ஆஸ்திரேலியாவின் ராக்ஹாம்டனில் நடைபெற்ற இவ்வாண்டின் ‘எக்சர்சைஸ் வாலபி’ பயிற்சியைப் பற்றி நேரடியாகச் செய்தி சேகரித்தது, ஒரு செய்தியாளராக நான் மேற்கொண்ட மிகத் தீவிரமான அதேநேரம் என் கண்ணோட்டத்தை மாற்றியமைத்த அனுபவங்களில் ஒன்றாக இருந்தது என்று சொன்னால் அது மிகையாகாது.
சிங்கப்பூரைப்போல் ஐந்து மடங்கு பரப்பளவு கொண்ட ஷோல்வாட்டர் பே பயிற்சித்தளத்தைப் பார்த்தபோது, சிங்கப்பூர் ஆயுதப்படை இந்த வருடாந்தர வெளிநாட்டுப் பயிற்சிக்கு ஏன் இவ்வளவு முக்கியத்துவம் அளிக்கிறது என்பது தெளிவானது.
இத்தகைய விரிந்த நிலப்பரப்பே, தாயகத்தில் சாத்தியமில்லாத வான்வழி விநியோகப் பயிற்சிகள், கனரக பீரங்கி ஒத்திகைகள் உள்ளிட்ட பலவிதமான தற்காப்புப் பயிற்சிகளுக்குத் தளமாகிறது.
முதலில் என்னை வியக்க வைத்தது அங்கிருந்த வானிலைதான். வெப்பநிலை சில நேரங்களில் 39 டிகிரி செல்சியஸைத் தொட்டது. திடீரெனப் பெய்த கனமழை சில நிமிடங்கள் மட்டுமே நீடித்தது. பிறகு சூரியன் மீண்டும் தலைகாட்டியது.
அதுமட்டுமல்லாமல், ஆஸ்திரேலியாவில் புற ஊதாக் (UV) கதிர்வீச்சின் அளவு அதிகமாக இருந்ததால், சில நொடிகளிலேயே தோல் சூடாகும் உணர்வும் ஏற்பட்டது. அன்றாடம் வெளியே செல்லுமுன் முகம் முதல் கால் வரை ‘சன்ஸ்கிரீன்’ பூசிக்கொள்வது வழக்கமாகியது.
நிழலில் ஒதுங்க வழியில்லாத திடலில், ஹெலிகாப்டர் பணிகளில் ஈடுபடக் காத்திருந்த ராணுவ வீரர்கள், முழுச் சீருடை, தற்காப்புக் கருவிகளுடன் கடுமையான சூழ்நிலையில் கவனத்துடன் செயல்படுவதைக் கண்டபோது, அவர்களது மனவலிமையையும் உறுதியையும் நினைத்து வியந்தேன்.
நான் அங்குத் தங்கியிருந்த ஒருவார காலத்தில், இளம் தேசியச் சேவையாளர்கள் பலரைச் சந்தித்தேன். பல்வேறு முக்கியப் பொறுப்புகளை வகித்த அவர்களுடன் உரையாடியபோது, தற்காப்புப் பணி என்பது வெளிப்படையாகத் தெரியாத, ஓர் அமைதியான தியாகத்தை உள்ளடக்கியது என்ற எண்ணம் எனக்கு மீண்டும் எழுந்தது. அந்த இளையர்கள் ஒழுக்கம், பொறுப்பு, சகிப்புத்தன்மை ஆகிய நற்பண்புகளை ஒருங்கிணைத்துச் செயல்படும் விதம் என்னைக் கவர்ந்தது.
சிங்கப்பூர் ராணுவம், குடியரசு ஆகாயப்படை, மின்னிலக்க, உளவுத்துறைப் படை உள்ளிட்ட பிரிவுகள் இணைந்து மேற்கொண்ட, ஒருங்கிணைந்த தாக்குதல் பயிற்சியை நேரடியாகக் காணும் வாய்ப்பைப் பெற்றேன். அதன் ஓர் அங்கமாக, அதிநவீன பீரங்கி ஏவுகணைத் திட்டமான ‘ஹிமார்ஸ்’ அமைப்பின் ஏவுகணைகள் வானில் பறக்கும் காட்சியைக் கண்டது எனக்கு மறக்க முடியாத அனுபவமாக அமைந்தது.
