உயர்நிலைப் பள்ளிப்பருவத்தில் தேசிய மாணவர்ப் படையில் சேர விருப்பப்பட்டபோது தமக்கு அந்த வாய்ப்பு கிடைக்கவில்லை என்றார் அயூப்.
“இருந்தபோதும், சிங்கப்பூர் ஆயுதப் படையின்மீதான ஆர்வம் என்னுள் தொடர்ந்து இருந்தது. அந்தக் கனவுடன் நான் தொடர்ந்து செயல்பட்டேன்,” என்று மாஸ்டர் வாரண்ட் அதிகாரியான அயூப் கூறினார்.
தேசிய தின அணிவகுப்பு போன்ற ராணுவ அணிவகுப்புகளில் பங்குபெறும் வீரர்களின் கட்டுக்கோப்பு, படைப்பிரிவு (regimentation), பாதுகாப்பு ஆகியவற்றை நிலைநாட்டும் முக்கியப் பொறுப்பை அவர் ஏற்றுள்ளார்.
ரெஜிமெண்டல் சார்ஜண்ட் மேஜராக இவர், ராணுவ மாட்சிமையையும் ஒழுங்கையும் நிலைநாட்டுவதுடன் சோதனைகள் நடத்தி ஒழுங்குமீறல்களைத் திருத்தி இளம் அதிகாரிகளுக்கு வழிகாட்டும் பொறுப்பை ஆற்றவேண்டும்.
பண்பு புகட்டிய பெற்றோர்
உடலில் துடிப்புமிக்கவரான திரு அயூப், நடத்தையில் கட்டுக்கோப்பு மிக்கவர்.
“பொருள் விநியோகம் செய்யும் வாகனங்களுக்கு ஓட்டுநராக வேலை செய்த என் தந்தை கடுமையாக உழைப்பவர். இருக்கும் வருவாயைக் கொண்டு குடும்பத்தைத் திறம்பட வழிநடத்தும் சிக்கனம் என் தாயாரிடம் உண்டு. அவர்களிடமிருந்துதான் நான் சிறந்த பண்புகளை முதலில் கற்றுக்கொண்டேன்,” என்று அவர் கூறினார்.
வீட்டில் எளிமையாய், பெற்றோரின் அரவணைப்பில் வளர்ந்ததாக திரு அயூப் கூறினார். குடும்பத்தினர் தமிழ் பேசினாலும் அருகிலுள்ள தொடக்கப்பள்ளியில் தமிழ் இல்லை என்பதால் பள்ளியில் மலாய் படித்து வளர்ந்தார் திரு அயூப்.
“தற்போது என் 13 வயது மகன் பள்ளியில் தமிழ்தான் படிக்கிறார்,” என்று பெருமிதத்துடன் கூறினார் அவர்.
தொடர்புடைய செய்திகள்
2001ல் சிங்கப்பூர் ஆயுதப் படைகளில் முழுநேரமாகச் சேர்ந்த திரு அயூப்புக்குப் படிப்படியாகப் பதவி உயர்வு கிடைத்தது. 2016ல் படைப்பிரிவு ரெஜிமெண்டல் சார்ஜண்ட் மேஜராக திரு அயூப் அமர்த்தப்பட்டார். 2019ல் திரு அயூப், அமெரிக்க ராணுவத்தின் சார்ஜண்ட் மேஜர் வகுப்பில் சேர்ந்து உன்னத அனைத்துலக மாணவர் விருதைப் பெற்றார்.
இவ்வாண்டு அணிவகுப்பின் ரெஜிமென்டல் சார்ஜன்ட் மேஜராகப் பொறுப்பேற்றது தமக்கு ஒருபுறம் மகிழ்ச்சி அளித்தாலும், அந்தப் பொறுப்பில் அடங்கியுள்ள எதிர்பார்ப்பையும் தாம் உணர்வதாகக் குறிப்பிட்டார்.
அணிவகுப்புப் பொறுப்புகள்
கட்டளைகளைச் சொல்லி அணிவகுப்புகளை நெறிப்படுத்தி, முழுமைத் தற்காப்பு அணிவகுப்பை வழிநடத்தும் பொறுப்பும் இவருக்கு உள்ளது. முழுப் பயிற்சி பெற்ற அணியினரும் மூத்த தலைவர்களின் அறிவுரையும் தமக்குப் பக்கபலமாக இருப்பதாகக் கூறினார் திரு அயூப்.
மனைவி மக்களின் அன்பும் ஆதரவும் தமக்கு மேலும் வலுசேர்ப்பதாகக் கூறிய திரு அயூப், இயன்றவரை அவர்களுக்காக நேரம் ஒதுக்க விரும்புவதாகக் கூறினார்.
“அணிவகுப்புக் பங்கேற்பாளர்கள் ஆர்வத்துடன் கடும் பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். அணிவகுப்பு சிறப்பாக நடைபெறும் என நம்புகிறேன்,” என்று அவர் கூறினார்.
வேலை மீது திரு அயூப் ஆழ்ந்த கடப்பாடு கொண்டிருந்தாலும் அதனையும் தாண்டிய ஓர் அடையாளம் தமக்கிருப்பதாகக் குறிப்பிட்டார்.
நண்பர்களுடன் இவர் காற்பந்து விளையாடும் பழக்கம் இன்று வரையிலும் தொடர்கிறது.
அண்மைய காலமாக தேசிய தின அணிவகுப்பிற்கான ரெஜிமெண்டல் சார்ஜண்ட் மேஜராகப் பொறுப்பேற்ற முதல் இந்திய முஸ்லிமாக இவர் இருக்கக்கூடும்.
தமது கலாசார, சமய அடையாளம் குறித்து பெருமைப்படுவதாகக் கூறும் திரு அயூப், பலவித பின்புலன்களைச் சேர்ந்தோரை சிங்கப்பூர் ஆயுதப் படை அரவணைப்பதாகத் தெரிவித்தார்.
தேசிய தின அணிவகுப்பின் “ஒன்றாய் ஒன்றுபட்ட மக்களாய்” என்ற கருப்பொருள், சிங்கப்பூர் ஆயுதப் படை போற்றும் பண்புகளுடன் ஒத்துப்போவதாகச் சுட்டினார் அவர்.
ஒவ்வொரு நாளுமே புது உச்சத்தைத் தொடும்படி இளைய ராணுவ அதிகாரிகளை ஊக்குவித்து வருகிறார் திரு அயூப்.
“தனிமனித முதிர்ச்சியும் செய்யும் வேலையின் தரமும் ஒருவரது வெற்றியை உறுதிசெய்யும்,” என்று திரு அயூப் கூறினார்.