தீபாவளி போன்ற பண்டிகைக் காலங்களில் தங்க நகை வணிகம் சூடுபிடிப்பது வழக்கம்.
ஆனால், தங்கத்தின் விலை புதிய உச்சத்தைத் தொட்டதைத் தொடர்ந்து இவ்வாண்டு தீபாவளி வணிகம் குறைந்து காணப்பட்டதாகப் பல நகைக்கடைகள் தமிழ் முரசிடம் பகிர்ந்துகொண்டன.
“சென்ற ஆண்டு தீபாவளியுடன் ஒப்பிடுகையில் தங்க விலையேற்றத்தினால் இவ்வாண்டு தீபாவளி வணிகம் 60 முதல் 70 விழுக்காடு குறைந்துள்ளது. இன்றைய தலைமுறையினரும் அதிக எடையுள்ள நகைக்குப் பதிலாக குறைந்த எடையிலான நகைகளையே விரும்புகின்றனர்,” என்றார் அணிமணி பொற்சாலை மேலாளர் கும்பலிங்கம் சுதாகர், 46.
“தங்க விலை ஏற்ற இறக்கமாக உள்ளதால் வணிகம் மந்தமாகத்தான் உள்ளது. ஆயினும், கடந்த சில நாள்களில் காணப்பட்ட விலைச்சரிவால் பலரும் பழைய நகைகளைக் கொடுத்து புதிய நகைகளை வாங்க வந்துள்ளனர்,” என்றார் ஜிஆர்கே கோல்டு பேலஸ் நகைக்கடையின் விற்பனை மேலாளர் ஆர் ரமேஷ் பாபு, 47.
தொடர் ஏற்றமும் திடீர்ச் சரிவும்
தங்க விலை வரலாறு காணாத அளவில் கூடியதைத் தொடர்ந்து, தக்க நேரத்தில் லாபம் ஈட்ட முதலீட்டாளர்கள் தங்கத்தை அதிக அளவில் விற்றனர்.
அதனால், கடந்த சில நாள்களாகவே தங்கத்தின் விலை சற்று சரிவுகண்டது.
இதைக் கவனித்த வாடிக்கையாளர்கள் சிலர், இது தங்க நகைகளை வாங்குவதற்கான சிறந்த நேரம் என்று உணர்ந்து, அவ்வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்டனர்.
அவ்வகையில், தங்களின் மகனின் திருமணத்திற்காகத் தாலி வாங்க ஏபிஜே அபிராமி ஜுவல்லரி நகைக்கடைக்குச் சென்றனர் திரு கருணா ராமநாதன், 61 - திருமதி ஜேனட் அனிருதன், 61, இணையர்.
தொடர்புடைய செய்திகள்
“இந்த நாளில் தாலி வாங்க வேண்டும் என்று முன்னதாகத் திட்டமிட்டிருந்தோம். தற்செயலாகவும் நல்வாய்ப்பாகவும் தங்க விலை சற்று இறங்கியதில் எங்களுக்கு மிக்க மகிழ்ச்சி,” என்றார் திருமதி ஜேனட்.
பெரும்பாலும் திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகளுக்குத் தங்க நகை வாங்கும் போக்கைச் சுட்டிய திரு கருணா, “திருமணத்திற்குத் தங்கம் வாங்குவது ஒரு கட்டாயம். அந்தப் பண்பாட்டு நடைமுறைக்கு கட்டுப்பட்டு வாங்கவேண்டியதாக உள்ளது. இல்லாவிடில், தங்கம் விலையேறியதால் எங்களுக்குத் தங்கம் வாங்க வேண்டிய தேவை இருந்திருக்காது,” என்றார்.
வரவிருக்கும் கார்த்திகை மாதத்தை முன்னிட்டு, திருமணத்திற்குத் தாலி போன்ற தங்க நகைகளை வாங்கும் பலர், விலையேற்றத்தைப் பொருட்படுத்தாமல் அதிக விலைகொடுத்து வாங்கும் நிலை நிலவுகிறது.
“மக்களிடையே ஒருவித பதற்றம் இருக்கிறது. தொடர்ந்து தங்க விலை கூடுமோ எனும் அச்சம் நிலவுகிறது. அதனால், சலுகைகள், தள்ளுபடிகளை அறிவித்துத்தான் வாடிக்கையாளர்களை ஈர்க்கிறோம். ஆனால், வாடிக்கையாளர்கள் பெரும்பாலும் தங்கள் பழைய தங்கத்தை விற்றே புதிய நகையை மாற்றிக்கொள்கிறார்கள்,” என்றார் டிஎம்ஒய் ஜூவல்லர்ஸ் கடையின் சில்லறை வர்த்தக மேலாளர் நூருல் ஹக், 28.
இதனிடையே, சில நாள் விலைச் சரிவு தங்களது வணிகத்திற்கு அவ்வளவு பயனளிக்கவில்லை என்று பகிர்ந்துகொண்ட சில கடைகளில் ஏபிஜே அபிராமி ஜுவல்லரியும் ஒன்று.
“விலைச் சரிவுடன் ஒப்பிடுகையில் விலையேற்றம் அதிகம் என்பதால் விற்பனையில் அதிக மாற்றம் இல்லை,” என்றார் அதன் மேலாளர் பாலாஜி ராகவன், 40.
தங்கக் கட்டி, நாணய விற்பனை அதிகரிப்பு
பழைய நகையைக் கொடுத்து புதிய நகையை வாங்குவது, அணிகலன்களுக்குப் பதிலாகத் தங்கக் கட்டிகளையோ தங்க நாணயங்களையோ வாங்குவது போன்ற பல மாற்றுவழிகளை வாடிக்கையாளர்கள் தெரிவுசெய்யும் போக்கு கூடியுள்ளது.
தங்கக் கட்டிகள் வாங்கும் போக்கு அதிகரித்துள்ளதைச் சில கடைகள் சுட்டின.
“தங்கத்தின் விலை கூடினாலும், எதிர்பார்த்ததைவிட முதலீட்டுக்காக வாடிக்கையாளர்கள் தங்கக் கட்டிகளையும் தங்க நாணயங்களையும் தெரிவுசெய்கிறார்கள். செய்கூலி இல்லாதது ஒரு காரணமாக இருக்கிறது,” என்றார் ஜோயாலுக்காஸ் நகைக்கடையின் விற்பனை நிர்வாகி ரேவதி குணசேகரன், 42.

