தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

உணவுப் பழக்கமும் மூளைச் செயல்பாடும்

3 mins read
28cf55f8-e962-4826-a8e5-e85d812fc48b
உணவு, குடலின் நரம்பணுக்களால் உணரப்பட்டு, அவை மூளைக்கு எச்சரிக்கை சமிக்ஞைகளை அனுப்புகின்றன. - படம்: ஊடகம்

மனித உடலின் அனைத்துச் செயல்பாடுகளுக்கும் மூலகாரணமாக இருப்பது மூளை.

ஒவ்வோர் உடலுறுப்பின் செயல்பாட்டிற்கும் வழிவகுப்பதுடன், அதனைக் கண்காணித்து, பிற உறுப்புகளுடன் தொடர்பு ஏற்படுத்தி, உடலின் ஒருங்கிணைந்த செயல்பாட்டிற்கு மூளை உதவுகிறது.

ஒருவர் உட்கொள்ளும் உணவு, உடலியக்கத்தில் மாற்றத்தை ஏற்படுத்துவது போலவே, மூளைச் செயல்பாடுகளிலும் மாற்றத்தை ஏற்படுத்தும் என்கின்றனர் வல்லுநர்கள். குறிப்பாக, ஒருவர் உட்கொள்ளும் உணவு மூளை நரம்பணுக்களில் (நியூரான்கள்) தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

மூளையின் கட்டளைகளை, மின்சாரத் தூண்டுதல் வடிவில் மாற்றி உறுப்புகளுக்கிடையே கடத்தும் முக்கியப் பணியை நியூரான்கள் மேற்கொள்கின்றன.

நரம்பு மண்டலத்தில் சமநிலையைப் பேண நியூரான்களை நலமாக வைத்திருப்பது அவசியம்.

சில தவறான உணவுப் பழக்கங்கள், புதிய நியூரான்கள் உருவாவதையும் தடுக்கின்றன. கொழுப்பு, சர்க்கரை நிறைந்த நலமற்ற உணவுகளைத் தொடர்ந்து உட்கொள்வது நியூரான்களில் வீக்கத்தை ஏற்படுத்தி, மூளையின் செயல்பாட்டைப் பாதிக்கிறது. இதனால் மனச்சோர்வு தொடங்கி பல்வேறு மூளைக் கோளாறுகளும் ஏற்படும் வாய்ப்புள்ளது.

மறுபுறம், ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள் போன்ற ஊட்டச்சத்துகளைக் கொண்ட உணவை உட்கொள்வது மூளைக்கு நன்மை பயக்கும். அது நியூரான்களின் உருவாக்கத்தை மேம்படுத்தும். இதனால் நினைவாற்றல் அதிகரிப்பதுடன், சிந்தனை, கவனம் உள்ளிட்டவையும் மேம்படும்.

குடலும் மூளையும் நியூரான்களால் நேரடியாக இணைக்கப்பட்டுள்ளன. அவற்றுக்கிடையே செய்திகள் முன்னும் பின்னுமாக பகிரப்படுகின்றன.

உணவு, குடலின் நியூரான்களால் உணரப்பட்டு, அவை மூளைக்கு எச்சரிக்கை சமிக்ஞைகளை அனுப்புகின்றன. இதனை ‘குடல் - மூளை அச்சு’ (gut-brain axis) என்று மருத்துவ உலகம் வரையறுத்துள்ளது.

இதன் விளைவாக, உணவு, மூளையின் சிந்தனைச் செயல்பாடுகளான கற்றல், நினைவில் வைத்திருத்தல், திட்டமிடல், கற்பனைத் திறன் உள்ளிட்டவற்றில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

நலமற்ற உணவு, மூளையில் ஒருவகையான மன அழுத்த ஹார்மோன்களையும் அதிக அளவில் வெளியிடுகிறது.

மூளைக்கான ஊட்டச்சத்துகள்

ஒமேகா-3 கொழுப்பு அமிலம் நிறைந்த உணவை உட்கொள்வது அறிவுத்திறனில் நேர்மறைத் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. அது, அல்சைமர் நோய், மனச்சோர்வு, அழுத்தம் உள்ளிட்ட சில பாதிப்புகளின் அபாயத்தையும் குறைக்கும். ஒமேகா-3 குறிப்பாக உலர்விதைகளிலும், முட்டை, மீன் வகை உணவுகளிலும் அதிகம் காணப்படுகின்றது.

வைட்டமின் இ, ஃபோலேட், செலினியம், ஃபோலிக் அமிலம், மெலட்டோனின், கோலின் ஆகிய நுண்சத்துகள் மூளைச் செயல்பாடுகளுக்கு உதவி செய்கின்றன. அவை, மூளை வளர்ச்சிக்கும் நரம்பு மண்டலத்தின் பாதுகாப்பிற்கும் உதவுகின்றன. முந்திரி, வாதுமை, வால்நட் உள்ளிட்டவற்றில் அச்சத்துகள் அதிகம் காணப்படுகின்றன.

மஞ்சளில் அதிகமுள்ள குர்க்குமின் எனும் வேதிப்பொருள் வயதானவர்களுக்கு ஏற்படும் மறதிநோய் தொடங்கி, மனநிலையில் பல மாற்றங்கள் ஏற்படும் அபாயத்தைத் தடுக்கின்றது. மூளையிலுள்ள வளர்ச்சி ஹார்மோன்களின் செயல்பாட்டை ஊக்குவிக்கவும் புதிதாக நியூரான்கள் வளர்வதற்கும் இது உதவுகிறது.

பொட்டாசியம், மெக்னீசியம் உட்கொள்வது, மூளையில் செரட்டோனின் உற்பத்தியைத் தூண்டி, மகிழ்ச்சியான மனநிலையை உருவாக்கும்; சீரற்ற ரத்த ஓட்டத்தால் ஏற்படும் மூளைச்சிக்கலைச் சரிசெய்யும். இவை கீரைகளில் அதிகம் காணப்படுகின்றன.

மூளை சிறப்பாகச் செயல்படுவதற்கான சில உயிர்ச்சத்துகளை (வைட்டமின்) ஈஸ்ட்டிலிருந்து பெற முடியும். இதில் வைட்டமின் பி, புரதம் ஆகியவை காணப்படுவதால், மனநிலை தொடர்பான பிரச்சினைகளைச் சரிசெய்ய உதவும். மூளையின் ஆயுட்காலத்தை அதிகப்படுத்தி, கவனிக்கும் திறனையும் அதிகரிக்கச் செய்கிறது. இவற்றை இட்லி, தோசை, ஆப்பம் உள்ளிட்ட நொதித்த உணவுகளிலிருந்தும் சில முழு தானிய ரொட்டி வகைகளிலிருந்தும் பெறலாம்.

இது தவிர வைட்டமின் பி, பி2, ரிபோஃபிளேவின், நயாசின், பேன்டோதெனிக் அமிலம், செம்பு, தோரின், கோலின், பயோட்டின் ஆகிய உயிர்ச்சத்துகள் நரம்பு, முதுகெலும்பு, மூளைப் பகுதிகள் சிறப்பாகச் செயல்பட உதவி புரிகின்றன.

மருத்துவர், ஊட்டச்சத்து வல்லுநர்களின் பரிந்துரையின்பேரில் உரிய ஊட்டச்சத்துகள் நிறைந்த உணவுகளை உட்கொள்வது மூளையை நலமாகவும் மகிழ்ச்சியாகவும் வைத்திருக்க உதவும்.

குறிப்புச் சொற்கள்