தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

முட்டை மிகச் சிறந்த புரதச்சத்துத் தெரிவு: வல்லுநர்கள்

2 mins read
2d3247a8-605b-4454-9f95-36d835a3d4c4
முட்டையில் ஒருவருக்கு மாரடைப்பையோ பக்கவாதத்தையோ ஏற்படுத்தக்கூடிய அளவில் கொழுப்பு இல்லை என்கின்றனர் வல்லுநர்கள்.  - படம்: ஏஎஃப்பி

ஊட்டச்சத்து நிபுணர்கள் பலர் முட்டை மிகச் சிறந்த புரதச்சத்துத் தெரிவு என்கின்றனர்.

இறைச்சி, கோழி, மீன் வகைகளைவிட மலிவான விலையில் கிடைப்பது மட்டுமன்றி முட்டை எளிதில் சமைத்து உண்ணக்கூடியதாகவும் விளங்குவதை அவர்கள் சுட்டினர்.

சிடார்ஸ்-சினாய் ஸ்மிட் இதயக் கழகத்தில் இதயநோய்த் தடுப்புப் பிரிவு இயக்குநரான டாக்டர் மார்த்தா குலாட்டி தன்னிடம் வரும் நோயாளிகளில் பலர், ரத்தத்தில் கொழுப்பின் அளவு அதிகமுள்ளோர் முட்டை சாப்பிடலாமா என்று கேட்பதாகக் கூறினார்.

ஒரு முட்டையில் கிட்டத்தட்ட 207 மில்லிகிராம் கொழுப்புச் சத்து உள்ளது. இது பலர் விரும்பி உண்ணும் ‘சாசேஜ்’ எனும் உணவில் இருக்கும் கொழுப்பின் அளவைப்போல் மூன்று மடங்காகும்.

ஆனால், முட்டையில் இருக்கும் கொழுப்பு ஒருவருக்கு மாரடைப்பையோ பக்கவாதத்தையோ ஏற்படுத்தாது. ஏனெனில், உணவில் உள்ள கொழுப்புச் சத்தும் ரத்தத்தில் இருக்கும் கொழுப்பும் வெவ்வேறு என டாக்டர் குலாட்டி கூறினார்.

ரத்தத்தில் கொழுப்பின் அளவு அதிகம் காணப்பட்டால் ரத்தக் குழாய்களில் கொழுப்பு சேரும் அபாயம் அதிகம்.

ரத்தக் கொழுப்பில் சிறிதளவே ஒருவர் உண்ணும் உணவிலிருந்து வருகிறது. ஆனால், அவரது கல்லீரலிருந்து மிக அதிக அளவில் ரத்தத்தில் சேர்கிறது என்றார் டாக்டர் குலாட்டி.

ஒருவர் தீங்கிழைக்கக்கூடிய கொழுப்பு அதிகமுள்ள உணவை உண்ணும்போது அவரது கல்லீரலிலிருந்து மிக அதிகமான கொழுப்பு ரத்தத்தில் சேர்கிறது.

ஒரு முட்டையில் தீங்கிழைக்கக்கூடிய கொழுப்பின் அளவு 1.6 கிராம் மட்டுமே. ஒரு நாளுக்கு ஓரிரண்டு முட்டைகளை உட்கொள்ளலாம்.

ஒரு முட்டையில் கிட்டத்தட்ட 6 கிராம் புரதச்சத்து இருப்பதை வல்லுநர்கள் சுட்டுகின்றனர்.

ஜார்ஜ் மேசன் பல்கலைக்கழக உணவு, ஊட்டச்சத்துத் துறை உதவிப் பேராசிரியர் சப்னா பதேஜா முட்டையில் ஒருவருக்குத் தேவையான அனைத்து அமினோ அமிலங்களும் உள்ளதாகச் சொன்னார்.

முட்டைகளில் ‘கொலின்’ எனப்படும் ஊட்டச்சத்தும் நிறைந்திருக்கிறது. தசைக் கட்டுப்பாடு, நரம்பு மண்டலம் ஆகியவற்றுக்குக் கொலின் தேவைப்படுகிறது.

மனித உடல் கொலின் சத்தை உற்பத்தி செய்யவல்லது என்றாலும் முட்டை உட்கொண்டால் அந்தத் திறன் அதிகரிக்கிறது. ஒரு முட்டையில் 169 மில்லிகிராம் கொலின் உள்ளது.

முட்டையை எவ்வாறு சமைத்தாலும் அதில் தேவையான சத்துகள் அடங்கியிருக்கும். ஆரோக்கியமான முறையில் முட்டையைச் சமைக்க, குறைந்த அளவு வெண்ணெய் அல்லது எண்ணெய் பயன்படுத்தலாம்.

முட்டையை வேகவைத்துச் சாப்பிடுவது சிறந்தது. அதன் வெள்ளைக்கருவில் கொழுப்பு இல்லையென்றாலும் முட்டையின் மஞ்சள் கருவையும் சேர்த்து உண்பது நல்லது. அதில் அதிக அளவு சத்துகள் நிறைந்துள்ளன.

முட்டை உட்கொள்ளும்போது அதைப் பழங்கள், காய்கறிகள், முழு தானியங்களுடன் சேர்த்து உண்பது உடலுக்கு மிகவும் நல்லது.

குறிப்புச் சொற்கள்