சிங்கப்பூர் வரலாற்றை ‘வாமனத் தீவு’ என்னும் தலைப்பில் நூலாக இயற்றிய சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகத்தின் முன்னாள் தலைவர் நா. ஆண்டியப்பனுக்குத் தமிழ்நாட்டின் புதுக்கோட்டை நகரில் பாராட்டு விழா நடைபெற்றது.
புதுக்கோட்டைத் தமிழ்ச் சங்கமும் ‘தி ரூட்ஸ்’ அமைப்பும் இணைந்து ஜனவரி 26ஆம் தேதியன்று நடத்திய இந்நிகழ்ச்ச்சியில் ஏறக்குறைய நூறு பேர் கலந்துகொண்டனர்.
விழாவில் வாமனத் தீவு (சிங்கப்பூரின் வரலாற்றுத் தொகுப்பு) நூலும் அறிமுகம் கண்டது.
விழாவில் சிறப்புரை ஆற்றிய ‘தி ரூட்ஸ்’ அமைப்பின் நிறுவனரும், ஆவண, திரைப்பட இயக்குநரும், எழுத்தாளருமான முனைவர் பாரதி கிருஷ்ணகுமார், “மூன்றாம் நூற்றாண்டிலிருந்து 21ஆம் நூற்றாண்டு வரையிலான தகவல்கள் நூலில் இடம்பெற்றுள்ளன. பல ஆண்டுகள் ஆய்வு செய்து இந்த நூலை இயற்றியிருப்பது போற்றத்தக்கது,” என்று குறிப்பிட்டார்.
தலைமையுரை ஆற்றிய புதுக்கோட்டைத் தமிழ்ச் சங்கத்தின் தலைவரான கவிஞர் தங்கம் மூர்த்தி, 2011ஆம் ஆண்டு சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம் ஏற்பாடு செய்து நடத்திய முதல் உலகத் தமிழ் எழுத்தாளர் மாநாட்டைத் திரு ஆண்டியப்பனும் செயலாளர் அருணாசலமும் திட்டமிட்டுச் சிறப்பாக நடத்திய விதம் தம்மையும் மற்றப் பேராளர்களையும் கவர்ந்ததாகக் குறிப்பிட்டார். மேலும், வாமனத் தீவு நூலில் சிங்கப்பூர் பற்றி இதுவரை அறியாத பல தகவல்களை அறிந்துகொள்ள முடிந்தது என்றும் அவர் சொன்னார்.
நூலை அறிமுகம் செய்த அழகப்பா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் முனைவர் சொ.சுப்பையா, “சின்னஞ்சிறிய தீவான சிங்கப்பூர் மகத்தான வளர்ச்சி பெற்றிருக்கிறது என்பதைக் குறிக்கும் வகையில் வாமனத் தீவு என்ற பொருத்தமான தலைப்பை நூலாசிரியர் வைத்துள்ளார். அந்தத் தீவு மலேசியாவுடன் ஏன் இணைந்தது, பின்னர் ஏன் பிரிந்தது என்பதற்கான விளக்கங்களை நூலை வாசித்துத் தெரிந்துகொள்ளலாம்,” என்றார்.
சிங்கப்பூரின் ‘மக்கள் மனம்’ ஆசிரியரும் கவிமாலையின் நிறுவனறுமான கவிஞர் பிச்சினிக்காடு இளங்கோ, மணப்பாறை சௌமா கல்வி நிறுவனங்களின் தாளாளர் சௌமா லயன் இராஜரத்தினம் ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.
ஏற்புரையுரையுடன் நன்றியுரையும் ஆற்றிய நூலாசிரியர் நா. ஆண்டியப்பன், தனது நட்பு வட்டத்தில் இணைந்துள்ள முனைவர் பாரதி கிருஷ்ணகுமாரும் கவிஞர் தங்கம் மூர்த்தியும் தமக்குப் பாராட்டு விழா நடத்தியது நெகிழ்ச்சி அளிப்பதாகக் குறிப்பிட்டார்.

