கருவுற்ற பெண்கள் உடற்பயிற்சி செய்யக்கூடாது என்பது ஒரு கட்டுக்கதை. கருவுற்ற நேரத்தில் உடற்பயிற்சிகள் மேற்கொள்வது மிகச் சிறந்தது. கருவுற்ற நேரத்தில் பெண்கள் பெரும்பாலும் எதிர்நோக்கும் வலிக்கு உடற்பயிற்சி சிறந்த நிவாரணம்.
கால் வீக்கம், இடுப்பு வலி போன்றவை ஒரு கருவுற்ற பெண்ணுக்கு வழக்கமாக ஏற்படக்கூடியவை. கருவுற்ற நேரத்தில் உடற்பயிற்சி செய்வது ஒரு பெண்ணின் மனநலனுக்கும் உடல்நலனுக்கும் நல்லது.
குறிப்பிட்ட உடற்பயிற்சிப் பழக்கத்தைக் கடைப்பிடிக்கும்போது கர்ப்பகால நீரிழிவு நோய் தவிர்ப்பு, குறைந்த சிரமத்துடன் குழந்தை பெற்றுக்கொள்வது, கருவுற்ற நேரத்தில் எடை கூடாமல் இருப்பது போன்ற நன்மைகளைப் பெண்கள் பெறலாம்.
வேக நடை, மெதுவோட்டம், ஒரே இடத்தில் மிதிவண்டி ஓட்டுவது, நடனம், நீச்சல், எடை தூக்குவது, யோகா, பிளாட்டெஸ் போன்ற உடற்பயிற்சிகளை மேற்கொள்ள பாதுகாப்பானவை.
முதல் மூன்று மாதங்களிலிருந்து குழந்தை பெற்றுக்கொள்வது வரை பெண்கள் விறுவிறுப்பான உடற்பயிற்சிகளில் ஈடுபடத் தொடங்கலாம். ஒரு வாரத்திற்கு நான்கிலிருந்து ஐந்து முறை, ஒவ்வொரு முறையும் குறைந்தது 30 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்யலாம்.
முதல் மூன்று மாதங்கள் ஒரு பெண்ணுக்குப் புதுமையாக இருக்கும். மெதுவான உடற்பயிற்சியை முதலில் தொடங்கலாம். புதிதாக உடற்பயிற்சியில் இறங்கும் பெண்கள் வேக நடையில் ஆரம்பிக்கலாம். பின்னர், நடக்கும்போது எடையைத் தூக்கிக்கொண்டும் நடக்கலாம்.
அடுத்த மூன்று மாதங்கள் பெரும்பாலான பெண்களுக்குப் பழக்கமாகி விடும். உடற்பயிற்சியின் தீவிரத்தை அதிகரிக்கலாம். அதன்பிறகு வரும் மூன்று மாதங்கள் சற்று கடினமாகிவிடும். குழந்தை பெற்றுக்கொள்ளத் தயாராக இருக்கும் இந்நேரத்தில் குனிவதும்கூட சிரமமாகத்தான் இருக்கும்.
உடலின் அசைவுத் தன்மையைக் கூட்டுவதில் கவனம் செலுத்தவேண்டும். யோகா, நீச்சல், இடுப்பு தசைகளுக்கான உடற்பயிற்சிகள் போன்றவற்றை மேற்கொள்ளலாம்.
தொடர்புடைய செய்திகள்
இந்த உடற்பயிற்சிகள் பெரும்பாலான பெண்களுக்குப் பாதுகாப்பானதாக இருக்கும். இருந்தாலும் கருவுற்ற நேரத்தில் ஒரு பெண் அவரின் உடலுக்கேற்றவாறு உடற்பயிற்சிகளைச் செய்ய வேண்டும்.
உடற்பயிற்சி செய்யும்போது சோர்வாக இருந்தால் உடனடியாக ஓய்வு எடுக்க வேண்டும். கீழே விழுவதற்கும், வயிற்றுப் பகுதி காயமடைவதற்கும் அதிக ஆபத்துள்ள உடற்பயிற்சிகளை மேற்கொள்ளக்கூடாது.
சந்தேகம் இருந்தால் உடனடியாக மருத்துவரை நாடவேண்டும். அவ்வப்போது தண்ணீர் பருகி, ஏதாவது சாப்பிட வேண்டும்.