இந்தியச் சமூகத்துக்கும் தமிழ் முரசுக்கும் இடையே உள்ள வலுவான பிணைப்பிற்கு அன்றிலிருந்து இன்றுவரைத் தமிழ் முரசில் தவறாமல் இடம்பெற்றுவரும் விளம்பரங்களே சான்று.
தமிழ் முரசுமீதும் தமிழவேள் கோ சாரங்கபாணிமீதும் வைத்திருந்த நன்மதிப்பாலும், தமிழ் நாளிதழ் சிங்கப்பூரில் நிலைத்திருக்க வேண்டும் என்ற எண்ணத்தாலும் பலரும் விளம்பரம் கொடுக்க முன்வந்தனர்.
அதே சமயம், தமிழ் முரசு விளம்பரப் பிரிவினரின் கடுமையான உழைப்பும் சமூகத்துடன் புதிய பிணைப்புகளை ஏற்படுத்தியது. அவர்கள் சிங்கப்பூர் முழுவதும் சென்று புதிய தொடர்புகளை ஏற்படுத்தி விளம்பரங்களைப் பெற்றனர்.
விளம்பரத் துறையில் ஊறிப் போனவர் 80 வயது திரு ராமசாமி நாச்சியப்ப செட்டியார்.
1970 முதல் தமிழ் முரசில் விளம்பர விற்பனைப் பிரதிநிதியாகப் பணியாற்றிய அவர் ஓய்வுபெற்றாலும் தமிழ் முரசின் பகுதிநேர விளம்பர முகவராக இன்றும் பணியாற்றிவருகிறார்.
அக்காலத்தில் ஆண்டிறுதி வங்கிக் கணக்குகள் நான்கு மொழிகளிலும் பத்திரிகையில் வெளியாகின.
“அவற்றுக்கென வங்கிகள் ஏழெட்டு பக்கங்கள் விளம்பரம் எடுத்தார்கள். சிராங்கூன் சாலையிலிருந்த துணிக்கடைகள், நகைக்கடைகள் பெரும்பாலானவை விளம்பரங்கள் எடுத்தன. திருநாள்களன்று நாங்கள் அவற்றை விளம்பரம் எடுக்க ஊக்குவிப்போம்,” என்றார் திரு ராமசாமி.
1966-67ல் ஒரு பத்தி விளம்பரத்தின் விலை 10-15 வெள்ளிதான் என்றார் அவர்.
இந்திய முஸ்லிம் சமூகத்தினர், பள்ளிவாசல்கள், கோயில்கள், தேவாலயங்கள், சமூக அமைப்புகள், வணிக நிறுவனங்கள் பல்லாண்டுகளாகத் தமிழ் முரசில் விளம்பரங்கள் எடுத்துவருகின்றன.
மலரும் நினைவுகள்
திரு வை திருநாவுக்கரசு ஆசிரியராகப் பொறுப்பேற்றபின் தமிழ் முரசு விளம்பரப் பிரிவு பெரிதடைந்தது. சமூகத்தில் அனைவருக்கும் தளம் வழங்குவதில் அவர் மிகுந்த அக்கறை செலுத்தினார்.
அதுவரை தமிழ் முரசின் செய்திப் பிரிவில் பணியாற்றிவந்த திருவாட்டி ரமா சங்கரன், 1991ன் பிற்பாதியில் விளம்பரப் பிரிவில் சேர்ந்தார்.
“அப்போது ஏர் இந்தியாவிடமிருந்து நிறைய விளம்பரங்கள் எடுத்தோம், ஆதரித்தோம். அதனால் ஏர் இந்தியாவில் ஒடிசா, கோல்கத்தா, டெல்லி ஆகியவற்றுக்குச் செல்லும் வாய்ப்பை நான் பெற்றேன். அதை வைத்து நாம் ‘ஒடிசா சிறப்பிதழ்’ செய்தோம்,” என்றார் திருவாட்டி ரமா, 67.
