தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

எளிய ஆங்கிலத்தில் கம்பராமாயணம்

2 mins read
f43f30d3-59e4-4f11-a12c-880f99149ad2
நிகழ்ச்சியில் நடந்த நேர்காணலில் திரு மகேஷ் குமாரும் நூலாசிரியர் டாக்டர் சந்திரிகாவும். - படம்: Masters Academy of Speech and Training

இளம் தலைமுறையினரைச் சென்றடையும் விதமாக கம்பராமாயணத்தை எளிமையான ஆங்கிலத்தில் வழங்குகிறது ‘கிளிம்ப்சஸ் ஆஃப் கம்பராமாயணம்’ (Glimpses of Kambaramayanam) எனும் மொழிபெயர்ப்பு நூல்.

ஆஸ்திரேலியாவில் உச்சநீதிமன்ற வழக்கறிஞராகப் பணிபுரியும் டாக்டர் சந்திரிகா சுப்பிரமணியனின் கைவண்ணத்தில் இந்நூல் படைக்கப்பட்டுள்ளது. Masters Academy of Speech and Training (MAST) நடத்திய நூல் வெளியீட்டிற்கு வாசகர் வட்டமும் தேசிய நூலக வாரியமும் ஆதரவளித்தன. 

பல கண்டங்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஏறத்தாழ 100 செய்யுள்களின் ஆங்கில மொழிபெயர்ப்பு, ஆங்கில விளக்கம், தமிழ் விளக்கம், ஒலிபெயர்ப்பு ஆகியவற்றை இந்நூல் தொகுத்துள்ளது. ஈராண்டுகால உழைப்பின் பயனாக விளைந்த இந்நூ்லின் அடுத்தடுத்த பாகங்களை டாக்டர் சந்திரிகா எழுதிக்கொண்டிருக்கிறார். செப்டம்பர் 6ஆம் தேதி தேசிய நூலகத்தில் இடம்பெற்ற வெளியீட்டு விழாவில் அவர் தம் அனுபவங்களைப் பற்றிப் பகிர்ந்துகொண்டார். 

கம்பனின் சொல்நயத்தை ஆங்கிலத்தில் கொண்டுவருவது குறித்துப் பேசியபோது, ஏற்புடைய ஆங்கிலச் சொற்களைவிட துல்லியமான சொற்களைக் கண்டறிய உழைத்ததாகச் சுட்டினார்.  

“கம்பரே தம்மைப் பற்றிக் கூறிக்கொண்டதைப்போல, நான் கம்பராமாயணம் எனும் பாற்கடலின் முன்னர் இருக்கும் ஒரு சிறு பூனையே. எனது ஆயுட்காலத்தில் கம்பராமாயணத்தின் முழு ஆங்கில மொழிபெயர்ப்பை எழுதி வெளியிடவேண்டும் என்பது எனது கனவு,” என்று ‘த சிராங்கூன் டைம்ஸ்’ இதழின் பொறுப்பாசிரியர் மகேஷ் குமாருடனான நேர்காணலில் குறிப்பிட்டார். 

நிகழ்ச்சியில் சிறப்புரை ஆற்றிய டாக்டர் செல்லக்கிருஷ்ணன், வ.வே.சுப்பிரமணியத்தின் எழுத்தில் தொடங்கி இதுவரை வெளிவந்த கம்பராமாயண ஆங்கில மொழிபெயர்ப்புகளை நினைவூட்டினார். இவற்றில் பெரும்பாலானவை கடினமான நடையில், முழு வடிவில் வந்தவை என்று அவர் குறிப்பிட்டார். ஆனால், டாக்டர் சந்திரிகா தொகுத்துள்ள குறுநூல் தமது இலகு நடையால் தனித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

பல பொருள் அடுக்குகளைக் கொண்ட சொற்றொடர்களை, உவமைகளை இந்நூல் பிரித்து ஆராய்ந்துள்ளதாகவும் அவர் பாராட்டினார். அவரையடுத்துப் பேசிய முனைவர் இரத்தின வேங்கடேசன், நூலிலிருந்து பல மேற்கொள்களைக் காட்டினார். 

பல்கலைக்கழக மாணவர்கள் நால்வர் இந்நூல் குறித்த கருத்துகளை இரு மொழிகளிலும் முன்வைத்தனர். உலக அரங்கில் தமிழின் பெருமையைப் பறைசாற்றும் திருக்குறள், திருவாசகம் முதலியவற்றின் ஆங்கில மொழிபெயர்ப்புகளைக் குறிப்பிட்டு, மேற்கத்திய தாக்கம் அதிகமுள்ள சூழலில் தமிழில் இயற்றப்பட்ட கம்பராமாயணம் மொழிபெயர்க்கப்படுவது நமது பண்பாட்டையும் மரபையும் இன்னும் உயரப் பறக்கச் செய்யும் என்றார் சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழக மாணவி வைஷ்ணவி கண்ணன், 20.

குறிப்புச் சொற்கள்