சிங்கப்பூரிலுள்ள தமிழ்ச் சங்கங்களைக் காற்பந்துவழி இணைத்தது புதுக்கல்லூரி (The New College) முன்னாள் மாணவர் சங்கம் (சிங்கப்பூர்).
அச்சங்கம் செப்டம்பர் 27ஆம் தேதி சனிக்கிழமையன்று முதன்முறையாகச் சங்கங்களுக்கிடையே நடத்திய காற்பந்துப் போட்டி, சிங்கப்பூர் இந்தியர் சங்கத்தின் ஃபுட்சால் திடலில் நடைபெற்றது.
மொத்தம் 16 அணிகள் மோதின.
அனல் பறந்த ஆட்டங்களுக்குப்பின் சிங்கப்பூர் கடையநல்லூர் முஸ்லிம் லீக் ‘சூப்பர் ஈகல்ஸ்’ முதல் நிலையையும், புதுக்கல்லூரி முன்னாள் மாணவர் சங்கம் (சிங்கப்பூர்) இரண்டாம் நிலையையும், சிங்கப்பூர் காயில் நற்பணி மன்றம் மூன்றாம் நிலையையும் பிடித்தன.
இவ்வாண்டு தமிழகத்தைப் பூர்விகமாகக் கொண்ட சிங்கப்பூர் அமைப்புகளே போட்டியிட்டன.
“நிறைய உள்ளூர் அமைப்புகளும் இவ்வாண்டு ஆர்வம் காட்டின என்பதில் மகிழ்ச்சி. ஆனால், முதன்முறை என்பதால் ஒருநாளுக்குள் போட்டியை முடித்துவிட வேண்டும் எனக் கருதி 16 அணிகளுடன் பதிவை நிறுத்தினோம்.
“அடுத்த ஆண்டு பல உள்ளூர் அமைப்புகளையும் எங்களுடன் விளையாடுவோரையும் போட்டியில் ஈடுபடுத்த விரும்புகிறோம்,” என்றார் புதுக்கல்லூரி முன்னாள் மாணவர் சங்கம் (சிங்கப்பூர்) தலைவர் அர்ஷத் அலி.
“எங்கள் சங்கத்தின் முக்கிய நோக்கம், சிங்கப்பூரிலுள்ள அனைத்து அமைப்புகளையும் ஒன்றிணைத்து, மக்களுக்கிடையே பிணைப்பை ஏற்படுத்துவதுதான்,” என்றார் சங்கத்தின் உதவிச் செயலாளரும் போட்டியின் ஏற்பாட்டாளருமான அஸ்லாம்.
தொடர்புடைய செய்திகள்
புதுக்கல்லூரி, சென்னையில் அமைந்துள்ள உயர்கல்வி நிலையம். 1951ல் தென்னிந்திய முஸ்லிம் கல்விச் சங்கம் அதை நிறுவியது.
அங்குப் படித்த பலரும் சிங்கப்பூருக்கு வந்து கல்வி, வணிகம், கலைகள் எனப் பல துறைகளில் கைதேர்ந்தவர்களாக விளங்குகின்றனர்.
அக்கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் கிட்டத்தட்ட 400 பேர் சிங்கப்பூரில் இருப்பதாகக் கணிக்கப்படுகிறது. அவர்களில் 120 பேர் சங்கத்தில் உறுப்பினர்களாக உள்ளனர்.
வெளிநாட்டிலும் மிளிர்ந்த தொடர் நாயகன்
தொடர் நாயகனாக சிங்கப்பூர் கடையநல்லூர் முஸ்லிம் லீக் ‘சூப்பர் ஈகுல்ஸ்’ அணித் தலைவர் கியாசுதீன் பின் நாகூர் கனி, 44, தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் பள்ளிகளிலும் ஆக்டிவ்எஸ்ஜியிலும் காற்பந்துப் பயிற்றுவிப்பாளராகப் பணிபுரிகிறார். அவரது அணியில் அவருடைய சகோதரி மகனும் விளையாடினார். இன்னொரு சக வீரரான இஸ்மாயில், 50, உடன் ‘கோஸ்மோஸ் சேன்டோஸ்’ அணிக்காக பல்லாண்டுகளாக விளையாடியுள்ளார். அந்த அணி 1995ல் நிறுவப்பட்டது.
“முதன்முறையாக நான் தற்காப்பு ஆட்டக்காரராக விளையாடியது இப்போட்டியில்தான். நாங்கள் இருபது ஆண்டுகளுக்கும் மேலாக, செவ்வாய், வியாழன் இரவுகளில் தவறாமல் விளையாடியுள்ளோம். அதனால்தான் அனைத்து ஆட்டங்களிலும் வென்றோம். இக்குழுவை அமைக்க என்னைக் கேட்டுக்கொண்ட திரு ஹாஜிக்கு என் நன்றி,” என்றார் கியாசுதீன்.
முன்பு வி சுந்தரமூர்த்தி பயிற்றுவிப்பாளராக வழிநடத்திய ஜூரோங் காற்பந்துக் குழுவில் U-23 பிரிவில் விளையாடியுள்ளார் கியாசுதீன்.
இப்போட்டியில் வெற்றிபெற்ற அணியில் கோல்காப்பாளராக விளையாடிய அஸ்லாமுடன் நெடுங்காலமாகவே அவர் விளையாடிவந்துள்ளார்.
“நானும் அஸ்லாமும் முன்பு ஸ்டேண்டர்ட் சார்ட்டர்ட் சிங்கப்பூரில் நடத்திய ஒரு போட்டியில் பங்கேற்றோம்; ஸ்பானிய அணியை வென்று, லிவர்பூல் (ஆன்ஃபீல்டு) சென்று சிங்கப்பூரைப் பிரதிநிதித்தோம். அங்கும் 10-15 அணிகளுடன் மோதி வெற்றிகண்டோம்,” என நினைவுகூர்ந்தார் கியாசுதீன்.
சேனல் 5 நடத்திய ‘முதல் பதினொருவர்’ (First XI) தொலைக்காட்சித் தொடரிலும், 900க்கும் மேற்பட்ட அனைத்துலகக் காற்பந்து வீரர்களின் மத்தியில் தலைசிறந்த 15 விளையாட்டாளர்களில் ஒருவராக, ஸ்பெய்னிலுள்ள ரியால் மட்ரிட் பயிலகத்தில் பயிற்சிபெற்றார் கியாசுதீன். “அப்போது ரொனால்டோகூட அங்கு விளையாடிக்கொண்டிருந்தார்,” என்றார் அவர்.
அர்ஜென்டினாவிலுள்ள போக்கா ஜூனியர்ஸ் அணியின் வளாகத்தில் ஒரு போட்டியில் மட்டுமன்றி, ஆஸ்திரேலியாவின் பெர்த் குளோரி வளாகத்திலும் அதன் இரண்டாம் நிலை அணிக்கு எதிராகவும் அவர் விளையாடியுள்ளார்.

