தேநீர், காப்பி பானங்களில் பால் சேர்ப்பதன் விளைவுகள்

2 mins read
15ce34d1-cf50-4113-9a63-71b4a0eef741
பால் சேர்த்தோ சேர்க்காமலோ எவ்வாறாயினும் அளவோடு தேநீர், காப்பி அருந்துவது சிறந்தது. - படம்: பிக்சாபே

ஒரு நாளை உற்சாகத்துடன் தொடங்க காப்பி அல்லது தேநீர் அருந்தும் பழக்கம் பலருக்கும் உள்ளது. பணியிடத்தில் சுறுசுறுப்பாகச் செயல்பட, இத்தகைய பானங்கள் அடங்கிய கோப்பையை அருகில் வைத்துக்கொண்டே பணிபுரியும் பழக்கமும் பரவலாகக் காணப்படுகிறது.

ஒற்றைத் தலைவலி (Migraine), குளிர், பதற்றம், மனஅழுத்தம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளுக்கு மருந்தாகவும் காப்பி அல்லது தேநீரைப் பலர் கருதுகின்றனர்.

உடல்நலத்துக்கும் காப்பி, தேநீர் போன்றவற்றுக்குமான தொடர்பு குறித்துப் பல்வேறு கருத்துகள் நிலவினாலும், அவற்றில் சேர்க்கப்படும் பால், சர்க்கரை உள்ளிட்டவை பேசுபொருளாக இருக்கின்றன. காப்பி, தேநீர் போன்ற பானங்களில் சாதாரணமான பால், கெட்டிப் பால் (Condensed milk), தண்ணீர்ப் பால் (Evaporated milk) போன்ற விதவிதமான பால் சேர்த்துப் பலர் அருந்தினாலும் எதுவும் சேர்க்காமல் அருந்துபவர்களும் உண்டு. இவற்றில் எது உடல்நலத்துக்கு ஏற்றது என்பது குறித்த கேள்விகளும் அவ்வப்போது எழுகின்றன.

தேநீர்

தேநீரில் காணப்படும் ‘பாலிஃபினால்’ என்ற வேதிப்பொருள் ‘வைட்டமின் டி’ உற்பத்திக்குத் துணைபுரிகிறது. இது எலும்புகளின் அடர்த்தி குறைதல், தேய்மானம் உள்ளிட்ட பிரச்சினைகளைத் தள்ளிப்போடுகிறது. செரிமானத்திற்கு உதவுவதுடன் ரத்த அழுத்தத்தையும் சீராக்குகிறது.

பாலில் காணப்படும் கால்சியம், பற்களின் ஆரோக்கியத்துக்கும் நோய் எதிர்ப்பு மண்டலத்தை மேம்படுத்தவும் உதவுகிறது. சைவ உணவு மட்டும் உட்கொள்வோர்க்குப் பாலில் இருக்கும் புரதம் நன்மையளிக்கிறது.

பால் சேர்க்காத தேநீரில் ‘தியேஃபிளேவின்ஸ்’ (Theaflavins) எனும் வேதிப்பொருள் உள்ளது. இது கொழுப்பைக் கட்டுப்படுத்துகிறது. மேலும், இதிலுள்ள ஃபிளேவனாய்ட்ஸ் (Flavonoids) இதயநோய் ஏற்படாமல் காக்க உதவுகிறது. பால் இல்லாத தேநீர் எடைக் குறைப்பில் ஈடுபடுவோருக்குச் சிறந்த தேர்வாகும்.

காப்பி

காப்பியில் ‘கஃபைன்’ வேதிப்பொருள் அதிகம் காணப்பட்டாலும் அதில் சில நன்மைகளும் இருக்கின்றன. சரியான அளவில் உட்கொண்டால் அதன் பலனை அனுபவிக்கலாம் என்பது நிபுணர்களின் கருத்து.

இந்த வேதிப்பொருள் ரத்தத்தில் சேரும் சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்த உதவும். மரபணு சார்ந்த சில சிக்கல் ஏற்படும் வாய்ப்புகளைக் குறைக்கிறது ‘கஃபைன்’. மேலும், சருமத்திற்குப் பொலிவூட்டி, முடி உதிர்வைக் கட்டுப்படுத்தவும் அது உதவும்.

ஆனால், கஃபைனை அதிக அளவில் உட்கொண்டால் அது இதயத்துடிப்பை அதிகரித்து, ரத்த அழுத்தத்தையும் அதிகரிக்கிறது. எனவே, ஒருநாளைக்கு அதிகபட்சம் 250 மில்லிகிராம் வரை ‘கஃபைன்’ உட்கொள்ளலாம் எனப் பரிந்துரைக்கின்றனர் மருத்துவர்கள். ஆன்டிஆக்ஸிடன்ட், பொட்டாசியம் போன்ற சத்துகளும் காப்பியில் காணப்படுகின்றன.

பால் சேர்க்காத தேநீர், காப்பி அருந்துவது சிறந்தது என ஊட்டச்சத்து நிபுணர்கள் கருதுகின்றனர். எந்தவித உடல்நலக் கோளாறுகளும் இல்லாத சராசரி வயதுடையவர்கள் பால் சேர்த்துக்கொள்வதில் பிரச்சினை இல்லை என்றும் அவர்கள் கூறுகின்றனர்.

குறிப்புச் சொற்கள்