சிறுவர்களுக்கு விவசாயம் கற்றுத் தரும் நூல்

2 mins read
ff0b4f45-2161-42c7-b3d4-4adccc898ce5
இந்நூல் ஆசிரியர் ஜுனைதா கபூரிடம் நூல் வாங்கும் சிறுவர். - படம்: ஜுனைதா கபூர்

சிறுவர்களுக்கு விவசாயத்தின் அடிப்படைகள் பற்றி விளக்கும் ‘நகர்ப்புறப் பண்ணையில் பாலா’ எனும் சித்திரக் கதை நூல் ஆகஸ்ட் 31ஆம் தேதி வெளியீடு கண்டது.

இருமொழிக் கல்விக்கான லீ குவான் யூ நிதி ஆதரவுடன் இந்த நூலை எழுதி வெளியிட்டுள்ளார் பட்டயக் கணக்காளரும், இயற்கை, விவசாய ஆர்வலருமான 53 வயது ஜுனைதா கபூர்.

சிறுவர்களுக்குச் செடி வளர்ப்பு, விவசாயம் குறித்த ஆர்வத்தைத் தூண்டும் விதமாக அமைந்தது விக்டோரியா ஸ்திரீட்டிலுள்ள தேசிய நூலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி. சிறுவர்கள், பெற்றோர் என 60 பேர் உற்சாகத்துடன் பங்கேற்றனர்.

செடி வளர்ப்புப் பற்றிய விளையாட்டு அங்கத்தை வழிநடத்திய ஆசிரியை கலைவாணி.
செடி வளர்ப்புப் பற்றிய விளையாட்டு அங்கத்தை வழிநடத்திய ஆசிரியை கலைவாணி. - படம்: ஜுனைதா கபூர்

நிகழ்ச்சியின் ஓர் அங்கமாக தொடக்கக் கல்லூரி ஆசிரியர் கலைவாணியின் ‘எனக்குப் பிடித்த காய்கறி ஒன்று’ எனும் தலைப்பில் விளையாட்டுடன் கூடிய கற்றல் அங்கம் இடம்பெற்றது.

சிறுவர்களின் விருப்பமான காய்கறிகளைக் கேட்டறிந்து, அவை வளரும் முறை குறித்து கலந்துரையாடல் நடைபெற்றது. ஆர்வத்தை மேலும் நீட்டிக்கும் நோக்கில் விரைவில் வளரும் ‘பயிற்றங்காய்’ விதைகள் வந்திருந்தோருக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டன. சிறுவர்களுக்கு அவற்றை வளர்க்கும் முறையும் கற்றுக்கொடுக்கப்பட்டது.

இந்நூல் ஆசிரியர் ஜுனைதா கபூர், “சிறுவர்கள் தாங்களே நட்ட விதை செடியாக வளர்வதைக் கண்டு மகிழ்வார்கள். அது, செடி வளர்ப்பு குறித்து மேலும் அறிந்துகொள்ள அவர்களைத் தூண்டும்,” என்று தாம் நம்புவதாகக் கூறினார்.

நூல் வெளியீட்டு விழாவில் விவசாயம் பற்றி சிறுவர்கள் தெரிந்துகொண்டனர்.
நூல் வெளியீட்டு விழாவில் விவசாயம் பற்றி சிறுவர்கள் தெரிந்துகொண்டனர். - படம்: ஜுனைதா கபூர்
செடி வளர்ப்பது பற்றிக் கற்றுக்கொள்ளும் சிறுவர்கள்.
செடி வளர்ப்பது பற்றிக் கற்றுக்கொள்ளும் சிறுவர்கள். - படம்: ஜுனைதா கபூர்

நகர்ப்புற விவசாயத்தில் ஈடுபடுவோர் சிலரை அழைத்து வந்து சிறுவர்களுடன் கலந்துரையாடி, நகர்ப்புறத்தில் காய்கறி, கீரை வளர்ப்பின் சாத்தியக்கூறுகள் குறித்தும் அதன் முக்கியத்துவம் குறித்தும் விளக்கப்பட்டது.

சிறுவர்களுக்குப் பிடித்த வகையில் படங்கள், நேரடி விளக்கங்கள் மூலம் விவசாயம் குறித்து இந்நிகழ்ச்சி தெரியப்படுத்தியதாகப் பெற்றோர் கூறினர்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்