அதிக மகிழ்வும் இதயத்தைப் பாதிக்கலாம்: மருத்துவர்கள் எச்சரிக்கை

2 mins read
கொண்டாட்டம், திண்டாட்டமாக மாறிவிடாமல் காக்கும்படி அறிவுறுத்து
08058e65-ea77-40c2-8b5e-8239d536dcdc
புத்தாண்டு நெருங்கும் நிலையில் கொண்டாட்டம், திண்டாட்டமாக மாறிவிடாமல் காத்துக்கொள்ளும்படி எச்சரித்துள்ளனர் மருத்துவர்கள். - படம்: பிக்சாபே

மிகுந்த துயரமும் அதிர்ச்சியும் இதயத்தைப் பாதிப்படையச் செய்வது போலவே, பெரும் மகிழ்ச்சியும் நெகிழ்வும்கூட இதய பாதிப்பை ஏற்படுத்தலாம் என எச்சரிக்கை விடுத்துள்ளனர் மருத்துவ வல்லுநர்கள்.

புத்தாண்டு நெருங்கும் நிலையில் பண்டிகைக்கால கொண்டாட்ட மனநிலை, எதிர்பாராத ஆனந்தம் ஏற்படுத்தும் இதய பாதிப்புகளை ‘ஹேப்பி ஹார்ட் சிண்ட்ரம்’, ‘ஹாலிடே ஹார்ட் சிண்ட்ரம்’ என வகைப்படுத்துகிறது மருத்துவ உலகு.

இந்த வகை பாதிப்புகள் அடைவோரைக் கையாள தங்களைத் தயார்ப்படுத்தி வருவதாகத் தெரிவித்துள்ளது ஹெல்த்வே மெடிக்கல் குரூப்.

இவ்வகை பாதிப்புகள் குறித்து 2,482 பேரிடம் நடத்தப்பட்ட ஆய்வில், 910 பேரிடம் உணர்வுகள் தாக்கத்தை ஏற்படுத்துவது கண்டறியப்பட்டது. அதில் குறிப்பாக, 873 பேருக்கு எதிர்மறை உணர்வுகளும் 37 பேருக்கு நேர்மறை உணர்வுகளும் தாக்கத்தை ஏற்படுத்தியது என்று ஆய்வு கூறியுள்ளது.

இவற்றில் அதிகமானோர் ஆண்கள் என்றும் அவர்களுக்கு மகிழ்வான தருணங்களில்‘பலூனிங்’ எனும் இதயத்தின் உட்குழிப்பகுதியில் (ventricle) வீக்கம் ஏற்பட்டதாகத் தெரிகிறது. சிலருக்கு நுரையீரல் வீக்கம், ‘கார்டியோஜெனிக் ஷாக்’ எனும் உறுப்புகளுக்கு போதுமான ரத்தம் செலுத்தப்படாமல் இருக்கும் நிலையும் ஏற்பட்டதாக ஆய்வு கூறியுள்ளது.

மிகுந்த மகிழ்ச்சி, துயரம் உள்ளிட்டவை பொதுவாக பக்கவாதம் ஏற்பட வாய்ப்புள்ளது என்றும் இந்த ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சிங்கப்பூரில் பொதுவாக, மகிழ்ச்சியால் ஏற்படும் இதய பாதிப்பு பெண்களிடமும் பரவலாகக் காணப்படுவதாகச் சொன்னார் இதயநோய் மருத்துவ நிபுணரும் ‘கார்டியாக் இமேஜிங்’ நிபுணருமான டாக்டர் கோ சூங் ஹவ்.

இரண்டாவது நிலையான ஹாலிடே ஹார்ட் சிண்ட்ரம், இதய - மூளை தொடர்புடையது. மூளையில் ஏற்படும் தாக்குப்பிடிக்க முடியாத மாற்றத்தைச் சமாளிக்க, உடல் ஏற்படுத்திக் கொள்ளும் அழுத்தம், இதயத்தில் தாக்கம் ஏற்படுத்துகிறது என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

பண்டிகைக் காலங்களில் ஏற்படும் மகிழ்வான பதற்றம், ‘அரித்மியா’ எனும் சீரற்ற இதயத்துடிப்பை ஏற்படுத்துகிறது என ஆய்வு சுட்டிக் காட்டியுள்ளது. கொண்டாட்டங்களின்போது அதிகமாக மது அருந்துவதாலும் இதய பாதிப்பு ஏற்படுகிறது. மூச்சுத்திணறல், தலைசுற்றல், மயக்கம் உள்ளிட்டவற்றை அது ஏற்படுத்துகிறது. சிலருக்கு இதயச் செயலிழப்புகூட ஏற்படலாம் என்றும் மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

இதயத் துடிப்பை மீட்டெடுக்கும் உடனடி மருத்துவம் இருந்தாலும், மது அருந்துவதைக் கட்டுப்படுத்தி இதுபோன்ற நிலைமையைத் தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார் டாக்டர் கோ. ஆண்டிறுதிக் கொண்டாட்டங்கள் நேர்மறையான மகிழ்ச்சியை வழங்குபவையாக இருக்க வேண்டுமே தவிர, எதிர்பாராத உடல்நலக் கோளாறுகளை ஏற்படுத்துபவையாக அமைந்துவிடாமல் காக்க வேண்டும் என்று டாக்டர் கோ குறிப்பிட்டுள்ளார்.

இந்த வகை பாதிப்புகளின் எச்சரிக்கை அறிகுறிகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவது உயிரைக் காக்கும் என்றார் அவர்.

குறிப்புச் சொற்கள்