நமது உணவில் அதிக அளவில் பழங்களைச் சேர்த்துக்கொள்ளும்போது வாழ்க்கையின் பிற்பகுதியில் ஏற்படக்கூடிய மனஅழுத்தத்தை ஒருவரால் முறியடிக்க முடியும் எனச் சிங்கப்பூரில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில் கண்டறியப்பட்டுள்ளது.
கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கு 13,000க்கும் மேற்பட்ட சிங்கப்பூரர்களின் உணவுப் பழக்கங்களை உன்னிப்பாகக் கவனித்து வந்தபோது, அதில் 40லிருந்து 65 வயதுக்கு உட்பட்ட நடுத்தர வயதினர் பழங்களை அதிகம் உட்கொண்டு வருவது தெரியவந்துள்ளது.
சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த யோங் லூ லின் மருத்துவப் பள்ளியின் ஆரோக்கியமான நீண்ட ஆயுள் பெயர்ச்சி ஆய்வுத் திட்டத்தின் பேராசிரியர் கோ வூன் பூ, இந்த ஆய்வின் முதன்மை ஆய்வாளர்.
“அன்றாடம் இரண்டு அல்லது மூன்று முறை, உணவுக்குப்பின் பழங்களைச் சாப்பிட்டு வந்தால், பின்னாளில் அது பல்வேறு வகைகளில் நன்மைகள் பயக்கும்,” என்றார் அவர்.
ஆரஞ்சுப் பழம், வாழைப்பழம், பப்பாளி, தர்பூசணி, தேன் முலாம்பழம், ஆப்பிள் உள்ளிட்டவை சிறப்புமிக்க ஆற்றல் கொண்ட பழங்களாகக் கருதப்படுகின்றன.
கீரை, புரோக்கோலி, கேரட், தக்காளி, காளான் போன்ற காய்கறிகள் பற்றியும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மனஅழுத்தத்தைக் குறைப்பதில் அவை பழங்களின் அளவிற்கு ஆற்றல் உடையவையாகக் கண்டறியப்படவில்லை.
சிங்கப்பூரில் பரவலாகிவரும் மனநோய்களில் மனஅழுத்தமும் ஒன்று. உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு, இதயநோய் போன்ற உடல்நலப் பிரச்சினைகளுக்கு நடுத்தர வயதினர் ஆளாகின்றனர்.
பழங்களில் வைட்டமின் சி, கரோட்டினாய்டு, ஃபிளாவனாய்டு போன்ற சத்துகள் அதிகம் நிறைந்துள்ளதால் அவை மனஅழுத்தத்தைக் குறைக்கும் தன்மை கொண்டவையாக உள்ளன.
தொடர்புடைய செய்திகள்
சிங்கப்பூரர்கள் நால்வரில் மூவர் அன்றாட உணவில் பழங்களைச் சேர்த்துக்கொள்வதில்லை. மனஅழுத்தத்திற்கு அப்பாற்பட்டு பக்கவாதம், நீரிழிவு, சில வகைப் புற்றுநோய்கள் போன்றவற்றிலிருந்து தற்காத்துக்கொள்ளவும் பழங்கள் உதவுகின்றன.
பழங்களைச் சாப்பிடுவது மட்டுமின்றி, ஒருவர் பழச்சாறும் பருகலாம். பழத்தில் இருக்கும் சத்து நீண்டநாள் வரைக்கும் இருக்காது. உயிர்வாயு, வெப்பம், ஒளி ஆகியவை பழங்களில் காணப்படும் சத்தை விரைவாகக் குறைக்கக் கூடியவை.
பழங்களை வெட்டிய பிறகு அவற்றைக் குளிர்சாதனப் பெட்டி அல்லது நெகிழிப் பைகளில் இறுக்கமாகக் கட்டி வைக்க வேண்டும். உணவு உண்ட பிறகு பழங்களைச் சாப்பிட்டால்தான் அவற்றின் சத்து உடலில் விரைவாகச் சேரும் என்று கூறப்படுகிறது.

