சிங்கப்பூரின் சுற்றுப்பயணத் துறைக்கு எஃப்1 இரவுநேர கார் பந்தயம் ஆற்றும் பங்கு, போட்டியைக் காணத் திரண்ட மக்களைக் காணும்போதே தெரிகிறது.
இந்தச் சுற்றுப்பயணத்தால் பொருளாதாரத்துக்கு ஏற்படும் நன்மைகளால்தான் ஆண்டுதோறும் எஃப்1 தொடர்பான செலவுகளில், அதாவது ஏறத்தாழ 140 மில்லியன் வெள்ளியில் 60 விழுக்காட்டை சிங்கப்பூர் அரசாங்கம் ஏற்றுக்கொள்வதாக பிஸ்னஸ் டைம்ஸ் தகவல் கூறுகிறது.
எஃப்1 பந்தயத் தடத்தைச் சுற்றியுள்ள ஹோட்டல்களில் கட்டணம் ஓர் இரவுக்கு $1,000லிருந்து $4,000 வெள்ளி வரை உயர்ந்துள்ளது.
செலவு அதிகம் என்றாலும் எதனால் எண்ணற்ற சுற்றுப்பயணிகள் கடல்கடந்து இந்த கார் பந்தயத்தைக் காண சிங்கப்பூருக்கு வருகின்றனர் என்பதை அறிந்துவந்தது தமிழ் முரசு.
பெங்களூரிலும் ஆஸ்திரேலியாவில் வசிக்கும் தன் நெருங்கிய நண்பர்களுக்காக நுழைவுச்சீட்டுகள் வாங்கி, அவர்களை சிங்கப்பூருக்கு வரவழைத்ததாகக் கூறினார் பிரபாகர் கோபாலன்.
“சென்றமுறை நாங்கள் சந்தித்தபோதே இப்போட்டியைக் காண அவர்களை அழைப்பதாக வாக்குறுதி அளித்திருந்தேன்,” என நினைவுகூர்ந்தார் பிரபாகர். தன் மனைவி, இரு தோழர்களுடன் சனிக்கிழமை (செப்டம்பர் 21) நடைபெற்ற தகுதிச் சுற்றைக் கண்டு களித்தார் பிரபாகர்.
“எனக்கு டேனியல் ரிக்கியார்டோவை மிகவும் பிடிக்கும். அவர் ஒரு நல்ல மனிதர். ஆஸ்திரேலியாவில் கார் பந்தயங்கள் மிகவும் புகழ் பெற்றவை. எனக்கும் சிறுவயதிலிருந்து அவற்றின் மீது நாட்டம்,” என்றார் பிரபாகரின் தோழர்களில் ஒருவரான ஆஸ்திரேலியாவில் படிக்கும் லக்ஷ்யா, 21.
பாரிசுக்கு ஆறு மணி நேரம் விமானப் பயணம் மேற்கொண்டு பின்பு சிங்கப்பூருக்குத் தன் மகனோடு வந்த திரு கோனே, இப்பந்தயத்தில் மேக்ஸ் வெர்ஸ்டாப்பன், மற்றும் மெர்சிடிஸ் அணியைக் காண்பதற்காகவே வந்ததாகக் கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
வெர்ஸ்டாப்பன் வெற்றிபெற்றால் தன் பயணம் முழுமையடையும் என்றார் அவர்.
“என் மகன் எஃப்1ல் ஊடகத் துறையில் பணியாற்றுபவர். நாங்கள் லண்டனிலிருந்து இங்கு வந்துள்ளோம். எனக்கும் எங்கள் நண்பருக்கும் விஐபி நுழைவுச்சீட்டுகள் கிடைத்தன. சிங்கப்பூரில் இப்பந்தயத்தைக் காண்பது இரண்டாம் முறை. பல இடங்களைச் சுற்றிப் பார்த்தேன்,” என்றார் ஓய்வுபெற்ற தொழில்நுட்ப மேலாளர் ஆண்டனி பரேட்டோ.
“மற்ற நாடுகளோடு ஒப்பிடுகையில் சிங்கப்பூரில் எஃப்1 பந்தயத்தைக் காண்பது அவ்வளவு ஒன்றும் விலையுயர்ந்ததன்று. சில ஹோட்டல்களில் 8,000 வெள்ளிக்கு அனைத்தையும் உள்ளடக்கும் நல்ல சலுகைகள்கூட உள்ளன,” என்றார் அவருடன் லண்டனிலிருந்து வந்த அவரது தோழர்.

