பக்கவாதம் குறித்து மேம்பட்ட விழிப்புணர்வு

பக்கவாதம் குறித்து மேம்பட்ட விழிப்புணர்வு

3 mins read
4c37bba9-acab-4d53-b1c0-a6f65219a203
ஐந்தில் நான்கு பக்கவாதப் பாதிப்புகள் தவிர்க்கக்கூடியவை. - படம்: இணையம்

பக்கவாத நோயின் பாதிப்புக்கு ஆளாகும் அபாயத்தைக் குறைக்கவும், அந்நோய்க்கான அறிகுறிகளைக் கண்டறியவும் பொதுமக்களுக்கு உதவும் வகையில் புது வாசகம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.

‘பக்கவாதம் குறித்த தெளிவுடன் இருங்கள், விரைவாகச் சிந்தியுங்கள்’ என்பதை வலியுறுத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ள ‘Be Stroke S.M.A.R.T., Think F.A.S.T.’ என்பதே அந்த வாசகம்.

சுகாதார அமைச்சின் பக்கவாத சேவைகள் மேம்பாட்டுக் குழுவின் (SSI) முயற்சியான தேசிய அளவிலான பக்கவாத விழிப்புணர்வு நடவடிக்கையின் முக்கிய கருப்பொருள்தான் இவ்வாசகம்.

சிங்கப்பூர் மக்கள்தொகை மூப்படைந்து வருவதால் பக்கவாதம் சார்ந்த பாதிப்புகள் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இவ்வேளையில், இந்தச் சுகாதார சவால்களைச் சந்திக்க ஏதுவாக ஒவ்வொருவரும் தங்களையும் தங்கள் குடும்பத்தினரையும் பாதுகாக்க அறிந்திருக்க வேண்டிய முக்கியச் சுகாதார அறிவுசார் தகவல்களையும் நடவடிக்கைகளையும் அவர்கள் கவனத்திற்குக் கொண்டுவருவது தேசிய அளவிலான பக்கவாத விழிப்புணர்வு நடவடிக்கையின் நோக்கம்.

ஐந்தில் நான்கு பக்கவாதப் பாதிப்புகள் தவிர்க்கக்கூடியவை எனக் கூறப்படுகிறது. ஆதலால், பக்கவாதத்திற்கான அறிகுறிகளை முன்கூட்டியே கண்டறிந்து உரிய சிகிச்சை அளித்தால் உடற்குறைக்கு ஆளாதல், இறப்பு உள்ளிட்ட அபாயங்களைக் குறைக்க இயலும் என்றும் எஸ்எஸ்ஐ அறிக்கை தெரிவித்தது.

‘S.M.A.R.T.’ வழிமுறைகள்

தேசிய அளவிலான பக்கவாத விழிப்புணர்வு பரிந்துரைக்கும் ‘S.M.A.R.T.’ வழிமுறைகளைப் பின்பற்றினால், பக்கவாதம் வராமல் தவிர்க்கும் முயற்சியில் அது பெரிதும் கைகொடுக்கும்.

புகைப்பழக்கமற்ற வாழ்வை வாழுங்கள்; ஆரோக்கியமான உணவைத் தெரிவு செய்யுங்கள்; உங்களைச் சுறுசுறுப்பாக வைத்திருங்கள்; முறையான மருத்துவப் பரிசோதனைக்குச் செல்லுங்கள்; மருந்துகளை முறையாக எடுத்துக்கொள்ளுங்கள் - இவையே அந்த ‘S.M.A.R.T.’ வழிமுறைகள்.

பக்கவாத பாதிப்பு அபாயத்தைக் குறைத்திட
ஆரோக்கியமான உணவைத் தெரிவு செய்யுங்கள்.
பக்கவாத பாதிப்பு அபாயத்தைக் குறைத்திட ஆரோக்கியமான உணவைத் தெரிவு செய்யுங்கள். - படம்: இணையம்
முறையான மருத்துவப் பரிசோதனைக்குச் செல்லுங்கள்.
முறையான மருத்துவப் பரிசோதனைக்குச் செல்லுங்கள். - படம்: இணையம்

விரைந்து சிந்தியுங்கள்!

முகத்தில் உணர்வின்மை, கைகளில் வலுக்குறைவு, சோர்வு, பேசுவதற்குச் சிரமம் உள்ளிட்ட அறிகுறிகளைப் புறந்தள்ளிவிடக்கூடாது. இத்தகைய வேளைகளில் அவசர மருத்துவ உதவிகளை நாடுவது முக்கியம்.

பக்கவாதத்தை ஏற்படுத்தவல்ல அபாயக்கூறுகளைச் சமாளிக்க மருந்துகள் உட்கொள்வதும் அவசியம்.

பக்கவாத நோயாளிகள் பலரிடமும் கண்டறியப்படாத அல்லது மோசமாக நிர்வகிக்கப்படும் நிலைமையிலான உயர் இரத்த அழுத்தம் போன்ற அபாயக்கூறுகளின் பாதிப்பு உள்ளதைக் காணமுடிவதாகக் கூறினார், தேசிய நரம்பியல் கழக, நரம்பியல் துறை மூத்த ஆலோசகரும், இணைப் பேராசிரியரும், ‘எஸ்எஸ்ஐ’ தலைவருமான டெய்ட்ரி ஆன் டி சில்வா.

“பக்கவாதம் ஏற்பட்ட பிறகும் சிலர் மருந்துகள் உட்கொள்ளத் தவறுவதும், நலமாக வாழ வாழ்க்கைமுறையை மாற்றிக்கொள்ளாததும் அக்கறைக்குரிய விஷயம்.ஏனெனில், பக்கவாதப் பாதிப்பிலிருந்து மீண்டு வந்தோர் மீண்டும் அத்தகைய பாதிப்புக்கு உள்ளாகும் அபாயம் அதிகம்”, என்றார் திரு டி சில்வா.

பக்கவாத பாதிப்பிலிருந்து மீண்டோரிடையே நடத்தப்பட்ட சிங்கப்பூர் ஆய்வொன்றில், ஏறக்குறைய 48 விழுக்காட்டினர் பரிந்துரைத்தபடி மருந்துகளை உட்கொள்வதில்லை என்பது தெரியவந்துள்ளது.

மேலும் 29 விழுக்காட்டினர் உடல்நலம் சார்ந்த ஆலோசனைகள் வழங்கிய பிறகும் புகைக்கும் பழக்கத்தைக் கைவிடுவதில்லை என்றும் ஆய்வு சுட்டுகிறது.

20 விழுக்காட்டினர் முறையான உணவுப் பழக்கம் , உடற்பயிற்சி குறித்த ஆலோசனைகளைப் பின்பற்றுவதில்லை என்பதும் கண்டறியப்பட்டுள்ளது.

இந்நிலையில், அக்டோபர் 29ஆம் தேதி உலக பக்கவாத நாளை முன்னிட்டு, பக்கவாதம் குறித்த விழிப்புணர்வை மேம்படுத்தவும், அந்தப் பாதிப்பிலிருந்து மீண்டுள்ளோர்க்கு ஆதரவளிக்கும் வகையிலும் சாலைக் காட்சி, ஒளியூட்டு உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளைப் பொதுமக்கள் எதிர்பார்க்கலாம். விழிப்புணர்வு குறித்த கூடுதல் தகவலுக்கு ‘எஸ்எஸ்ஐ அமைப்பின் சமூக ஊடகப் பக்கத்தை நாடலாம்.

குறிப்புச் சொற்கள்