உறுதிசெய்யுங்கள்.
- உங்களின் நிலை மோசடியாக இருக்குமோ என்ற சந்தேகம் ஏற்பட்டால் 1800-722-6688 எனும் எண்ணில் மோசடித் தடுப்பு உதவியை நாடுங்கள்.
அதிகாரிகள், குடும்பத்தினர், நண்பர்களிடம் சொல்லவும்
- மோசடி பரிவர்த்தனைகளை வங்கியிடம் உடனே தெரிவித்து காவல்துறையிடம் புகாரளியுங்கள்.
- ஆக அண்மைய மோசடித் தடுப்பு ஆலோசனைகளுக்கு தேசியக் குற்றத் தடுப்பு மன்றத்தின் ScamAlert வாட்ஸ்அப் பக்கத்தைப் பின்தொடர்ந்து அதனை குடும்பத்தினர், நண்பர்களுடன் பகிருங்கள்..