‘தாறுமாறு ரன்னர்ஸ்’ குழுவின் வருடாந்தர ஆண்டிறுதி ஓட்டம், சனிக்கிழமை (டிசம்பர் 27) காலை உற்சாகக் குரல்களோடு களைகட்டியது.
மரினா பே ஈஸ்ட்டில் காலை 7 மணியளவில் மொத்தம் 33 அணிகளைச் சேர்ந்த 99 பங்கேற்பாளர்கள் 21 கி.மீ. குழு ஓட்டத்தைத் தொடங்க ஆயத்தமாகினர்.
மூவர் கொண்ட குழுக்களாக 21 கி.மீ. ஓட்டத்தில் ஒவ்வொருவரும் 7 கி.மீ. தூரம் ஓடினர்.
அடுத்ததாக, 13 மாதக் குழந்தை முதல் 78 வயது முதியவர் வரை குடும்பங்கள், முதியோர், சிறுவர்கள் எனப் பல தலைமுறைகளைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர் 5 கி.மீ. தூரத்தை நடந்தும் மெதுவோட்டமாகவும் முடித்தனர்.
வானுயரக் கட்டடங்கள், கரையோரப் பூந்தோட்டங்கள், பசும்புல்வெளி எனச் சிங்கப்பூரின் எழில்மிகு பின்னணியில் பலருக்கு ஆரோக்கியமான வாழ்க்கைமுறையை நோக்கிய பயணமாக ஆண்டிறுதி ஓட்டம் அமைந்தது.
ஆரோக்கிய வாழ்க்கைமுறையை நோக்கிய துடிப்புமிக்க பயணம்
ஆரோக்கியமான வாழ்க்கைமுறையைப் பின்பற்ற ஊக்குவிக்கவும் உடற்பயிற்சி வாயிலாக இந்தியச் சமூகத்தை ஒன்றிணைக்கவும் முனைந்தது ‘தாறுமாறு ரன்னர்ஸ்’.
தாம் வசிக்கும் டோவர் ரோட்டிலிருந்து நிகழ்ச்சி நடைபெற்ற மரினா பே ஈஸ்ட் வரை 14 கி.மீ. ஓடி வந்தபிறகு, நிகழ்ச்சியின் குழு ஓட்டப் பிரிவில் கலந்துகொண்டு 7 கி.மீ. ஓட்டத்தில் பங்கேற்றார் திரு ஜகதீசன், 55.
கடந்த மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக இக்குழுவின் உறுப்பினராக இருக்கும் ஜகதீசன், “ஆரோக்கியமான வாழ்வியல் முறையைப் பேணுவதற்கு இத்தகைய ஓட்டங்கள் மேலும் வலுசேர்ப்பதால் உடனடியாகப் பங்கேற்கவும் நீண்டதூர ஓட்டத்தை மேற்கொள்ளவும் முடிவு செய்தேன்,” என்றார்.
தொடர்புடைய செய்திகள்
அதேபோல, தங்கள் விடுமுறையை ஆண்டிறுதி ஓட்டத்தில் கழிக்க முடிவெடுத்தனர் தேசிய சேவையாற்றி வரும் இருவர்.
தேசிய சேவையின்போது செய்யும் உடற்பயிற்சியுடன் ஒப்பிடுகையில், இந்த அனுபவம் மிகவும் வேறுபட்டதாக இருந்தது என்று பகிர்ந்தனர் நண்பர்கள் மஹேந்திர வர்மன், திவினேஷ், 21.
“புத்துணர்ச்சி நிறைந்த சூழலில் மன அமைதியோடு ஓடுவதற்கான சூழல் இங்கு இருக்கிறது,” என்றார் 21 கி.மீ. குழு ஓட்டத்தில் கலந்துகொண்ட திவினேஷ்.
இளையர்களுக்கு ஈடுகொடுக்கும் வகையில் நண்பர்களாகக் கலந்துகொண்டனர் திருமதி பத்மா உள்ளிட்ட நால்வர்.
“ஆரோக்கியமே நம் வாழ்வின் அடித்தளம். எனினும், அதைப் பாதுகாக்க நேரம் கிடைப்பதில்லை. ஆனால், ஆண்டிறுதியில் மனத்திற்கும் உடலுக்கும் நன்மை பயக்கும் வகையில் நடைப்பயணத்தில் கலந்துகொண்ட அனுபவம் சிறப்பாக அமைந்துள்ளது,” என்றார் திருமதி பத்மா, 63.
சமூகத்தை ஒன்றிணைத்த ஓட்டம்
வெவ்வேறு பின்னணியைச் சேர்ந்தோரையும் இந்தியச் சமூகத்தையும் ஒன்றிணைக்கும் நிகழ்வாகவும் ‘தாறுமாறு ரன்னர்ஸ்’ குழுவின் ஆண்டிறுதி ஓட்டம் திகழ்ந்தது.
21 கி.மீ. குழுவோட்டத்தில் ஏற்பாட்டாளர்களே குழுக்களைத் தேர்ந்தெடுத்ததால் புதிய நண்பர்கள் கிடைக்க பங்கேற்பாளர்களுக்கு இது வாய்ப்பாக அமைந்தது.
