நாடு முழுதும் 5,000க்கும் மேற்பட்ட சிங்கப்பூரர்களின் தேவைகளை ஜூலை மாதத்துக்குள் நிறைவேற்றும் பணியில் இறங்கி உள்ளது ‘கர்ல்ஸ் பிரிகேட் சிங்கப்பூர்’ (Girls Brigade Singapore) என்னும் சிங்கப்பூர் சிறுமியர் படை.
சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சோடு இணைந்து ‘புரோஜெக்ட் இன் டீட்’ (Project In Deed) எனும் திட்டத்தின்வழி அந்த முயற்சியை சிறுமியர் படை மேற்கொண்டுள்ளது.
சமூகப் பிரச்சினைகள் மேலும் சிக்கலானதாகி வருவதால், கூடுதல் உதவி தேவைப்படுபவர்களுக்கு சமூகப் பங்காளிகளுடன் இணைந்து வளங்களை விநியோகிப்பதில் சிங்கப்பூர் மாணவியர் அணி முக்கியப் பங்கு வகிப்பதாக கலாசார, சமூக, இளையர்துறை மற்றும் சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சுகளின் மூத்த நாடாளுமன்றச் செயலாளர் எரிக் சுவா தெரிவித்தார்.
மே மாதம் 22ஆம் தேதி நடைபெற்ற திட்டத்தின், இந்த ஆண்டு தொடக்கநிகழ்ச்சியில் கலந்துகொண்டு அவர் உரையாற்றினார்.
சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சின் கொம்லிங்க் பிளஸ் முன்னேற்றத் தொகுப்புத் திட்டங்கள் மூலம் பயன்பெறும் 2,700 பயனாளிகள் ‘புரோஜெக்ட் இன் டீட்’ திட்டத்தின்கீழ் இருக்கின்றனர் என்பதையும் சுட்டினார்.
இத்திட்டத்தினால் பயன்பெற்றவர்களின் பட்டியலில் கென்டோன்மண்ட் தொடக்கப்பள்ளியை சேர்ந்த 12 வயது ஹையுள் கயும் அப்துல்லாவும் ஒருவர். தமது காற்பந்துப் பயிற்சிகளுக்குத் தேவையான விளையாட்டு உபகரணங்களை அவர் பெற்றார்.
“காற்பந்துப் பயிற்சியின்போது இதை என் நண்பர்களோடு பகிர்ந்துகொண்டு பயிற்சி செய்வேன்,” என்றார் அவர்.
ஆஸ்துமா பிரச்சினை காரணமாகத் தம் கணவரின் மூளைச் செயல்பாடு பாதிப்படைந்த நிலையில், இத்திட்டத்தின் மூலம் பெற்ற ‘ஏர் ஃபிரையரை’ கொண்டு அவருக்கு ஆரோக்கியமான உணவைச் சமைத்துத் தரமுடியும் என்று நம்புகிறார் 34 வயது திருவாட்டி நூரஷிக்கின் அஹ்மத்.
தொடர்புடைய செய்திகள்
உதவும் மனப்பான்மையோடு, தாங்கள் சந்திக்கும் ஒவ்வொரு மனிதருக்கும் மரியாதை செலுத்தும் வகையில் பணிவுடன் சேவையாற்றும் தலைமுறையை உருவாக்கும் இலக்கோடு ஐந்தாண்டுகளுக்கு முன்னர் இத்திட்டம் தொடங்கப்பட்டது.
மாணவிகளின் உதவியோடும் மற்ற தொண்டூழியர்களின் ஆதரவோடும் ஆண்டுதோறும் இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 2021ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இத்திட்டத்தின்கீழ், 60 வெள்ளி விலைக்குள் பயனாளிகள் எந்தப் பொருளையும் கேட்கலாம்.
கடந்த ஆண்டுகள் படுக்கை விரிப்புகள், மின்சார கெட்டில்கள் போன்ற வீட்டு உபகரணங்கள், ரத்த அழுத்தமானி போன்ற மருத்துவ உபகரணங்கள், பிள்ளைளுக்கான பள்ளிப் பொருள்கள், விளையாட்டு பொருள்கள் போன்றவற்றை மக்கள் கேட்டிருந்தனர்.
சிங்கப்பூர் சிறுமியர் படையினர் இதுவரையில் 12,500க்கும் மேற்பட்டோரின் தேவைகளை நிறையேற்றியுள்ளனர்.
“கணிவன்புடன் துவக்கிவைக்கப்பட்ட இயக்கம் இது. சிங்கப்பூரர்களின் கதைகளைக் கேட்டு, அவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்து, அவர்களின் வாழ்க்கையில் ஒரு மாற்றத்தை உருவாக்க எங்களுக்கு ஒரு நல்ல வாய்ப்பு,” என்றார் தொடக்க விழாவில் உரையாற்றிய சிங்கப்பூர் மாணவியர் அணியின் தலைவர் ஷேரன் லிம்.
சிங்கப்பூரின் 60ஆம் பிறந்தநாளை கொண்டாடும் விதமாக மே 22ஆம் தேதி முதல் ஜூலை 31ஆம் தேதிவரை 5,000க்கும் மேற்பட்ட முதியோர்கள், குடும்பங்கள், தனிமனிதர்களின் தேவைகளைப் இத்திட்டம் நிறைவேற்ற உள்ளது. பயனாளிகள் $60க்குள் தாங்கள் விரும்பும் எந்தப் பொருளுக்கும் விண்ணப்பிக்கலாம்.
மேல் விவரங்களுக்கு www.gb.org.sg என்ற இணையப் பக்கத்தை நாடவும்.

