தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

அரிய பொருள்கள் பற்றி விரிவாகச் சொல்லும் சிறப்புச் சுற்றுலா

2 mins read
6aee9b20-0cd2-41af-9609-1ef3de34c8b8
‘பளபளப்பும் மினுமினுப்பும்’ என்ற சிறப்புச் சுற்றுலாவில் பல்வேறு கலைப்பொருள்களைப் பற்றி விரிவாக விளக்குகிறார் திருவாட்டி வசந்தி ரவி. - படம்: ரவி கீதா திவிஜா

பல சமயத்தினர் அணியும் பல வடிவத் தாலிகள், தலைமுறை தலைமுறையாகப் பெண்கள் அணிந்த நகைகள், பளபளக்கும் புடவைகள்.

இவற்றைப் பற்றி மட்டும் எடுத்துரைக்கும் சிறப்புக் கண்காட்சி இந்திய மரபுடைமை நிலையத்தில் வெள்ளிக்கிழமை (ஜூன் 27) நடைபெற்றது.

400க்கும் மேற்பட்ட பாரம்பரிய பொக்கி‌‌ஷங்கள் கொட்டிக்கிடக்கும் இந்திய மரபுடைமை நிலையத்தில் ஒரு மணி நேரத்துக்குள் 15லிருந்து 20 அரிய கலைப்பொருள்கள் பற்றி விரிவாகத் தெரிந்துகொள்ள வழிகாட்டலுடன் கூடிய சிறப்புச் சுற்றுலா ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் நடைபெறுகிறது.

“இந்திய மரபுடைமை நிலையத்தின் பத்தாம் ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில் இந்த ஏற்பாட்டைச் செய்துள்ளோம். ஆண்டு இறுதிவரை வெள்ளிக்கிழமைதோறும் பிற்பகல் 2 மணியிலிருந்து 3 மணிவரை சுற்றுலா இடம்பெறும்,” என்றார் வழிகாட்டிகளில் ஒருவரான திருவாட்டி வசந்தி ரவி.

எந்தெந்தக் கலைப்பொருள்களைப் பற்றி ஆழமான விவரங்களை பகிர்ந்துகொள்ளவேண்டும் என்பதைத் தேர்ந்தெடுக்கும் முடிவை ஒவ்வொரு வழிகாட்டியிடமும் விட்டுவிட்டது இந்திய மரபுடைமை நிலையம்.

அந்த வகையில் கடந்த வெள்ளிக்கிழமை ‘பளபளப்பும் மினுமினுப்பும்’ என்ற தலைப்பில் சிறப்புச் சுற்றுலாவை நடத்தினார் திருவாட்டி வசந்தி.

சிங்கப்பூரின் பெரிய அரும்பொருளகங்களை ஆதரிக்கும் ‘ஃப்ரெண்ட்ஸ் அஃப் த மியூசியம்ஸ் சிங்கப்பூர் ’ என்ற லாபநோக்கமற்ற அமைப்பில் திருவாட்டி வசந்தி தொண்டூழியராகச் செயல்படுகிறார்.

ஆண்கள், பெண்களைத் தவிர இறைவனுக்கு அணிவிக்கப்படும் நகைகள், திருமணத்தின்போது இஸ்லாமியப் பெண்கள் அணியும் சேலைகள், கிறிஸ்தவ முறைப்படி செய்யப்பட்ட காசுமாலை என பல சுவையான தகவல்களை அறிந்துகொள்ள ஏறக்குறைய 30 பேருக்கு வாய்ப்பு கிடைத்தது.

“ஒவ்வொரு கலைப்பொருளுக்கும் பின்னால் இருக்கும் வரலாறு, அடையாளம், கலாசாரம் ஆகியவற்றுடன் நன்கொடையாளர்கள் பற்றிய விவரங்களையும் எடுத்துச்சொன்னேன்,” என்றார் திருவாட்டி வசந்தி.

இந்துக்கள் மட்டும்தான் தாலி அணிவார்கள் போன்ற சில எண்ணங்களை மாற்றும் வகையிலும் கண்காட்சி அமைந்திருந்தது. சிலுவையைக் கொண்டிருந்த கிறிஸ்தவர்களின் தாலி அதற்கு ஓர் உதாரணம் என்று திருவாட்டி வசந்தி குறிப்பிட்டார்.

கண்காட்சியில் பல சமூகத்தினர் அணியும் தாலிகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது.
கண்காட்சியில் பல சமூகத்தினர் அணியும் தாலிகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது. - படம்: ரவி கீதா திவிஜா

சுற்றுலாவழி பல அருமையான கலைப்பொருள்களைப் பார்ப்பதற்கான வாய்ப்பு கிடைத்ததாகக் கூறினார் பார்வையாளர்களில் ஒருவரான திருவாட்டி கிருபா ‌‌‌ஷா.

இதுபோன்ற சிறப்பு சுற்றுலாக்கள் வெவ்வேறு தலைப்புகளில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் இந்திய மரபுடைமை நிலையத்தில் நடைபெறுகின்றன.

அதில் உள்ளூர், வெளியூர் என அனைத்துத் தரப்பினரும் கலந்துகொள்ளலாம்.

குறிப்புச் சொற்கள்