சிங்கப்பூரில் பல இடங்களுக்கும் சென்று பலருக்கும் தம்மை அறிமுகப்படுத்திக்கொண்ட திருவாட்டி ரமா, வட இந்திய வணிகங்களைக்கூடத் தமிழ் முரசில் விளம்பரம் எடுக்க ஊக்கப்படுத்தினார். லிட்டில் இந்தியாவையும் தாண்டி, பெனின்சுலார் பிளாசா, நார்த் பிரிட்ஜ் ரோடு அத்தர் கடைகள், கடிகார வணிகச்சின்னங்கள் போன்றவற்றிலிருந்துகூட புதிய விளம்பரங்கள் பெற்றார்.
“விளம்பர விற்பனையில் சற்று தொய்வு ஏற்பட்டபோது திரு ஹனிஃபா, ஏர் இந்தியா தலைமை நிர்வாகிகள், நாணய மாற்று வணிகர்கள் அடிக்கடி நம் செய்தித்தாளை விசாரித்துச் செல்வார்கள். பண்டிகைக் காலங்களில் நமக்கு விளம்பரம் கொடுப்பார்கள். தமிழ் முரசுக்கும் இந்திய வணிகங்களுக்கும் இடையே ஒரு தனிப்பட்ட உறவு இருந்தது,” என்று அவர் நினைவுகூர்ந்தார்.
சிந்தனையில் புரட்சி
பலரும் ‘எய்ட்ஸ்’ நோய் இருப்பவர்களை ஒதுக்கிவைத்தபோது தமிழ் முரசு அந்நோய் குறித்த விழிப்புணர்வு விளம்பரங்களைத் தாங்கி வெளியானது.
“தமிழ் விளம்பரத்தில் சரியான சொற்களைத் தேர்ந்தெடுப்பதில் திரு அரசு மிகுந்த கவனம் செலுத்தினார். எங்களுடன் இரு நாள்கள் கலந்தாலோசித்து ‘வருத்தம் நீக்க வருமுன் காக்க’ என்ற முழக்கவரியை உண்டாக்கினார்,” என்றார் திருவாட்டி ரமா.
“தமிழ் முரசு நன்கு கோலோச்சியதற்குக் காரணம், அரசாங்கத் துறையில் திரு அரசு பெற்றிருந்த அனுபவம். யாரையும் குறிப்பாக முன்னிலைப்படுத்த வேண்டும் என இல்லாமல் அனைவருக்கும் குரலாக இருக்க வேண்டும் என விரும்பினார். சில சொற்களைப் போடக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தார்,” என்றும் அவர் நினைவுகூர்ந்தார்.
விளம்பரம் போடும்போது தேதி, நேரம், கட்டணம் போன்றவற்றை விளம்பரத்தின் மேற்பகுதியில் போட்டால் பலரையும் ஈர்க்கமுடியும் என்றும் திரு அரசு தமக்குக் கற்பித்ததாக அவர் குறிப்பிட்டார்.
லிட்டில் இந்தியாவில் புதிய தொடக்கம்
ஜென்டிங் லேன் அலுவலகத்தைத் தேடிவருவது வாடிக்கையாளர்களுக்குக் கடினமாக இருந்ததால் 2010ல் லிட்டில் இந்தியாவில் விளம்பரப் பிரிவு தனி அலுவலகத்தை அமைத்தது.
“ஒரு சிறு விளம்பரப் பிரிவு, தேக்காவில் அலுவலகம் திறப்பது தமிழ் முரசின் வரலாற்றில் முக்கிய மைல்கல். அப்பொழுது தனி அலுவலகம் வைத்திருந்தது விளம்பரப் பிரிவு மட்டுமே,” என்றார் 1998 முதல் 2019 வரை தமிழ் முரசில் விளம்பர மேலாளராகவும் இன்று மெய்ப்பு திருத்துநராகவும் பணியாற்றும் திரு ஜீவானந்தம் கருணாநிதி.
“விளம்பரதாரர்களுக்கு அருகிலேயே இருந்ததால் அவர்களால் எளிதில் விளம்பர முன்பதிவுகளைச் செய்ய முடிந்தது, வடிவமைப்பையும் நேரில் காணமுடிந்தது. கட்டணங்களும் அங்கேயே வசூலிக்கப்படுவதால் அனைத்தும் எளிதாக இருந்தது,” என்றார் திரு கருணாநிதி.
