ஈன்றெடுத்த அன்னைக்கு நன்றி செலுத்த அன்னையர் தினம் ஒரு சிறந்த வாய்ப்பு. பூங்கொத்து அல்லது வாழ்த்து அட்டைகளோடு, ஒரு சிறப்பு அன்னையர் தின நடவடிக்கைக்கும் திட்டமிடலாம்.
கலைத்திறன் உள்ள தாய்க்கு
பொருள்களைவிட அனுபவங்களைப் பரிசாக வழங்குவது சிறந்தது என்பதற்குப் பல காரணங்கள் உள்ளன. அவை மறக்க முடியாத மகிழ்ச்சியைத் தரும் நீங்கா நினைவுகளுக்கு வழிவக்கும்.
அவ்வகையில், வாசனைத் திரவியம், சமையல், மலர் அலங்காரம், ஓவியம் வரைதல் போன்ற சுவாரசியமான நடவடிக்கைகளில் அன்னையுடன் சேர்ந்து ஈடுபடலாம்.
விதவிதமாக அலங்காரம் செய்துகொண்டு, குடும்பத்துடன் அல்லது தனியாக அன்னையுடன் புகைப்படங்கள் எடுத்து மகிழலாம்
வெளிப்புற நடவடிக்கைகளை ரசிக்கும் தாய்க்கு
மெக்ரிச்சி நீர்த்தேக்கம் அல்லது புக்கிட் தீமா இயற்கை வனப்பகுதியில் இயற்கை அழகை ரசித்தபடி மெதுநடை செல்லலாம்.
வரலாறு அல்லது கலையை விரும்பும் தாய்மார்களை அருங்காட்சியகத்திற்கு அழைத்துச் செல்லலாம்.
மேலும், பொருள் வாங்குவதில் நாட்டம் கொண்டுள்ள அன்னையர்க்கு நாள் முழுவதும் ‘ஷாப்பிங்’ அனுபவமும் சிறந்த பரிசாக இருக்கும்.
பல வெளிப்புற நடவடிக்கைகளில் ஈடுபட்ட பிறகு, ஒரு நிம்மதியான ‘ஸ்பா’ உறுதியாகத் தாய்மார்களைக் கவரும்.
உணர்வுபூர்வ பரிசுகள்
அம்மாவிற்கான அன்பையும் பாராட்டையும் இதயபூர்வமான கடிதம் வழியாக வெளிப்படுத்தலாம்.
அல்லது தங்களது கைவினைத்திறனில் உருவானதொரு பொருளைப் பரிசளிக்கலாம். அம்மாவின் பெயரில் நன்கொடை வழங்குவது அர்த்தமுள்ள பரிசாக அமையும்.
அன்றைக்கு ஒருநாளேனும் நமது அன்னைக்கு ஓய்வளித்து சமையல், வீட்டு வேலைகளைச் செய்யலாம்.
அன்னையர் தினம் மட்டுமின்றி, எல்லா நாள்களிலும் நம் அன்னையர்க்கு இந்த அனுபவங்களைப் பரிசாக அளிப்பது வாழ்க்கையை இன்னும் அர்த்தமுள்ளதாக்கி, அன்புசேர்க்கும். அன்னைதான் நமக்கு வழிகாட்டும் தெய்வம் என்பதை யாரும் மறக்கலாகாது.