சாதாரண தருணங்களைப் பதிவாக்கும் அசாதாரண ஓவியர்

சாதாரண தருணங்களைப் பதிவாக்கும் அசாதாரண ஓவியர்

2 mins read
ca955927-f240-4821-9695-82407108d417
இந்த ஆண்டு தனது தாயாரின் ஓவியத் தொடரை வெளியிடவும் அதில் அவரது வரைபடங்களை இணைக்கவும் கெண்ட் விரும்புகிறார். - படம்: கெண்ட் லாவு 

அன்றாடம் காணும் கட்டட அமைப்புகள், மக்கள், தருணங்களில் கலை நிறைந்துள்ளது என்று நம்புகிறார் ஓவியர் கெண்ட் லாவு, 58.

ஒரு நோட்டுப்புத்தகத்தையும் சில பேனாக்களையும் கையில் ஏந்திய வண்ணம் மிகவும் சாதாரணமான தருணங்களைக் கூட ஓவியங்கள் வரைவதன் மூலம் உயிர்ப்பிக்கிறார் கெண்ட்.
ஒரு நோட்டுப்புத்தகத்தையும் சில பேனாக்களையும் கையில் ஏந்திய வண்ணம் மிகவும் சாதாரணமான தருணங்களைக் கூட ஓவியங்கள் வரைவதன் மூலம் உயிர்ப்பிக்கிறார் கெண்ட். - படம்: கீர்த்திகா ரவீந்திரன் 

நோட்டுப்புத்தகத்தையும் பென்சில்களையும் கொண்டு மிகவும் சாதாரணமான தருணங்களையும் ஓவியங்களாக உயிர்ப்பிக்கிறார் கெண்ட்.

தொடக்கப்பள்ளியில் இருந்தபோது வரையத் தொடங்கினார் கெண்ட். 1990ஆம் ஆண்டு சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகத்தில் கணினி அறிவியல் படித்துக்கொண்டிருந்தபோது அவரது வகுப்புத் தோழர்களை வரைந்ததே அவரது முதல் ஓவியம்.

“முகங்களை நினைவில் வைத்துக்கொள்ள ஓவியம் வரைகிறேன். என் வகுப்புத் தோழர்களை வரைந்துள்ளதால் இப்போதும் என்னால் அவர்களை அடையாளம் காணமுடியும்,” என்றார் அவர்.

ஆசிய நிதி நெருக்கடி காரணமாக, 1980களில் கலைத்துறையின் வேலையின்மை விகிதம் கிட்டத்தட்ட 97% ஆக இருந்தது. அதனால் தனது பாதையை மறுபரிசீலனை செய்து கணித அறிவியலில் பட்டப்படிப்பை மேற்கொண்டார்.

அறிவியல், கணிதப் பாடங்களில் கெண்ட் கொண்டிருந்த அதிக ஆர்வம் அவரது கலைத்திறனுக்கும் பயனுள்ளதாக இருந்தது.

“மூன்றில் ஒரு பங்கு விதி (rule of thirds), தங்க விகிதம் (golden ratio) போன்ற ஓவியம் வரைதல் சார்ந்த நுணுக்கங்கள் என் திறனை மேம்படுத்தின,” என்று தெரிவித்தார்.

கணினி, வரைகலை, காட்சி வடிவமைப்பு மூலம் நவீன முறைகளில் ஓவியம் வரையத் தொடங்கினார். அவரது தந்தையும் கலையார்வத்தை ஊக்குவித்தார்.

“என் தந்தை பாரம்பரிய சீன எழுத்தோவியம், இசையில் வல்லுநர். அவருடைய அனுபவம் என்னைப் பாரம்பரிய சீன கலைக்கு இழுத்தது,” என்றார் அவர்.

கெண்டின் கனவுகளில் ஒன்று ராணுவ வீரராவது. ராணுவத்தில் உளவுத்துறை, தானியங்கிக் கருவிகள்மீது அவருக்கு ஆர்வம் அதிகம்.

2005ஆம் ஆண்டில் மணமுறிவுக்குப் பிறகு, கெண்ட் சீனா செல்ல முடிவு செய்தார்.

தம் முன்னோர் கடந்து வந்த பாதையை அறிந்துகொள்ள விரும்பிய அவர், சீனாவில் தமது சுயதொழிலைத் தொடங்கியதுடன், ஷாங்காயில் வசிக்கும் சிங்கப்பூரர்களுடன் தொடர்பையும் ஏற்படுத்தினார். அந்த அனுபவம் தன்னார்வத் தொண்டில் அவருக்கு ஆர்வத்தை ஏற்படுத்தியது.

2022ஆம் ஆண்டில் தாயாருக்கு ஏற்பட்ட நினைவிழப்பு நோய் (டிமென்ஷியா) காரணமாக கெண்ட் சிங்கப்பூர் திரும்பினார்.

தன்னைப் போன்ற பராமரிப்பாளர்களை ஆதரிப்பதற்கான பராமரிப்பு ஆதரவுக் குழுவைத் தொடங்கினார்.

மாற்றங்கள் நிறைந்த வாழ்க்கையில் கெண்ட் தொடர்ந்து தனது கலையில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.

“அண்மையில் அம்மாவுக்கும் எப்படி வரைய வேண்டும் என்று கற்றுக்கொடுத்தேன். கல்வி, கலை இரண்டுக்கும் வயது ஒரு பொருட்டல்ல,” என்று சிரித்தார்.

இந்த ஆண்டு தனது தாயாரின் ஓவியத் தொடரை வெளியிடவும் அதில் அவரது வரைபடங்களை இணைக்கவும் கெண்ட் விரும்புகிறார்.

“மக்கள், இடங்கள், தருணங்களைப் பற்றிய கதைகளைச் சொல்லும் ஓர் ஆயுதம் கலை. ஒரு வகையில், அதுவே என் கதையையும் சொல்கிறது,” என்றார் இந்தக் கலைஞர்.

குறிப்புச் சொற்கள்