வசந்தம் ஒளிவழியின் பாடகர்கள், தமிழ் முரசு செய்தியாளர்கள், ஆசிரியர்கள், ‘டீம் மஸ்தி’, ‘ஷாக்வேவ் ரன்னர்ஸ்’ போன்ற ஓட்டப்பந்தயக் குழுக்கள் எனப் பல அமைப்புகளின் பிரதிநிதிகளும் ஓட்டத்தில் கலந்துகொண்டனர்.
போதைப் பழக்கத்திற்கு அடிமையானவர்களை நல்வழிப்படுத்தி அவர்கள் மறுவாழ்வு பெற வழிவகுக்கும் இந்து அறக்கட்டளை வாரியத்தின் ஆஷ்ரமத்திலிருந்து முதல்முறையாகக் கலந்துகொண்ட ஏழு இல்லவாசிகளும் இவர்களில் அடங்குவர்.
இல்லவாசிகளுள் ஒருவரான விக்னேஷ் சேரன், 34, “பல நண்பர்களைச் சந்தித்து சமூகத்தினரோடு கலந்துரையாடும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது,” என்று தம் அனுபவத்தைத் தமிழ் முரசோடு பகிர்ந்தார்.
நிர்வாகக் குழு உறுப்பினர்களும் இல்லவாசிகளும் இணைந்து மேற்கொண்ட இப்பயணம் இல்லவாசிகளுக்குச் சமூகத்துடன் ஒருங்கிணையும் வாய்ப்பை வழங்கியதாகத் தெரிவித்தார் இந்து அறக்கட்டளை வாரியத்தின் நிர்வாகக் குழு உறுப்பினர் தி.மகேஷ்வரர், 52.
“அவர்களுக்குத் தன்னம்பிக்கை அளித்து சமுதாயத்தில் மீண்டும் ஒருங்கிணைய ஒரு தளமாகவும் இந்நிகழ்ச்சி உள்ளது,” என்றார் அவர்.
2017ல் தம் நண்பர்களோடு ‘தாறுமாறு ரன்னர்ஸ்’ குழுவைத் தொடங்கிய ரமேஷ் செல்வராஜ், 46, சமூகத்தின் உள்ளடக்கத்தை மையப்படுத்தி சமூக ஒற்றுமையை வலுப்படுத்துவது இந்நிகழ்ச்சியின் முதன்மை நோக்கங்களுள் ஒன்று என்றார்.
“எந்தப் பின்னணியிலிருந்து வந்தாலும், ஆரோக்கியமான வாழ்க்கைமுறையைப் பேண வேண்டும் என்ற ஒற்றை நோக்கோடு கலந்துகொள்ளும் ஒவ்வொருவரையும் இந்நிகழ்ச்சி வரவேற்கிறது,” என்றார் அவர்.
சுமார் 40 பேருடன் தொடங்கிய ‘தாறுமாறு ரன்னர்ஸ்’, இன்று 1,500க்கும் மேற்பட்ட உறுப்பினர்களைக் கொண்டுள்ளது.
தலைமுறைகளைத் தாண்டிய உற்சாகம்
சிறார் முதல் பெரியோர் வரை பல தலைமுறைகளாக இணைந்து ஏறத்தாழ 15 பேராக ஆண்டிறுதி ஓட்டத்தில் பங்கேற்றனர் கிறிஸ்டினா கலைச்செல்வனின் குடும்பத்தினர்.
கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு அனைவரும் ஒன்றுகூடியது ஒரு கொண்டாட்டமெனில், மீண்டும் அனைவரும் ஆண்டிறுதி ஓட்டத்திற்கு ஒன்றிணைந்து உடற்பயிற்சி செய்வது மற்றொரு கொண்டாட்டம் என்றார் கிறிஸ்டினா, 34.
“குடும்பப் பிணைப்பை வலுப்படுத்துவதோடு, குழந்தைகளும் ஒற்றுமையாக விளையாடிச் சுறுசுறுப்பாக இருப்பதைப் பார்க்கும்போது நெகிழ்ச்சியாக இருக்கிறது,” என்றார் அவர்.
‘தாறுமாறு ரன்னர்ஸ்’ குழுவுடன் இணைந்து தம் கணவர் நீண்டகாலமாக ஓடுவதைப் பார்த்து தானும் உத்வேகம் பெறுவதாகக் குறிப்பிட்டார் அமுதா, 40. தன் மகனோடு சேர்ந்து அவரும் 5 கி.மீ. நடைப்பயணத்தில் கலந்துகொண்டார்.
கவனத்தை ஈர்த்த விளையாட்டுக் கூடங்கள்
புஷ்-அப், பிளாங்க்ஸ், பெடல்ரோப் எனப் பலதரப்பட்ட உடற்பயிற்சி நிலையங்களும் அமைக்கப்பட்டிருந்தன. ஓட்டத்தின் இறுதியில் அங்கு நடைபெற்ற உடற்பயிற்சி சார்ந்த சவால்களில் வென்றவர்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டன.
சென்ற ஆண்டு 160 பேர் பங்கெடுத்த நிலையில், இவ்வாண்டு ஓட்டத்தில் 200க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
கலந்துகொண்டோரில் 40 விழுக்காட்டிற்கும் மேற்பட்டோர் இதில் முதன்முறையாக பங்கேற்றவர்கள்.

