தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

தம்பி ராஜாவுக்கு ‘நல்ல நேரம்’

3 mins read
661c576c-e331-4fa2-83c5-c3ac17de4aa8
‘லூயி விட்டோன்’ அணிந்திருக்கும் யங் ராஜா. - படம்: யங் ராஜா
multi-img1 of 3

நமக்கான நல்ல நேரம் வரும்போது அனைத்துமே கைகூடி வரும்.

யங் ராஜா, பஞ்சாபி இசைக்கலைஞரான பிரப் தீப்புடன் இணைந்து படைத்துள்ள ‘நல்ல நேரம்’ எனும் இசைக் காணொளி, செவ்வாய்க்கிழமை (பிப்ரவரி 25) வெளியீடு கண்டது.

தயாரிப்பாளர் ஷோர்யா, சக கலைஞரான பிரப் தீப் இருவருடனும் பாடலுக்கு என்ன தலைப்பு வைக்கலாம் என்று கலந்துரையாடியபோது ‘நல்ல நேரம்’ என்று மனத்தில் தோன்றியதாகக் கூறினார் யங் ராஜா.

இணையத்தில் அந்தச் சொற்களைத் தேடியபோது, ‘ஆடுங்கடா தம்பி ராஜா’ என்ற வாசகத்துடன் பழைய எம்ஜிஆர் திரைப்படச் சுவரொட்டியைக் காண நேர்ந்தது மெய்சிலிர்க்க வைத்ததாக அவர் சொன்னார்.

குடும்பத்தார் இவரைத் ‘தம்பி’ என்று செல்லமாக அழைப்பர். எனவே, இப்பாடலுக்கு வைக்கவேண்டிய பெயர் இதுதான் என்று பிரபஞ்சமே உறுதிசெய்ததுபோல் இருந்தது என்றார் அவர்.

நல்ல நேரம் திரைப்படச் சுவரொட்டி.
நல்ல நேரம் திரைப்படச் சுவரொட்டி. - படம் : இணையம்

கடந்த ஜனவரி மாதம் பாரிசில் நடைபெற்ற ‘லூயி விட்டோன்’ ஆண்கள் ‘ஃபேஷன் வீக்’கில் இலையுதிர்கால-குளிர்கால நிகழ்ச்சிக்கு யங் ராஜா சிறப்பு அழைப்பைப் பெற்றிருந்தார்.

‘இண்டோ’, ‘ஹிப்ஹாப்’ கலாசாரக் கூறுகளைத் தழுவிய ஆடை அலங்காரத்தை விரும்பும் யுங் ராஜா, பாரிஸ் ஆடை அலங்கார வார நிகழ்ச்சிக்கும் அழைக்கப்பட்டிருந்தார்

‘லூயி விட்டோன்’, ‘கம்ம டி கர்சோன், (Comme des Garçons), அமிரி (Amiri) போன்ற ஆடம்பரப் பொருள் நிறுவனங்கள் கலந்துகொண்ட அந்த நிகழ்ச்சியில் ஃபேரல் வில்லியம்ஸ் உள்ளிட்ட நட்சத்திரங்களும் பங்கேற்றனர்.

நான்கு ஆண்டுகளாக ‘லூயி விட்டோன்’ நிறுவனத்துடன் இணைந்து பணியாற்றுவதாகக் கூறிய யங் ராஜா, அந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டது மூலம் தனது நீண்டநாள் கனவு நனவானதாகக் கூறினார்.

“அந்த நிகழ்ச்சியில் பங்குகொண்ட ஒரே தமிழர், சிங்கப்பூரைப் பிரதிநிதித்தது போன்ற அம்சங்களுக்கு மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன்,” என்றார் ராஜா.

இருப்பினும், தன்னைத் தானே குறைத்து எடை போடும் மனப்போக்கு அவ்வப்போது கவ்விக்கொள்வதாக ராஜா கூறுகிறார்.

ஆடை அலங்காரம் என்பது ஒருவரது வளர்ச்சியில் முக்கிய அங்கம் வகிப்பதாக அவர் நம்புகிறார்.

“காலப்போக்கில் ​​என் இசைத்திறனுடன் நான் உடுத்தும் உடைகளின் அழகும் மேம்பட்டுள்ளது. எளிய ஆடைகளை அணிந்து வளர்ந்த என்னிடம், அம்மா எப்போதும் கூறும் ‘ஆள் பாதி, ஆடை பாதி’ என்ற சொற்கள் இன்றும் மனத்தில் ஒலிக்கின்றன,” என்றார் அவர்.

புது இசை, புதுப் பார்வை

இந்த ஆண்டை ஓர் ஆக்கபூர்வமான ஆண்டாக அமைத்துக்கொள்ள யங் ராஜா விரும்புகிறார். உலகளாவிய இசையில் தமிழுக்கான பிரதிநிதித்துவம் இருக்கவேண்டும் என்பது இவரது ஆசை மட்டுமன்றி, கொள்கையாகவும் உள்ளது.

“திரைப்படங்கள், விளம்பரங்கள் என, இயன்ற எல்லா வழிகளிலும் படைப்பூக்கத்தை வெளிப்படுத்த விரும்புகிறேன். தமிழ்க் கலாசாரம் உலகின் மூலை முடுக்கெல்லாம் சென்றடைய வேண்டும் என விரும்புகிறேன்,” என்றார்.

தமிழ் இளையர்கள் தங்கள் தமிழ் அடையாளத்தைத் துணிச்சலுடன் வெளிப்படுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

‘நல்ல நேரம்’ என்ற அவரது அண்மைய பாடல், தமிழ் மற்றும் பஞ்சாபி கலாசார ஒத்துழைப்புகளை முன்னிலைப்படுத்துவது மட்டுமல்லாமல், உலகளாவிய இசையில் தென்கிழக்காசியக் கலைஞர்களின் புத்தாக்க வரம்பையும் விரிவுபடுத்துகிறது.

உலகெங்கிலும் உள்ள தமிழ்ப் படைப்பாளிகளுக்கான களத்தை மாற்றியமைக்கும் கலாசார சக்தியாக உருப்பெற வேண்டும் என்பது யங் ராஜாவின் விருப்பம்.

குறிப்புச் சொற்கள்