சருமத் தொற்றால் அவதிப்படுவோர்க்கு உணவு முறை குறித்த குழப்பம் எழுவது இயல்பு. குறிப்பாக, புரதச்சத்து நிறைந்த முட்டையை உட்கொள்வது சருமத் தொற்றை மேலும் தீவிரமாக்குமா என்ற கேள்வி பலருக்கும் உள்ளது.
புதுடெல்லியைச் சேர்ந்த சருமப் பராமரிப்பிற்கான மருத்துவர் நீரஹரிகா கோயல், பொதுவாக முட்டை சாப்பிடுவது சருமத் தொற்றை மோசமாக்காது எனக் கூறியுள்ளார்.
மேலும், “பெரும்பாலானோர்க்கு முட்டை சாப்பிடுவதால் தொற்று தீவிரமடையாது. முட்டையில் உள்ள புரதம், வைட்டமின்கள், தாதுக்கள் ஆகியவை உடலின் செயல்முறைக்குத் துணைபுரியும் உணவாகும். இருப்பினும், முட்டை ஒவ்வாமை உள்ளவர்களுக்கு அதனை உட்கொண்ட பிறகு சருமத்தில் சில பிரச்சினைகள் ஏற்படலாம்,” என அவர் தெரிவித்துள்ளார்.
முட்டை சருமத்தில் எதிர்வினைகளை ஏற்படுத்துமா?
டாக்டர் கோயலின் கூற்றுப்படி, முட்டை சாப்பிட்ட பிறகு சிலருக்குச் சருமத்தில் எரிச்சல், தடிப்புகள், அரிப்பு அல்லது வீக்கம் ஏற்படலாம்.
நுண்ணுயிரிகள், பூஞ்சை அல்லது கிருமிகள் ஆகியவற்றால் ஏற்படும் சருமத் தொற்றிலிருந்து இது முற்றிலும் மாறுபட்டது.
ஒவ்வாமை என்பது உடலின் நோய் எதிர்ப்பு மண்டலம் ஒரு குறிப்பிட்ட பொருளுக்குக் காட்டும் எதிர்வினையாகும்; ஆனால், சருமத் தொற்று என்பது தீங்கிழைக்கும் நுண்ணுயிரிகள் தோலைப் பாதிக்கும்போது ஏற்படுகிறது.
எனவே, முட்டை சாப்பிட்ட பிறகு சருமத்தில் மாற்றம் ஏற்பட்டால், அது தொற்றின் தீவிரம் அல்ல, மாறாக உணவு ஒவ்வாமையின் அறிகுறியாக இருக்கலாம்.
சருமத் தொற்றுக்கான காரணம்
நுண்ணுயிரி, பூஞ்சை, கிருமிகள் ஆகியவை சருமத் தொற்றுக்கான முதன்மைக் காரணங்களாகும்.
காயங்கள், வெட்டுகள், பூச்சிகடிகள் அல்லது சேதமடைந்த தோலின் வழியாகக் கிருமிகள் உடலுக்குள் நுழையும்போது தொற்றுகள் உருவாகின்றன. அவை, வீக்கத்தையும் பிற அறிகுறிகளையும் ஏற்படுத்துகின்றன.
பூஞ்சை தொற்றுகள் வெப்பமும் ஈரப்பதமும் நிறைந்த சூழலில் எளிதில் வளர்கின்றன. அவை பாதம், இடுப்புப் பகுதி அல்லது தோலின் மடிப்புகளில் ஏற்படக்கூடும். கிருமித் தொற்றுகள் சருமத்தில் கொப்புளங்கள் அல்லது புண்களை உருவாக்கலாம்.
தொற்றுக்கான காரணத்தைப் புரிந்துகொள்வது அவசியம், ஏனெனில் சிகிச்சை முறையானது பாதிப்பை ஏற்படுத்திய கிருமியைப் பொறுத்தே அமையும்.
தொற்றின் அறிகுறிகள்
சருமத் தொற்றின் காரணத்திற்கும் தீவிரத்திற்கும் ஏற்ப அறிகுறிகள் மாறுபடும். சிவந்துபோதல், பாதிக்கப்பட்ட பகுதியில் கதகதப்பு அல்லது வெப்பம், வீக்கம், வலி, அரிப்பு, சீழ் அல்லது திரவக் கசிவு, காய்ச்சல் ஆகியவை சருமத் தொற்றுக்கான பொதுவான அறிகுறிகளாகும்.
அனைத்துச் சருமத் தொற்றிலும் இந்த அனைத்து அறிகுறிகளும் இருக்கும் எனக் கூற முடியாது. இருப்பினும், சருமத் தோற்றத்தில் ஏற்படும் மாற்றத்துடன் வலி, வீக்கம், சீழ்க் கசிவு அல்லது காய்ச்சல் அதிகரித்தால் அதனை அலட்சியப்படுத்தக் கூடாது.
சருமத் தொற்று இருக்கும்போது முட்டை சாப்பிடலாமா?
சருமத் தொற்று ஏற்பட்டதால் உணவிலிருந்து முட்டையை நீக்க வேண்டிய அவசியமில்லை.
உடல் புத்துயிர் பெற தேவையான புரதம், வைட்டமின்கள், தாதுக்கள் ஆகியவற்றை முட்டை வழங்குகிறது. நோய்வாய்ப்பட்டிருக்கும் போது சரியான ஊட்டச்சத்து மிகவும் முக்கியம்.
இருப்பினும், முட்டை சாப்பிடும் போதெல்லாம் சருமத்தில் அறிகுறிகள் தென்பட்டால், உடனடியாக அதனைத் தவிர்க்காமல் மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது நல்லது. அந்த எதிர்வினை ஒவ்வாமையா அல்லது வேறு சருமப் பிரச்சினையா என்பதைக் கண்டறிய மருத்துவர் உதவுவார்.
ஆரம்பக்கட்டப் பரிசோதனை தொற்றின் காரணத்தைக் கண்டறிந்து உரிய சிகிச்சை பெற உதவும் என டாக்டர் கோயல் குறிப்பிட்டார்.
