வசந்தம் ஒளிவழியின் நட்சத்திரத் தேடலுக்கான ‘வி சுப்ரீம்’ போட்டியின் ‘வைல்டு கார்டு’ சுற்றில் சிறப்பாகப் பங்களித்து, அதிக வாக்குகளைப் பெற்ற போட்டியாளர்கள் ஷீனாவும், கிருஷ்மிதாவும் இறுதிச் சுற்றுக்குத் தகுதிபெற்றுள்ளனர்.
இறுதிச் சுற்றின் முன்னோட்டமாக சனிக்கிழமை (மார்ச் 15) மாலை வெஸ்ட்கேட் கடைத்தொகுதியில் இடம்பெற்ற நிகழ்ச்சியில் ‘வைல்டு கார்டு’ சுற்றிலிருந்து இறுதிச் சுற்றுக்குத் தகுதி பெறுவதாக அவ்விருவரின் பெயர்கள் அறிவிக்கப்பட்டன.
இறுதிச் சுற்று ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 23) நடைபெறவிருக்கும் இவ்வேளையில் போட்டியாளர்கள் மிக விறுவிறுப்புடன் ஆயத்தமாகி வருகின்றனர்.
இதற்கிடையே, இறுதிச் சுற்றுக்கு ஏற்கெனவே தேர்வு செய்யப்பட்ட போட்டியாளர்களும் ‘வைல்டு கார்டு’ சுற்றில் பங்கேற்ற போட்டியாளர்களும் சனிக்கிழமை நிகழ்ச்சியின்போது பொதுமக்களைச் சந்தித்தனர்.
‘வைல்டு கார்டு’ சுற்றில் போட்டியிட்ட இதர போட்டியாளர்களான ஜெஸ்ஸி, நவீன்ராஜ் ஆகியோரும் நிகழ்ச்சியில் காணப்பட்டனர்.
“இந்தப் போட்டிக்குப் பல கனவுகளுடன் வந்தேன். போட்டியின் நடுவே வெளியேற்றப்பட்டபோது மிகவும் கவலையாக இருந்தது. ஆனால் தோல்விக்குப் பின்னர்தான் வெற்றி என்பதை மனத்தில் நிறுத்திக்கொண்டு என்னைப் போன்ற இளையர்களுக்கு ஒரு முன்னுதாரணமாக இருக்க ‘வைல்டு கார்டு’ சுற்றில் நன்றாகச் செய்யவேண்டும் என்பதில் திண்ணமாக இருந்தேன்,” என்றார் கிருஷ்மிதா.
முன்னோட்ட நிகழ்ச்சியில் இதர வசந்தம் பிரபலங்கள் இணைந்தது மட்டுமின்றி வி சுப்ரீம் நிகழ்ச்சியின் நடுவர்களான அனிதா அய்யாவு, ஜனனி நேத்ரா, ஜேகே சரவணா, ஜபுர் தீன் ஃபரூக் ஆகியோரும் கலந்துகொண்டனர்.
போட்டியாளர்களின் அனுபவங்களையும் இறுதிச் சுற்றுக்கு அவர்கள் எவ்வாறு தயார் செய்துவருகிறார்கள் என்பதை ஒட்டிய தகவல்களையும் நிகழ்ச்சியைக் காண வந்திருந்தோர் தெரிந்துகொண்டனர்.
தொடர்புடைய செய்திகள்
“ஊடகத்துறை மாறிக்கொண்டே வருகிறது. அதற்கேற்றவாறு போட்டியாளர்களும் புதிய திறன்களைப் பெற்றிருக்க வேண்டும். போட்டியாளர்கள் பல்வேறு அம்சங்களில் சிறப்பாகச் செய்யக்கூடிய திறன்களை இந்தப் போட்டியில் வளர்த்துக்கொள்ள வேண்டும். அத்தகைய ஒருவரைத்தான் தேடுகிறோம்,” என்றார் ஜேகே சரவணா.
“இப்போட்டியில் பங்கேற்பதற்கு முன்னர் மேடை நாடகங்கள் பலவற்றில் நடித்துள்ளேன். தொலைக்காட்சியில் கேமராமுன் நின்று பெரிதாகப் பேசியதில்லை. வி சுப்ரீம் மூலம் கேமராவுக்கு முன்னால் எவ்வாறு பேசுவது என்பது போன்ற திறன்களைக் கற்றுக்கொண்டேன். அவற்றைப் பயன்படுத்தி இறுதிச் சுற்றில் சிறப்பாகப் பங்களிக்க விரும்புகிறேன்,” என்றார் இறுதிச் சுற்றுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள போட்டியாளர் யுகேஷ் கண்ணன், 23.
இறுதிச் சுற்றில் மொத்தம் ஆறு பேர் போட்டியிடவிருக்கின்றனர்.