மனநிலை, பசி, உறக்கம் மேம்பட இதைச் செய்யுங்கள்: புதிய ஆய்வு முடிவுகள்

மனநிலை, பசி, உறக்கம் மேம்பட இதைச் செய்யுங்கள்: புதிய ஆய்வு முடிவுகள்

2 mins read
7e5e9e82-09b6-4167-8794-c386874f6c9a
மாதிரிப்படம்: - பிக்சாபே

ஒரு நாளில் பத்து மணி நேரத்திற்குள் உணவை முடித்துக்கொள்வது ஒருவரின் உடல், மனநலத்தில் நல்ல மாற்றங்களை ஏற்படுத்தும் என்று புதிய ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

லண்டன் கிங்ஸ் கல்லூரி ஆய்வாளர்கள் மேற்கொண்ட பெரிய அளவிலான சமூக ஆய்வு முடிவுகள் அண்மையில் ஐரோப்பிய ஊட்டச்சத்து மாநாட்டில் முன்வைக்கப்பட்டன.

உடல் எடையைக் குறைப்பதற்கு இடையிடையே உண்ணா நோன்பிருத்தல், அல்லது குறிப்பிட்ட கால வரம்பிற்குள் உணவை முடித்துக்கொள்வது பலரும் பின்பற்றும் வழிமுறையாகத் திகழ்கிறது.

பத்து மணி கால வரம்பு முறைப்படி, ஒவ்வொரு நாளும் பத்து மணி நேரத்திற்குள் உணவை முடித்துவிட்டு, அடுத்த 14 மணி நேரத்திற்கு எதையும் உண்ணாமல் இருக்க வேண்டும். அதாவது, காலை உணவை 9 மணிக்கு அன்றைய நாளின் முதல் கவள உணவை எடுத்துக்கொண்டால், இரவு 7 மணிக்குள் அன்றைய நாளின் கடைசி உணவை முடித்துக்கொள்ள வேண்டும்.

இப்படி, குறிப்பிட்ட கால வரம்பிற்குள் உண்ணும் பழக்கத்தைக் கொண்டிருப்பவர்கள், கண்ட நேரத்தில் உண்பவர்களைக் காட்டிலும் நற்பயன்களைப் பெறுவதாக ஆய்வு முடிவுகள் கூறுகின்றன.

ஒரு நாளுக்கான உணவைப் பத்து மணி நேரத்திற்குள் முடித்துக் கொள்வோரின் மனநிலை மேம்படுவதாகவும் அவர்கள் நன்றாக உறங்க முடிவதாகவும் அவர்களுக்கு நல்ல பசி ஏற்படுவதாகவும் ஆய்வுத் தரவுகள் தெரிவிக்கின்றன.

இந்த மூன்று வார ஆய்வில் மொத்தம் 37,545 பேர் பங்குகொண்டனர். இந்த மூன்று வார ஆய்வில், அவர்கள் முதல் வாரத்தில் வழக்கமான உணவுப் பழக்கத்தைப் பின்பற்றினர். அடுத்த இரு வாரங்களுக்கு அவர்கள் ஒவ்வொரு நாளும் பத்து மணி நேரத்திற்குள் உணவை முடித்துக்கொண்டனர்.

ஆய்வின் முடிவில் அவர்களது உடல்நலம் மேம்பட்டிருந்தது கண்டறியப்பட்டது.

லண்டன் கிங்ஸ் கல்லூரியைச் சேர்ந்த ஆய்வாளர் கேட் பர்மிங்ஹம் கூறுகையில், “எப்படி உண்ண வேண்டும் என்பதன் முக்கியத்துவத்தை இந்த ஆய்வு முடிவுகள் காட்டுகின்றன. என்ன உணவு உண்கிறீர்கள் என்பது மட்டுமன்று, எந்த நேரத்தில் உண்கிறீர்கள் என்பதும் ஒருவரது உடல்நலத்தில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. பத்து மணி நேரத்திற்குள் உண்டு முடித்துவிட்டாலே ஒருவர் நிறைவாக உணரலாம்; உடல் எடையையும் குறைக்கலாம்,” என்றார்.

குறிப்புச் சொற்கள்