தாய்மார்கள், குழந்தைகளைப் பாதிக்கும் கர்ப்பகால நீரிழிவு நோய்

2 mins read
52c27937-0a84-4eb0-9ae9-a78e09015867
கர்ப்பகால நீரிழிவு நோய் சிங்கப்பூரில் கர்ப்பிணிப் பெண்கள் ஐவரில் ஒருவரைப் பாதிக்கிறது. - படம்: பிக்சாபே
multi-img1 of 3

கர்ப்பிணிப் பெண்களுக்கு ஏற்படும் கர்ப்பகால நீரிழிவு நோய் (gestational diabetes) அவர்களின் அறிவுசார் செயல்பாட்டைக் குறைக்கிறது.

அத்துடன் குழந்தைகளின் வளர்ச்சி, நடத்தை, மதியிறுக்கப் பாதிப்பு ஆகியவற்றுக்கும் கர்ப்பகால நீரிழிவு நோய்க்கும் தொடர்பு இருக்கிறது என்றும் கண்டறியப்பட்டது.

சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகத்தின் யோங் லூ லின் மருத்துவப் பள்ளி நடத்திய ஓர் அனைத்துலக ஆய்வில் இந்தத் தகவல் தெரியவந்தது.

சராசரியாக, கர்ப்பகால நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட தாய்மார்கள் அந்த நோய் இல்லாதவர்களைவிட அறிவாற்றல் மதிப்பீடுகளில் குறைவான மதிப்பெண்களைப் பெற்றதாக ஆய்வாளர்கள் கண்டறிந்தனர்.

கர்ப்பகால நீரிழிவு நோய்க்கு ஆளான தாய்மார்களின் குழந்தைகளுக்கு அறிவுத்திறன் குறைவாக இருந்ததும் தெரியவந்தது.

அவர்கள் கவனக்குறைவு மிகையியக்கக் குறைபாட்டுப் பிரச்சினையை (ADHD) எதிர்நோக்கும் அபாயம் 36 விழுக்காடு என்றும் மதியிறுக்கத்தால் பாதிப்படையும் அபாயம் 56 விழுக்காடு என்றும் வளர்ச்சி தாமதமடையும் அபாயம் 45 விழுக்காடு கூடுதல் என்றும் தெரிவிக்கப்பட்டது.

கர்ப்பகால நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் தரவுப் பகுப்பாய்வைக் காட்டும் விளக்கப்படம்.
கர்ப்பகால நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் தரவுப் பகுப்பாய்வைக் காட்டும் விளக்கப்படம். - வரைகலை: கீர்த்திகா ரவீந்திரன்

குழந்தைப் பிறப்புக்குப் பிறகு கர்ப்பகால நீரிழிவு நோய் பெரும்பாலும் சரியாகிவிடும் என்றாலும் இந்தக் கண்டுபிடிப்புகள் எதிர்காலத்தில் தாயையும் குழந்தையையும் பாதிக்கும் விளைவுகளை அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன.

கர்ப்பகால நீரிழிவு நோய் சிங்கப்பூரில் கர்ப்பிணிப் பெண்கள் ஐவரில் ஒருவரைப் பாதிக்கிறது. இது உலகச் சராசரியைவிட அதிகம்.

சிங்கப்பூர்க் குழந்தைகள் 150 பேரில் ஒருவருக்கு மதியிறுக்கம் உள்ளது என்றும் தரவுகள் தெரிவித்துள்ளன. உலகச் சுகாதார அமைப்பின் உலகளாவிய எண்ணிக்கையான 160 குழந்தைகளில் ஒருவருக்கு என்ற எண்ணிக்கையைவிட இது அதிகமாகும்.

“கர்ப்பகால நீரிழிவு நோயை விரைவில் கண்டறிந்து அதைக் கவனமாகக் கையாள்வதற்கான அவசரத் தேவையை எங்கள் கண்டுபிடிப்புகள் எடுத்துக் காட்டுகின்றன,” என்று கூறினார் தேசியப் பல்கலைக்கழக மகப்பேறியல், மகளிர் மருத்துவத் துறையைச் சேர்ந்த உதவிப் பேராசிரியர் குயினி லி லிங் ஜுன்.

குழந்தையின் மூளை வளர்ச்சியைக் கர்ப்பகால நீரிழிவு நோய் எவ்வாறு பாதிக்கிறது என்பது இன்னும் தெளிவாகத் தெரியாததால் தொடர்ந்து ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும் என்ற்கிறது ஆய்வுக்குழு.

“ஆரம்பகால நோய் எதிர்ப்பு முயற்சிகளும் தகுந்த ஆதரவும் சிங்கப்பூர்க் குடும்பங்களின் நீண்டகால நல்வாழ்வுக்குப் பயனளிக்கும்,” என்றார் பேராசிரியர் லி.

குறிப்புச் சொற்கள்