வலி, சோர்வினால் மாதவிடாய் நாள்களில் பெண்கள் பொதுவாக உடற்பயிற்சி செய்வதைத் தவிர்ப்பதுண்டு. ஆனால், மாதவிடாயின்போது உடற்பயிற்சி செய்வதால் நன்மைகளும் உண்டு.
நோய்க்குறிகள் குறைவு
மாதவிடாய்க்கு முந்தைய நாள்களிலும் மாதவிடாயின்போதும் சோர்வு, மனநிலை மாற்றங்கள் ஏற்படுவதுண்டு. உடற்பயிற்சி இந்த அறிகுறிகளைக் குறைக்க உதவும். குறிப்பாக, ஏரோபிக் உடற்பயிற்சிகள் பரிந்துரைக்கப்படுகின்றன.
என்டோர்ஃபின் அதிகரிப்பு
உடற்பயிற்சி செய்வதால் இயற்கையாகவே என்டோர்ஃபின் அதிகரிக்கிறது. இதனால், மனநிலையும் மேம்படும்.
மேலும், என்டோர்ஃபின் இயற்கையான வலி நிவாரணி என்பதால் மாதவிடாயிலிருந்து வரும் உடல் வலியை உடற்பயிற்சி போக்கும்.
சில பெண்கள் ‘டிஸ்மெனோரியா’ எனும் வலிமிகு மாதவிலக்கை அனுபவிக்கிறார்கள். அடி வயிறு, முதுகு போன்ற இடங்களில் பெரும் வலி வருவதால் எளிதில் சோர்வடையலாம். இதைக் குறைக்க மிதமான நடைப்பயிற்சி போன்ற உடற்பயிற்சிகளைப் பெண்கள் மேற்கொள்ளலாம்.
மாதவிடாய் காலத்துக்கான உடற்பயிற்சிகள்
அதிக ரத்தக் கசிவால் மாதவிடாயின் முதல் சில நாள்கள் மிகவும் அசௌகரியமாக இருக்கும். அதனால், மென்மையான அசைவுகளிலும் உடற்பயிற்சிகளிலும் கவனம் செலுத்துவது அவசியம்.
இலேசான கார்டியோ, நடைப்பயிற்சி அல்லது ஏரோபிக் உடற்பயிற்சியின் மீது கவனம் செலுத்தலாம்.
அத்துடன் குறைந்த அளவு வலிமையைப் பயன்படுத்தும் உடற்பயிற்சிகளை மேற்கொள்ளலாம்.
தொடர்புடைய செய்திகள்
மாதவிடாய்க்கு முந்தைய இரண்டு முதல் மூன்று நாள்கள் யோகா போன்ற பயிற்சிகளில் ஈடுபடலாம். உடலை நிதானப்படுத்தவும் தசைப்பிடிப்பு, மார்பகப் பகுதியில் நோவு, தசைச் சோர்வு மற்றும் வலி போன்றவற்றை யோகா செய்வதன் மூலம் குறைக்க இயலும்.
மாதவிடாய்க் காலத்தில் எந்த அசௌகரியத்தையும் உணராத பெண்கள் வழக்கமான உடற்பயிற்சியைத் தொடரலாம். இருப்பினும் ஓய்வெடுப்பதும் அவசியம்.