இயற்கையால் ஏற்பட்ட பஞ்சமன்று இது. உலக அரசியலில் தொடர்ந்து நிலவும் பிடிவாதமும் வெறுப்புணர்வும் பல்லாயிரம் பேரை உணவுக்காகத் தவிக்க வைத்துள்ளது.
அனைத்துலகச் சமூகத்தின் நெருக்கடியால் இஸ்ரேல் காஸாவிற்கான உதவிப் பொருள்களுக்கு விதித்த தடையின் ஒரு பகுதியை அண்மையில் நீக்கியுள்ளது. போதிய உணவின்றி முழு அழிவின் விளிம்பில் உள்ள காஸா மக்களைப் பற்றி இதுவரை அதிகம் நினைத்திராத உலக மக்கள் இனியாவது யோசிக்கவேண்டும்.
காஸா பற்றிய புள்ளிவிவரங்கள், நெஞ்சைப் பிளக்கக்கூடியவை. இரண்டு மில்லியனுக்கும் மேற்பட்ட மக்கள், செல்ல இடமின்றி, போதிய உணவோ குடிநீரோ மருத்துவ வசதியோ இன்றி நரக வேதனையை அனுபவிக்கின்றனர்.
காஸா மக்களில் மூவரில் ஒருவர், உணவின்றி நாள் கணக்காகத் தவிக்கும் நிலை நிலவுகிறது. 90,000க்கும் அதிகமான பெண்களும் குழந்தைகளும் கடுமையான பசியால் வாடுகின்றனர். ஏற்கெனவே 147 பேர் உணவின்றி உயிர் இழந்ததாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்தனர்.
முழுப் பூசணிக்காயைச் சோற்றில் மறைக்கும் விதமாக, காஸாவில் பசி, பஞ்சம் இல்லை என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகு தொடர்ந்து கூறுகிறார்.
நெருக்கடி என்று வரும்போது அதனைத் திசைதிருப்புவதும் மறுத்துக்கூறுவதும் அவரது வழக்கமாக மாறிவருகிறது.
காஸா பஞ்சத்தைப் போன்றதொரு செயற்கையான, மனிதர்களால் உருவாக்கப்பட்ட பஞ்சம், வரலாற்றில் இதுவரை நடந்திராதது என்று அரசியல் வல்லுநர் அலெக்ஸ் டி வால் குறிப்பிட்டுள்ளார். இந்தச் செயலை இன அழிப்பு என்று மனித உரிமைக் குழுக்களும் ஐக்கிய நாட்டு நிறுவன வல்லுநர்களும் கூறியுள்ளனர்.
மே மாத நடுப்பகுதியிலிருந்து காஸாவுக்குள் உதவிப்பொருள் ஏற்றிச்சென்ற 70 லாரிகளை அனுமதித்துள்ளதாக இஸ்ரேல் தெரிவித்தது.
தொடர்புடைய செய்திகள்
ஆனால், அன்றாடத் தேவைகளை நிறைவு செய்வதற்கே 500 முதல் 600 லாரிகள் நிரம்பிய உதவிப்பொருள்கள் தேவைப்படுவதாக ஐநா கூறியுள்ளது.
மிகக் குறைவான உதவிப்பொருள்களை அனுமதிப்பது உதவாதிருப்பதற்குச் சமம் என்றது பாலஸ்தீன ஹமாஸ் தரப்பு.
இஸ்ரேலின் இடையூறுகளைக் கடந்து பல நாடுகள் வான்வழியாக உதவிபொருள்களை வழங்க முயல்கின்றன. ஆனால் குறிப்பிட்ட அளவுக்கு மேலான பொருள்களை அனுப்புவதும் கடினம். சில நேரங்களில் அது ஆபத்தை ஏற்படுத்தக்கூடும். சுத்தமான குடிநீர், மருத்துவமனைச் சேவை போன்றவற்றுக்கு அது தீர்வாகவும் இருக்க முடியாது.
காஸா மருத்துவமனைகள் பெரும்பாலும் நோயாளிகளால் நிரம்பியுள்ளன அல்லது செயல்படாமல் இருக்கின்றன.
காஸாவின் மருத்துவ வளாகங்களில் பெரும்பாலானவை சேதப்படுத்தப்பட்டுள்ளன. அங்குள்ள செய்தியாளர்களும் நிவாரணப் பணியாளர்களுமே போதிய உணவின்றி வாடுவதாக ஏஎஃப்பி செய்தி நிறுவனம் தெரிவித்தது.
அமெரிக்காவும் இஸ்ரேலும் உருவாக்கிய மனிதநேய உதவிமுறைகளோ காஸா மனிதநேய அறநிறுவனமோ (GHF) சரியாகச் செயல்படவில்லை. ஐநா அமைப்புகளைப் போலன்றி ‘ஜிஎச்எஃப்’ கடுமையாகக் கண்காணிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் கிட்டத்தட்ட மூன்று மாதங்களுக்குப் போதுமான உணவுப்பொருள்கள் காஸா எல்லைப்பகுதிக்கு அருகே கேட்பாரற்றுக் காத்திருக்கின்றன.
உடனடியான, முழுமையான சண்டைநிறுத்தம்தான் இந்தப் பிரச்சினைக்கு உண்மையான தீர்வாக இருக்கமுடியும். பிரச்சினை தீர்ந்தாலும் காஸா, பழையபடி மீண்டு வருவதற்குப் பல காலம் பிடிக்கலாம். உணவுப் பற்றாக்குறையின் பாதிப்பைப் பாலஸ்தீனச் சமூகம், இன்னும் பல்லாண்டுகள் சுமந்துசெல்லக்கூடும்.
ஒட்டுமொத்தமாக ஒரு சமூகத்தையே பட்டினிபோட்டு மெல்லக் கொல்வதை உலகம் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறது. இன, சமய வேற்றுமைகளைக் கடந்தது அல்லவா பசி? 21 மாதங்களாக நீடிக்கும் இந்த வேதனைக்கு உலகம் அனுதாபம் தெரிவிக்கத் தேவையில்லை. மாறாக, உறுதியான நடவடிக்கை எடுக்கவேண்டியது அவசியம்.