அதே சமயம், முஸ்தஃபா, ஹனிஃபா போன்ற பல வணிகங்களையும் நாடிச் சென்றதாகத் தமிழ் முரசில் 2003 முதல் முழுநேர ஊழியராகப் பணியாற்றிவரும் திருவாட்டி மகேஸ்வரி கூறினார்.
“தனி அலுவலகமாக இருந்ததால் விளம்பரங்களைச் சரிபார்க்க ஜென்டிங் லேனுக்கு விளம்பரங்களைச் சரிபார்ப்பதற்கு அனுப்பவேண்டியிருந்தது. அதனால் தொடக்கத்தில் சிரமமாக இருந்தது. சிலமுறை தாமதமடைந்தது; நாளடைவில் சீரடைந்தது.
“லிட்டில் இந்தியாவுக்கு வந்தது தமிழ் முரசின் விளம்பரப் பகுதிக்கு மட்டுமன்று, தமிழ் முரசுக்கே பொற்காலம்,” என்றார் திருவாட்டி மகேஸ்வரி.
தொழில்நுட்ப யுகத்திலும் தொடரும் அச்சின் முக்கியத்துவம்
மின்னிலக்கமயத்தால் தமிழ் முரசு தற்போது அச்சு வடிவில் மட்டுமன்றி சமூக ஊடக விளம்பரங்களையும் வழங்குகிறது. “ஏ ஆர் ரகுமான், அனிருத் கச்சேரிகள் என விளம்பரதாரர்கள் யாரைச் சென்றடைய விரும்புகிறார்களோ அதற்கேற்ப நாங்கள் சமூக ஊடகங்களில் விளம்பரங்களைக் குறிவைக்க முடிகின்றது,” என்றார் தமிழ் முரசின் மூத்த விளம்பர மேலாளர் மூஸா காலிம், 45.
எனினும், அச்சு வடிவிலுள்ள விளம்பரங்கள் இந்தியச் சமூகத்தைச் சென்றடைவதில் தொடர்ந்து முக்கியப் பங்காற்றி வருவதை அவர் சுட்டினார்.
“வானொலி, தொலைக்காட்சிகளில் விளம்பரம் எடுத்தால் அச்சமயம் பார்ப்பவர்களையே, கேட்பவர்களையே விளம்பரம் சென்றடையும். மேலும், நிகழ்ச்சிகளின் இடைவேளையில் வேறு ஒளிவழிக்கு மக்கள் மாற்றவும் செய்வர்.
“ஆனால், செய்தித்தாள் என்பது நிரந்தரமாக இருப்பது. அதைப் பத்திரமாக வைத்துக்கொள்ளலாம். இன்று ஒருவர் அச்சு விளம்பரத்தை எடுத்தால் இரண்டு, மூன்று வாரங்கள் கழித்துகூட நல்ல வரவேற்பு இருக்கும்; ஏனெனில் அந்த விளம்பரத்தைப் புகைப்படம் எடுத்து மக்கள் ஒருவரோடு ஒருவர் பகிர்ந்துகொள்வர்.
“மேலும், தமிழ் முரசில் விளம்பரங்கள் எடுத்தால் அச்சுக்குமுன் ஏதேனும் மாற்றங்கள் செய்யவேண்டுமெனில் எளிதாகச் செய்யலாம். தொலைக்காட்சி விளம்பரங்களிலோ அவ்வளவு எளிதில் மாற்றங்களைச் செய்ய முடியாது. பொதுவாக, வானொலி, தொலைக்காட்சியைவிட தமிழ் முரசு விளம்பர விலையும் குறைவாகவும் உள்ளது,” என்றார் திரு காலிம்.
அச்சு, மின்னிலக்க வடிவிலான விளம்பரங்கள் இரண்டையும் சேர்த்து எடுப்பதால் இளையர்களை மின்னிலக்க வடிவிலும் நடுத்தர வயதினரையும் முதியோரையும் அச்சு வடிவிலும் சென்றடைய முடிவதாக அவர் சொன்னார்.
தமிழ் முரசின் தளங்கள் அதிகரிக்கலாம். ஆனால், அதற்கும் சமூகத்திற்கும் இடையிலான அன்பும் பிணைப்பும் என்றும் மாறாது. தமிழ் முரசு தொடர்ந்து சமூகத்தின் குரலாக இடைவிடாது ஒலிக்கும் என்பது உறுதி!

