நண்பர்களுடன் சுமுகமான வெளிநாட்டுப் பயணம்

2 mins read
4c025b3f-698f-4512-945f-a427d674ee47
படம்: - பிக்சாபே
multi-img1 of 2

வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்வது பலருக்கு இன்பமளித்தாலும் சில நேரங்களில் அது உறவுகளின் முறிவுக்கும் காரணமாக அமைந்திடலாம்.

குறிப்பாக, நெருங்கிய நண்பர்களாக வெளிநாடு சென்றுவிட்டு வீட்டிற்கு முறிந்த நட்புடன் திரும்புவது சிரமமான ஒரு சூழலே.

ஒருவருடன் வெளிநாடு செல்லும்போதுதான் அவரது உண்மையான குணம் வெளிப்படுகிறது என்று பலர் கூறக் கேட்டிருப்போம்.

இவ்வாறு நெருக்கமான நண்பர்களுடன் வெளிநாடு செல்ல விரும்புவோர், கவனத்தில் கொள்ளக்கூடிய சில குறிப்புகளைக் காணலாம்.

இடம், செலவு

ஒரு நண்பர் செல்ல விரும்பும் இடம், இன்னொரு நண்பர் ஏற்கெனவே சென்ற இடமாக இருக்கலாம். அதனால், இருவரும் கலந்துரையாடி அவர்களுக்கு நேரக்கூடிய செலவுகளைப் பட்டியலிடலாம்.

அனைவராலும் அதிகச் செலவில் பயணம் மேற்கொள்ள முடியாது. ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்துத் திட்டமிடுதலே சிறந்தது. பயணம் மேற்கொள்ளும் முன்னர் திட்டமிடும் கட்டத்திலேயே மனக்கசப்பு ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

சமரசத்திற்குத் தயார்

ஒவ்வொருவருக்கும் பயண இலக்கு வெவ்வேறாக இருக்கும். ஒரு சிலர் தங்களது பரபரப்பான வாழ்க்கைச் சூழலிலிருந்து விடுபட வெளிநாடு செல்வார்கள். துடிப்பான சிலர் வெளிநாட்டுக்குச் சென்று வீரதீர நடவடிக்கைகளில் ஈடுபட விரும்புவார்கள்.

வெவ்வேறு பயண இலக்கு கொண்ட இரு நெருங்கிய நண்பர்கள் வெளிநாடு செல்லும்போது அற்ப காரணங்களுக்காக சண்டை போட்டுக்கொள்ளக்கூடாது. நண்பர் ஒருவருக்கு ஒரு நடவடிக்கையில் ஈடுபட விருப்பம் இருந்தால் அதைப் புரிந்துகொண்டு இன்னொரு நண்பர் செயல்பட வேண்டும்.

தொடர்புடைய செய்திகள்

விருப்பங்களை அறிந்திருந்தல்

நண்பர்கள் ஒன்றாகப் பயணம் மேற்கொண்டால் அவர்கள் எந்நேரமும் ஒன்றாகத்தான் இருக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. சில நேரங்களில் நண்பர்களிடமிருந்து பிரிந்து அவரவருக்குப் பிடித்தமான நடவடிக்கைகளில் ஈடுபடலாம். அப்போது நண்பர்களுக்கிடையே விரிசலும் ஏற்படாது.

சரிசமம்

வெளிநாட்டுப் பயணங்களுக்கு அப்பாற்பட்டு சாதாரணமாக நண்பர்களுடன் வெளியே செல்லும்போது ஒன்றுக்கான கட்டணத்தைச் செலுத்துவதில் சிக்கல் எழலாம். எடுத்துக்காட்டாக, உணவகத்திற்குச் சாப்பிடச் செல்லும்போது ஒருவர் மொத்த செலவையும் ஏற்றுக்கொள்ளலாம்.

ஆனால், உண்ட உணவுக்கு அந்தந்த நபர்கள் பணம் தருவதுதான் பொறுப்பான செயல். தங்களின் பங்கைத் தராது இருந்தால் அது நட்பு முறிவில் கொண்டு போய்விடலாம்.

புரிந்துணர்வு

வெளிநாட்டுப் பயணம் என்பதால் காலையில் விரைவாக எழுந்திருக்க வேண்டும். உடனடியாக இடங்களைச் சுற்றிப்பார்க்க வேண்டும் என்பதில்லை.

நண்பருக்குச் சோர்வாக இருந்து அவர் தாமதமாக எழ விருப்பப்பட்டால் மற்றவர்கள் அதைப் புரிந்துகொள்ள வேண்டும்.

திட்டமிடுதல் முக்கியம்

வெளிநாட்டுக்குச் செல்லும்போது முடிந்தளவு நண்பரின் மனம் புண்படாமல் நடந்துகொள்வது சிறந்தது. ஒரே அறையில் தங்கியிருக்கும்போது ஒருசில கூறுகளில் நண்பர்கள் இடையே கருத்து வேறுபாடு ஏற்படலாம்.

ஒருவர் இரவில் வெளியே செல்லலாம் என்பார்; மற்றொருவர் இரவில் வெளியே செல்வதைத் தவிர்க்க எண்ணலாம்.

அதனால், திட்டமிட்ட பயணமே அனைவருக்கும் சுமுகமானதாக அமைந்திடும்.

குறிப்புச் சொற்கள்