நலந்தரும் ‘ஷின்ரின்-யோகு’

2 mins read
காட்டில் புலன் விழிப்புணர்வுடன் அமைதியாக நேரம் செலவிடும் நடவடிக்கை
59701ff9-45d9-4b61-bb3d-79ad66b570c2
ஜப்பானிய மொழியில் ‘ஷின்ரின்-யோகு’ (Shinrin-Yoku) என்று அழைக்கப்படும் நடவடிக்கை (காட்டில் புலன் விழிப்புணர்வுடன் அமைதியாக நேரம் செலவிடுதல்) மன அமைதியைத் தேடுவோருக்கு இயற்கையான தீர்வாக அமைகிறது. - படம்: பிக்சாபே

நவீன உலகின் பல்வேறு மாற்றங்களையும் புதிய தேவைகளையும் எதிர்கொண்டு வாழ மக்கள் பழகிவிட்டனர். இந்நிலையில், மன அழுத்தமானது உடல், மனம் சார்ந்த பல நோய்களுக்கான முக்கியக் காரணமாக விளங்குகிறது.

சவால்கள் நிறைந்த இன்றைய காலகட்டத்தில், மன அழுத்தத்தைச் சமாளிப்பதற்கு ஜப்பானியர்கள் கடைப்பிடிக்கும் வழிமுறைகள் புதுமையானவை மட்டுமல்லாமல் மிகவும் எளிமையானவையும்கூட.

இவற்றில், ‘ஷின்ரின்-யோகு’ (Shinrin-Yoku) என்று அழைக்கப்படும் நடவடிக்கை (காட்டில் புலன் விழிப்புணர்வுடன் அமைதியாக நேரம் செலவிடுதல்) மன அமைதியைத் தேடுவோருக்குச் சிறந்த, இயற்கையான தீர்வாக அமைகிறது. ஜப்பானிய மொழியில் ‘ஷின்ரின்’ என்றால் காடு என்றும் ‘யோகு’ என்றால் குளியல் என்றும் பொருள். காட்டின் இயற்கைச் சூழலை முழுவதுமாக அனுபவிக்கும் நடவடிக்கை இது.

இதற்குப் பணம் செலவிடத் தேவையில்லை. மரங்கள் நிறைந்த இடங்களில் இயற்கையோடு இயைந்து அமைதியாக நேரம் செலவிட வேண்டும். இது, ஐந்து புலன்களையும் இயற்கையுடன் இணைத்து, நமக்கும் இயற்கைக்குமான இடைவெளியைக் குறைக்கும் ஒரு செயல்முறையாகும்.

ஜப்பானின் வனத்துறை அமைச்சு இந்தச் செயல்முறையை ஒரு சிகிச்சை முறையாக அதிகாரபூர்வமாக 1982ஆம் ஆண்டு அறிவித்ததுடன், தேசியப் பொதுச் சுகாதாரத் திட்டத்திலும் இணைத்தது.

இன்று, இந்த நடைமுறை உலகமெங்கும் புகழ்பெற்று வருகிறது.

‘ஷின்ரின்-யோகு’ முறையின் நன்மைகள்

அடர்ந்த, பசுமையான மரங்கள் சூழ்ந்த இயற்கைச் சூழலில் நேரத்தைச் செலவிடும்போது உடல், மனரீதியாகப் பல்வேறு நற்பலன்கள் கிடைப்பதை ஜப்பானிய விஞ்ஞானிகள் ஆய்வின்வழி கண்டறிந்துள்ளனர்.

காடுகளின் பல்வேறு அம்சங்கள், மன உளைச்சலுக்குக் காரணமான ‘கார்டிசோல்’ ஹார்மோன்களின் உற்பத்தியைக் குறைக்கின்றன. அதனால் மனச்சோர்வின் அறிகுறிகள் குறைந்து, உற்சாகம் அதிகரிக்கிறது.

காட்டிலுள்ள மரங்கள் பிடோனிஸிட்ஸ் (Phytoncides) எனப்படும் இயற்கை வேதிப்பொருளை வெளியேற்றுகின்றன. இவை உடலின் நோய் எதிர்ப்பாற்றலை அதிகரிப்பதாக ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். அத்துடன், நோய் எதிர்ப்பு மண்டலமும் வலுவடைகிறது.

அதுமட்டுமல்லாமல், ‘ஷின்ரின்-யோகு’ ஒருவரின் கவனத்தையும் மனத் தெளிவையும் மேம்படுத்துகிறது. ஆக்கபூர்வமான சிந்தனையோடு செய்யும் செயலில் கவனம் செலுத்துவதை இது எளிமையாக்குகிறது. இரவில் நல்ல தூக்கத்துக்கும் ஒட்டுமொத்த நல்வாழ்வுக்கும் வழிவகுக்கிறது.

பசுமையான காடுகளில் நேரம் செலவிடுவது ரத்த அழுத்தத்தையும் இதயத் துடிப்பையும் சீராக்க உதவுகிறது. இது, இதய நோயின் அபாயத்தைக் குறைக்கிறது.

‘ஷின்ரின்-யோகு’வில் ஈடுபடுவது எப்படி?

முதலில், மரங்கள் அதிகம் நிறைந்திருக்கும் காடு அல்லது பூங்கா போன்ற பசுமையான இடங்களைத் தேர்வு செய்யுங்கள்.

அங்கு, அவசரமின்றி மெதுவாக நடந்து, முழுக் கவனத்துடன் இயற்கையை அனுபவிக்க வேண்டும். மின்சாதனங்களைப் பயன்படுத்தாமல் சுற்றுச்சூழலை நன்கு உணர்வது அவசியம்.

சுற்றுப்புறத்தில் நீங்கள் பார்க்கக்கூடிய, கேட்கக்கூடிய வி‌‌ஷயங்களைக் கவனத்தில் கொள்ளுங்கள். மரம், செடி, இலைகளின் நிறம், அவை காற்றில் அசையும் சத்தம், பூக்களின் வாசனை, கிளைகளின் அமைப்பு, காற்றின் தூய்மை ஆகியவற்றின்மீது கவனம் செலுத்துங்கள்.

குறைந்தது 30 நிமிடங்கள் காட்டில் செலவழிப்பது நல்லது. அதிக நேரம் செலவிட்டால் நீங்கள் பெறக்கூடிய நன்மைகளும் அதிகரிக்கும்.

குறிப்புச் சொற்கள்