தொடர்புடைய செய்திகள்
சி-130 ஹெர்குலிஸ் விமானத்தின் நேரடி வான்வழிப் பொருள் விநியோகப் பயிற்சியில் என்னால் பங்கேற்க இயலாவிட்டாலும், மனிதாபிமானப் பணிகளுக்காக உலக அளவில் பயன்படுத்தப்படும் இந்த விமானத்தின் உள்ளே நுழைந்து, சுற்றிப்பார்த்து அதன் செயல்பாடுகளைப் புரிந்துகொண்டேன்.
ஆளில்லா வானூர்தியை நானே இயக்கிப் பார்த்த அனுபவமும் சுவைமிக்கதாக இருந்தது. பலத்த காற்றின் நடுவே அதைத் தொடர்ந்து நிலையாகப் பறக்க வைப்பது எவ்வளவு சவாலானது என்பதை உணர்ந்தேன். இத்தகைய உயர் தொழில்நுட்பப் பணிகளுக்குத் துல்லியமும் பொறுமையும் அத்தியாவசியம்.
பின்னணியில், சிங்கப்பூர் ஆயுதப் படைத் தொண்டூழியர் படைப்பிரிவின் உறுப்பினர்கள் உள்ளிட்ட முன்னேற்ற ஆதரவுக் குழுவினர், ராணுவ வீரர்கள் தங்குமிடமான கேம்ப் டில்பாலை (Camp Tilpal) சீராகச் செயல்படக் கைகோத்தனர். இவர்கள், ஒழுக்கமான அதே நேரம் சமூக உணர்வுமிக்க ஓர் அமைப்பின் அங்கமாகத் தங்கள் பங்களிப்பைச் செவ்வனே செய்தனர்.
பிற செய்தி நிறுவனங்களின் நிருபர்களுடன் இணைந்து பணியாற்றியது ஒரு குறிப்பிடத்தக்க கற்றல் அனுபவத்தை எனக்கு அளித்தது. தகவல்களைப் பகிர்ந்துகொண்டது, எதிர்பாராத வானிலை சவால்களைச் சமாளித்தது, நீண்ட கள நாள்களில் ஒன்றுபட்டு உழைத்தது ஆகியவை நினைவில் நிறைந்த தருணங்கள்.
நான் ‘எக்சர்சைஸ் வாலபி’ பயிற்சியைவிட்டு வெளியேறியபோது, அது எனக்குப் புதிய புரிதலையும் ஆழ்ந்த கண்ணோட்டத்தையும் வழங்கியது என்று சொல்லலாம். தற்காப்பும் வெளியுறவுக் கொள்கைகளும் எவ்வாறு ஒருங்கிணைந்து செயல்படுகின்றன என்பதை அப்பயிற்சியில் நேரடியாகக் கண்டேன்.
சிங்கப்பூரின் இந்த வட்டாரத் தற்காப்புப் பயிற்சியின் அடித்தளமாக அமைவது, விரிவான ஒத்துழைப்பு, துல்லியமான செயல்பாடுகள், அண்டை நாடுகளுடனான இணக்கமான உறவுகளைப் பேணுவதுதான் என்பதை இந்த அனுபவம் ஆழமாக வலியுறுத்தியது.
வெளிப்பார்வையில், ‘எக்சர்சைஸ் வாலபி’ பயிற்சியில் இடம்பெறும் போர் பீரங்கிகள், ஹெலிகாப்டர்களின் காட்சிகள் அனைத்தும் கண்கவர் புகைப்படங்களாக மட்டும் தோன்றலாம். ஆனால் தரையில் வீரர்கள் அன்றாடம், மீள்தன்மையையும் மனவலிமையையும் சோதிக்கும் கடினமான சூழ்நிலைகளில் பலமணி நேரம் வியர்வை சிந்தித் தங்களைத் தயார்படுத்திக் கொள்கிறார்கள்.
ஒரு செய்தியாளராக இந்த அனுபவம் என் தொழில்மீதான பொறுப்புணர்வை என்னுள் அழுத்தமாகப் பதித்தது. அதற்கும் அப்பால் ஒரு சிங்கப்பூரராக நமது தற்காப்பு அமைப்பின் அசாத்தியமான திறனையும், ஒருமைப்பாட்டையும் கண்டு எல்லை இல்லாப் பெருமிதம் கொண்டேன்.

